கதாநாயகனாக
நடித்த முதல் படம் - "பைரவி''
கலைஞானம் தயாரித்த படம்
ரஜினியின் கலைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க படம் "பைரவி''. அதுவரை
பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் ரஜினி நடித்திருந்தாலும், தனி
ஹீரோவாக நடித்த முதல் படம் "பைரவி''. கலைஞானம் கதை எழுதி,
வள்ளிவேலன் மூவிஸ் சார்பில் தயாரித்த படம்.
வசனத்தை மதுரை திருமாறன் எழுதினார். இளையராஜா இசை அமைக்க,
எம்.பாஸ்கர் டைரக்ட் செய்தார். பாடல்களை கண்ணதாசனும்,
சிதம்பரநாதனும் எழுதினர்.
ரஜினியுடன் ஸ்ரீபிரியா, ஸ்ரீகாந்த், சுருளிராஜன், மனோரமா, ஒய்.விஜயா
நடித்தனர்.
கலைஞானம் பேட்டி
ரஜினிகாந்துடன் ஏற்பட்ட அனுபவம் பற்றி கலைஞானம் கூறியதாவது:-
"நான் `ஆறுபுஷ்பங்கள்' படத்துக்கு கதை-வசனம் எழுதிக்கொண்டிருந்தபோது,
தயாரிப்பாளரும், டைரக்டர் கே.எம்.பாலகிருஷ்ணனும் எனக்கு ஒரு
கண்டிஷன் போட்டார்கள். படம் எடுத்து முடியும்வரை கூடவே இருக்க
வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.
அதற்கு ஒப்புக்கொண்டேன். இதனால் ஷூட்டிங் நடைபெறும்போதெல்லாம்
நானும், ரஜினிகாந்த் அவர்களும் நெருக்கமாக பழக நேர்ந்தது. இரண்டாவது
ஹீரோவாக ரஜினிகாந்த் நடித்தார்.
நீண்ட வசனம் பேசும்போதெல்லாம் அவர் சற்று சிரமப்படுவது எனக்கு
தெரியவந்தது. வசனத்தை வாங்கி, சற்று குறைக்க முற்படுவேன். அப்போது
ரஜினிகாந்த் "கலைஞானம் சார்! எப்படியும் பேசிவிடுவேன். வசனத்தை
குறைக்க வேண்டாம்!'' என்பார்.
அதே போல தனியாக அமர்ந்து பலமுறை பேசிப்பேசி பழகி, ஒரே டேக்கில் "ஓகே''
செய்து விடுவார்.
`முடியாது' என்பதே அவருடைய அகராதியில் இல்லை.
ஹீரோ
ரஜினியின் வித்தியாசமான நடிப்பைப் பார்த்து என் மனதுக்குள்ளேயே ஒரு
திட்டம் போட்டேன். `ரஜினியை ஹீரோவாக போட்டு நாம் ஏன் ஒரு படம்
எடுக்கக் கூடாது?' என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். அந்த எண்ணம்
ஒரு நாள் நிறைவேறியது. அதுதான் அவர் முதல் முறையாக ஹீரோவாக நடித்த
"பைரவி.''
ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்று, "நான் முதன் முறையாக தயாரிக்க
இருக்கும் படத்தில், நீங்கள்தான் ஹீரோவாக நடிக்க வேண்டும்'' என்றேன்.
அவர் மகிழ்ச்சி அடைந்தார். `கதை என்ன?' என்று கேட்டார். உடனே கதையை
சொன்னேன்.
அவருக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. "நாளைக்கு வந்து அட்வான்ஸ்
கொடுக்கிறேன்'' என்று சொல்லிவிட்டு புறப்பட்டேன்.
மறுநாள் எப்படியோ சமாளித்து ரூ.5 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்தேன். அவர்
அதைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சிப் பெருக்கோடு, என் கையைப் பிடித்து
குலுக்கினார். உடனடியாக அவருடைய நண்பர் நடராஜ் அவர்களை அழைத்து, "கலைஞானம்
சார் கேட்கிற தேதிகளை குறித்துக்கொள்ளுங்கள்'' என்றார். அதன்படி
நடராஜ் கால்ஷீட் தேதிகள் கொடுத்தார்.
அதன் பிறகு ஸ்ரீபிரியாவிடமும் கால்ஷீட் வாங்கி இருவர் பெயர்களையும்
குறிப்பிட்டு, வியாபாரம செய்து முடித்தேன்.
பூஜைக்கு முன்பே வியாபாரம்
இதில் அதிசயம் என்னவென்றால், பூஜைக்கு முன்பே விநியோகஸ்தர்களிடம்
கதை சொல்லியே வியாபாரம் செய்து விட்டேன்.
முதலில் இளையராஜா இசையில் பாடல் பதிவு நடந்தது. முதல் பாடல், `நண்டூறுது,
நரிறுது' என்ற பாடல். அந்தப் பாடலை டி.எம்.சவுந்தரராஜன் பாடினார்.
ஏதோ ஒரு படப்பிடிப்பிலிருந்த ரஜினி, இந்தப் பாடலைக் கேட்பதற்காகவே
ஏவி.எம்.ஸ்டூடியோவுக்கு வந்தார். டி.எம்.சவுந்தரராஜன் பாடுவதை
கேட்டு மெய்மறந்து என் கையை பிடித்துக்கொண்டு, "கலைஞானம் சார்!
டி.எம்.எஸ். பாடி, அதை படத்தில் நான் பாடி நடிப்பேன் என்று
நினைத்துக்கூட பார்த்ததில்லை!'' என்று பெருமகிழ்ச்சியுடன் கூறினார்.
1978 ஜனவரி 14-ந்தேதி படப்பிடிப்பு ஆரம்பமானது. அவருடைய ஷாட்
முடிந்ததும் எங்கேயாவது ஒரு மூலையில் தூசியாக இருந்தாலும், கிழிந்த
சோபாவாக இருந்தாலும் போய் படுத்துக்கொள்வார். அவரிடம் பந்தா
கிடையாது. தனக்கு இன்ன இன்ன வசதி வேண்டும் என்று கேட்கமாட்டார்.
சாப்பாடு என்ன கொடுத்தாலும் சந்தோஷமாக சாப்பிடுவார்.
சதா சிந்தித்துக்கொண்டே இருப்பார். `ஹீரோவாக நடிக்கிறோம். இதில்
எப்படியும் வெற்றி பெறவேண்டும்' என்பதே அந்த சிந்தனை. அனாவசியமாக
பேசமாட்டார். பேசினாலும் இரண்டே வார்த்தைகள்தான்.
பாராட்டு குவிந்தது
1978 ஜுன் 2-ந்தேதி படம் வெளியானது. ராஜகுமாரி தியேட்டரில் மாட்னி
ஷோ. பத்திரிகையாளர்களையும் அழைத்துப் பார்க்க வைத்தேன். இடைவேளையில்
ரஜினிகாந்த் வந்தார். பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் அவரை
வானளாவப் பாராட்டினார்கள்.
நானும், டைரக்டர் எம்.பாஸ்கரும் ஒரு ஓரத்தில் நின்று, இதையெல்லாம்
பார்த்து ரசித்துக்கொண்டிருந்தோம்.
பட அதிபர் சின்னப்பதேவர் என்னைப் பாராட்டியதோடு, `எப்படியாவது
ரஜினிகாந்திடம் சொல்லி என் கம்பெனி படத்தில் நடிக்கச் செய்' என்றார்.
`நீங்களே அவருக்குப் போன் செய்யுங்கள்' என்றேன். அதேபோல், தேவர்
கம்பெனி போன் ரஜினிகாந்த் வீட்டில் ஒலித்த ஐந்து நிமிடத்தில் தேவரை
வந்து பார்த்து, அவரிடம் ஆசி பெற்றார். தேவர், ரஜினியை மிகவும்
பாராட்டி, "இரண்டு படம் எனக்கு செய்து கொடுங்கள்'' என்று கூறி
அட்வான்ஸ் கொடுத்தார்.
நாளுக்கு நாள் புகழ், பொருள் அனைத்திலும் பெரும் வளர்ச்சி கண்ட
ரஜினி, தர்ம சிந்தனையிலும் வளர்ச்சி பெற்று வருகிறார். `வலது கை
கொடுப்பது இடது கைக்குத் தெரியாது' என்பார்கள். ரஜினிகாந்த்
கொடுக்கும் தர்மம், இரண்டு கைகளுக்குமே தெரியாது.
`உதவி' என்று யாராவது கேட்டால், கேட்டவர் வீட்டிற்கு உதவி வந்து
சேரும்.
சிறு வயதில், அவர் பட்ட கஷ்டங்கள் கணக்கில் அடங்காது. அதுவே அவரை
பக்குவப்படுத்தி, அவரை கருணை உள்ளத்தோடும், மனித நேயத்தோடும் வாழ
வைத்துக்கொண்டிருக்கின்றன.''
இவ்வாறு கலைஞானம் கூறினார்.
>>> Part 18
|