ஒரே
ஆண்டில் (1978) 20 படங்கள்!
இரவு - பகலாக நடித்தார்
1978-ல் ரஜினிகாந்த் மிக `பிசி'யாக இருந்தார். இரவு - பகலாக
ஓய்வில்லாமல் நடித்தார். காலையில் விமானம் மூலம் பெங்களூர் சென்று
படத்தில் நடித்துவிட்டு, மாலையில் விமானம் மூலம் சென்னை திரும்பி,
தொடர்ந்து படத்தில் நடித்தார்.
1978-ல், ரஜினி நடித்து வெளிவந்த படங்கள் 20. அவற்றின் விவரம்:-
1. சங்கர் சலீம் சைமன்
2. கில்லாடி கிட்டு (கன்னடம்)
3. அன்னதம்முல சவால் (தெலுங்கு)
4. ஆயிரம் ஜென்மங்கள்
5. மாத்து தப்பித மகா (கன்னடம்)
6. மாங்குடி மைனர்
7. பைரவி
8. இளமை ஊஞ்சலாடுகிறது
9. சதுரங்கம்
10.வணக்கத்துக்குரிய காதலியே
11. வயது பிலிசிந்தி (தெலுங்கு)
12. முள்ளும் மலரும்
13. இறைவன் கொடுத்த வரம்
14. தப்புத்தாளங்கள்
15. தப்பித தாளா (கன்னடம்)
16. அவள் அப்படித்தான்
17. தாய் மீது சத்தியம்
18. என்கேள்விக்கென்ன பதில்
19. ஜஸ்டிஸ் கோபிநாத்
20. ப்ரியா
மாங்குடி மைனர்
10-3-1978-ல் வெளிவந்த "ஆயிரம் ஜென்மங்கள்'' படத்துக்குப் பிறகு
வெளிவந்த ரஜினியின் படம் "மாங்குடி மைனர்.''
ஆயா கிரியேஷன்ஸ் தயாரிப்பான இந்தப் படத்தின் திரைக்கதை, வசனம்,
டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளை வி.சி.குகநாதன் ஏற்றிருந்தார்.
இதில் கதாநாயகனாக - எம்.ஜி.ஆர். ரசிகனாக - விஜயகுமார் நடித்தார்.
ரஜினி முக்கிய வேடத்தில் நடித்தார். மற்றும் ஸ்ரீபிரியா,
எம்.என்.ராஜம், சகுந்தலா ஆகியோர் நடித்தனர்.
குகநாதன் அனுபவம்
இந்தப்படம் தயாரானபோது ஏற்பட்ட அனுபவம் பற்றி டைரக்டர் குகநாதன்
கூறியதாவது:-
"இந்தியில் வெளியான `ராம்பூர்-கா-லட்சுமண்' என்ற படத்தை பார்த்தேன்.
அதில் சத்ருகன் சின்கா புதுமாதிரியாக நடித்திருந்தார். அந்தக்
கதையைத் தமிழில் தயாரித்து, அதில் ரஜினி நடித்தால் சிறப்பாக
இருக்கும் என்று எண்ணினோம்.
அதன்படி, அந்தக் கதையை வாங்கி, "மாங்குடி மைனர்'' என்ற பெயரில்
தயாரித்தோம்.
அதுவரை வில்லனாகவும், ஆன்டி ஹீரோவாகவும் நடித்து வந்த ரஜினி, முதன்
முதலாக ஆக்ஷன் வேடத்தில் நடித்தார்.
இரவு பகலாக நடித்தார்
இந்த காலக்கட்டத்தில் ஏராளமான படங்களில் ரஜினி நடித்து வந்தார்.
எங்களுக்கு 17 நாட்கள் `கால்ஷீட்' கொடுத்திருந்தார். அதில் 8
நாட்களை மற்ற படங்களுக்கு ஒதுக்க நேர்ந்தது. எங்களுக்கு கிடைத்தது
9 நாட்கள்தான்.
ரஜினி, சிரமம் பாராமல் இரவு பகலாக நடித்தார். அப்போது `மாங்குடி
மைனர்' படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. காலை, விமானம் மூலமாக
ஐதராபாத்துக்கு வருவார். பகல் முழுவதும் நடிப்பார். மாலை 7 மணிக்கு
விமானம் மூலம் சென்னைக்குத் திரும்புவார். அங்கு இரவில் "இளமை
ஊஞ்சலாடுகிறது'' படப்பிடிப்பு நடக்கும். அதில் விடிய விடிய
நடிப்பார்.
எங்களுக்கு அவர் கொடுத்த 9 நாள் கால்ஷீட்டில், அவர் சம்பந்தப்பட்ட
எல்லா காட்சிகளையும் நடித்துக் கொடுத்தார். பட அதிபர்களுக்கு
எவ்வித சிரமமும் ஏற்படக்கூடாது என்பதற்காக, தன்னை வருத்திக்கொள்ள
தயங்காதவர், ரஜினி''
இவ்வாறு குகநாதன் கூறினார்.
பிற மொழிகள்
முதன் முதலாக ரஜினி நடித்தது தமிழ்ப்படம் (அபூர்வ ராகங்கள்)
என்றாலும், அவருடைய `ஸ்டைல்' தென்னாட்டு ரசிகர்கள் அனைவரையும்
கவர்ந்தது.
தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல்வேறு மொழிகளிலும்
நடிக்கும்படி கேட்டு, பட அதிபர்கள் அவர் வீட்டில் முற்றுகையிட்டனர்.
யாருக்கு கால்ஷீட் கொடுப்பது என்று ரஜினி திணறினார்.
இந்தக் காலக்கட்டத்தில், இந்தியாவிலேயே மிகவும் `பிசி'யான நடிகர்
ரஜினிதான்!
>>> Part 17
|