திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்''
தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்
மகேந்திரன் டைரக்ஷனில் ரஜினிகாந்த் நடித்த "முள்ளும் மலரும்'' படம்
மிகச்சிறந்த படமாகவும் மாபெரும் வெற்றிப் படமாகவும்
அமைந்தது.ஸ்ரீதரின் "இளமை ஊஞ்சலாடுகிறது'' படத்துக்குப்பிறகு, துரை
டைரக்ஷனில் "சதுரங்கம்'' படத்தில் ரஜினி நடித்தார். இதில் அவருக்கு
புதுமையான வேடம். பெண்களைக் கண்டாலே கூச்சப்படும் சுபாவம். அதே
சமயம் குடும்ப கவுரவத்தை கட்டிக்காக்கும் நல்லவர்.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடி பிரமிளா.
ஸ்ரீகாந்தும், ஜெயசித்ராவும் இன்னொரு ஜோடி.
கதை-வசனத்தை விசு எழுதினார்.
30-6-1978-ல் வெளிவந்த இந்தப்படம் வெற்றிகரமாக ஓடியது.
வணக்கத்துக்குரிய காதலியே
ரஜினியின் அடுத்த படம் "வணக்கத்துக்குரிய காதலியே.'' டைரக்டர்
ஏ.சி.திருலோகசந்தர் சொந்தமாகத் தயாரித்து இயக்கிய படம்.
எழுத்தாளர் ராஜேந்திரகுமார் எழுதிய நாவல்தான், அதே பெயரில்
படமாகியது. வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார்.
விஜயகுமார், ஸ்ரீதேவி பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.
14-7-1978-ல் வெளிவந்த இப்படம், நடுத்தரமாக ஓடியது.
முள்ளும் மலரும்
இதன்பின் 1978 சுதந்திர தினத்தன்று வெளிவந்த "முள்ளும் மலரும்'',
மெகா ஹிட் படமாக அமைந்தது.
அண்ணன் - தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாக சிவாஜியும்,
சாவித்திரியும் நடித்த "பாசமலர்'' எப்படி ஒரு வாடா மலராக
விளங்குகிறதோ, அதேபோல ரஜினியும், ஷோபாவும நடித்த "முள்ளும் மலரும்''
ஒரு குறிஞ்சி மலராக போற்றப்படுகிறது.
நாவல் போட்டி ஒன்றில், எழுத்தாளர் உமா சந்திரன் எழுதி முதல் பரிசு
பெற்றதுதான் "முள்ளும் மலரும்.'' அதற்கு திரைக்கதை - வசனம் எழுதி
இயக்கினார், "தங்கப்பதக்கம்'' புகழ் மகேந்திரன்.
கதை இதுதான்:
இளமையிலேயே தாய் - தந்தையரை இழந்த ரஜினி, கழைக் கூத்தாடியாக
வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் `டிராலி' டிரைவராக உயர்கிறார்.
அவருடைய ஒரே தங்கை ஷோபா. தங்கை மீது உயிரையே வைத்திருக்கிறார்,
ரஜினி.
அந்த ஊருக்கு புதிதாக வரும் என்ஜினீயர் (சரத்பாபு), கண்டிப்பானவர்.
அவர், ரஜினியை வேலையை விட்டு நீக்கி விடுகிறார். இதனால் ஆத்திரம்
அடையும் ரஜினி, அளவுக்கு மீறி குடிக்கிறார். அதனால், விபத்தில்
சிக்கி, ஒரு கையை இழக்கிறார்.
ரஜினியிடம் அடைக்கலம் தேடி வரும் `படாபட்' ஜெயலட்சுமி, அவரை
மணக்கிறார்.
இதற்கிடையே சரத்பாபுவுக்கும், ஷோபாவுக்கும் காதல் ஏற்படுகிறது.
சரத்பாபுவை தன் எதிரியாக நினைக்கும் ரஜினி, இந்தக் காதலை ஏற்கவில்லை.
வேறு மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கிறார்.
திருப்பம்
அண்ணன் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தாலும், சரத்பாபுவை மணக்க
தீர்மானிக்கிறார், ஷோபா.
சரத்பாபுவுக்கும், ஷோபாவுக்கும் ஒரு கோவிலில் திருமணம் நடைபெற
இருக்கிறது.
கல்யாணத்துக்கு சில நிமிடங்களே இருக்கும்போது, ஷோபா மனம் மாறி
ரஜினியிடம் ஓடி வருவார். "அண்ணா! நீதான் எனக்கு வேண்டும'' என்று
கதறுவார்.
தங்கை தன் மீது கொண்டிருக்கும் ஆழமான பாசத்தைக் கண்டு நெகிழ்ந்து
போவார், ரஜினி.
சரத்பாபுவுக்கும், ஷோபாவுக்கும் திருமணத்தை நடத்தி வைப்பார்.
அற்புத நடிப்பு
இந்தப்படத்தில் ரஜினியின் நடிப்பு அற்புதமாக அமைந்தது. "சூப்பர்
ஸ்டார்'' பட்டத்துக்கு ஏற்ப, காளி என்ற கதாபாத்திரமாக வாழ்ந்து
காட்டினார்.
ஷோபாவின் நடிப்பும் மிகச்சிறப்பாக அமைந்தது.
சரத்பாபு, `படாபட்' ஜெயலட்சுமி ஆகியோரும், பாத்திரத்தை உணர்ந்து
நடித்தனர்.
பாலசந்தர் பாராட்டு
"முள்ளும் மலரும்'' படத்தில் ரஜினியின் நடிப்பைப் பார்த்த டைரக்டர்
பாலசந்தர் பிரமித்துப்போனார்.
உடனடியாக ரஜினிக்கு பாராட்டுக் கடிதம் எழுதினார். அக்கடிதத்தை ஒரு
பொக்கிஷமாக இன்றும் பாதுகாத்து வருகிறார், ரஜினி.
மகத்தான வெற்றி
மகேந்திரன், ஏற்கனவே சிவாஜியின் "தங்கப்பதக்கம்'' படத்துக்கு வசனம்
எழுதியிருந்தாலும், டைரக்ட் செய்த முதல் படம் "முள்ளும்
மலரும்.''இந்தப்படம், தரத்தில் மிக உயர்ந்ததாக விளங்கியது. வெள்ளி
விழாப் படமாகவும் அமைந்தது.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா. படப்பிடிப்பு,
மேல்நாட்டுப்படங்களுக்கு இணையாக விளங்கியது.
இசை அமைத்தவர் இளையராஜா. கண்ணதாசன், பஞ்சு அருணாசலம், கங்கை அமரன்
ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர்.
"செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்'', "நித்தம் நித்தம்
நெல்லுச்சோறு'', "ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்....'' உள்பட
எல்லாப் பாடல்களும் இனிமையாக ஒலித்தன.
"முள்ளும் மலரும்'', பல பரிசுகளை வென்றது. "காலத்தால் அழிக்க
முடியாத காவியம்'' என்று ரசிகர்களாலும், விமர்சகர்களாலும்
போற்றப்படும் படங்களில் ஒன்று "முள்ளும் மலரும்.''
>>> Part 21
|