மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில்
ரஜினி
`தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்
டைரக்டர் கே.பாலசந்தரால் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட
ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டாராக உயர்ந்த பிறகு பாலசந்தரின் டைரக்ஷனில்
நடித்த படம் "தப்புத்தாளங்கள்.''
"முள்ளும் மலரும்'' படத்திற்குபின் ரஜினி நடித்த படம் ஏ.பீம்சிங்
டைரக்ஷனில் உருவான "இறைவன் கொடுத்த வரம்.''
இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஆர்.பாலகிருஷ்ணன்
எழுதியிருந்தார்.
ரஜினிகாந்துடன் விஜயகுமார், ஸ்ரீகாந்த், சோ, சுமித்ரா, படாபட்
ஜெயலட்சுமி, ஜெயதேவி, எம்.பானுமதி ஆகியோர் நடித்திருந்தனர்.
22-9-1978-ல் வெளியான இப்படம், பெரிதாக வெற்றிபெறவில்லை.
தப்புத்தாளங்கள்
டைரக்டர் பாலசந்தர் 1978-ல் "தப்புத்தாளங்கள்'' என்ற கதையை
உருவாக்கி, தமிழிலும், கன்னடத்திலும் ஒரே சமயத்தில் தயாரிக்க முடிவு
செய்தார்.
அதில் பிரதான கதாபாத்திரமான ரவுடி கேரக்டரில், ரஜினியை நடிக்க
வைக்க எண்ணினார். அதே சமயத்தில், "ரஜினி இப்போது மிக உயர்ந்த
உயரத்துக்குப்போய் விட்டார். நிறைய படங்களில் நடித்துக்கொண்டு
இருக்கிறார். கால்ஷீட் கிடைக்குமோ, கிடைக்காதோ?'' என்ற சந்தேகமும்
இருந்தது.
ஆயினும், அவர் ரஜினிக்கு போன் செய்ததும், தப்புத்தாளங்களில் நடிக்க
மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.
படப்பிடிப்பு ஆரம்பமாயிற்று. கதாநாயகியாக (தாசி வேடத்தில்) சரிதா
நடித்தார். தமிழில் இதுதான் அவருக்கு முதல் படம்.
பாலசந்தர் தயக்கம்
ரஜினியை முதன் முதலாக அறிமுகப்படுத்தியதுடன், மூன்று படங்களில்
நடிக்க வைத்தவர், பாலசந்தர். அந்தக் காலக்கட்டத்தில் ரஜினியை அவர்
ஒருமையில் அழைப்பது வழக்கம். "டேய், சிவாஜி! இங்கே வா!''
என்றெல்லாம் அழைத்திருக்கிறார்.
"இப்போது ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராகி விட்டார். அவரை முன்போல்
ஒருமையில் அழைக்கலாமா! அவர் அதை தவறாக எண்ணுவாரா? நடிப்பில்
திருப்தி இல்லாவிட்டால், மீண்டும் `டேக்' எடுக்கலாமா? கண்டித்து
திருத்தலாமா?'' என்றெல்லாம் இப்போது பாலந்தர் எண்ணினார்.
தன் மனதில் உள்ள சந்தேகத்தை ரஜினியிடம் சொன்னார். அதைக்கேட்டதும்,
ரஜினிகாந்த் விழுந்து விழுந்து சிரித்தார்.
"என்ன சார் சொல்றீங்க! இந்த வாழ்க்கை நீங்க போட்ட பிச்சை! என்னை
திருத்தவோ, கண்டிக்கவோ மட்டுமல்ல, அடிக்கக்கூட உரிமை உள்ள ஒரே
டைரக்டர் நீங்கள்தான்! என்னைப்போய் இப்படி வித்தியாசமாக நினைக்கலாமா
சார்!'' என்றார், ரஜினி. அப்போது அவர் கண்களில் நீர் துளிர்த்தது.
பாலசந்தரும் கண்கலங்கிவிட்டார்.
"ரஜினி, மை பாய்! நீ என்றைக்கும் என்னுடைய ரஜினியாகவே இருப்பது
கண்டு நிஜமாகவே ரொம்பப் பெருமைப்படுகிறேன்'' என்றார்,
நெகிழ்ச்சியுடன்.
இந்தப் படத்தில் முரட்டுத்தனமான கேரக்டரில் ரஜினி திறமையாக
நடித்தார். சரிதா நடிப்பும் சிறப்பாக இருந்தது.
கன்னட "தப்பித தாளா'' 6-10-1978-லும், தமிழ் "தப்புத் தாளங்கள்''
30-10-1978-லும் வெளியாயின. படம் "பிரமாதம்'' என்று சொல்லும்படி
அமையாவிட்டாலும், ரசிக்கும்படி இருந்தது. இந்தப் படத்திற்காக,
சிறந்த வசன கர்த்தா விருது, பாலசந்தருக்குக் கிடைத்தது.
அவள் அப்படித்தான்
தயாரிப்பாளர், டைரக்டர் ருத்ரையாவின் "அவள் அப்படித்தான்'' படத்தில்,
ரஜினி, கமல் இணைந்து நடித்தனர். ஸ்ரீபிரியா, சரிதா ஆகியோர் இடம்
பெற்றனர்.
இந்தப் படத்தில் ஒரு விசேஷம். இதில் நடித்த அனைவரும் "மேக்கப்''
இல்லாமல் நடித்தனர்.
30-10-1978 அன்று வெளிவந்த இப்படம் "வித்தியாசமான படம்'' என்று
புகழ் பெற்றது.
தேவர் படத்தில் ரஜினி
சாண்டோ சின்னப்ப தேவர் படத்தில் எம்.ஜி.ஆர். தொடர்ந்து நடித்து
வந்தார். முதல்- அமைச்சரான பிறகு, படங்களில் நடிப்பதை நிறுத்திக்
கொண்டார்.
எனவே, ரஜினிகாந்தை வைத்து படங்களைத் தயாரிக்க தேவர் முடிவு செய்தார்.
தேவரின் "தண்டாயுதபாணி பிலிம்ஸ்'' பேனரில் ரஜினி நடித்த முதல் படம்
"தாய் மீது சத்தியம்.'' இதில் ரஜினிகாந்தின் ஜோடியாக ஸ்ரீபிரியா
நடித்தார்.
வசனத்தை தூயவன் எழுத, சங்கர்-கணேஷ் இசை அமைத்தனர். தேவரின் மருமகன்
ஆர்.தியாகராஜன் டைரக்ட் செய்தார்.
தேவர் மறைவு
படம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், ஒரு பாடல் காட்சியை படமாக்க
தேவரும் மற்றவர்களும் ஊட்டிக்குச் சென்றனர்.
அங்கு தேவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை ஊட்டியிலிருந்து
கோவைக்கு அழைத்துச் சென்றனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி
8-9-1978 அன்று தேவர் மரணம் அடைந்தார்.
அதன் பிறகு, மீதி இருந்த காட்சிகளை படமாக்கி, 1978 தீபாவளி அன்று
படத்தை ரிலீஸ் செய்தனர்.
தேவருக்காக ரஜினி நடித்த முதல் படமான "தாய் மீது சத்தியம்''
வெற்றிப்படமாக அமைந்து, நூறு நாட்களைக் கடந்து ஓடியது.
தேவர் பிலிம்ஸ்சில் எப்படி எம்.ஜி.ஆருக்கு ஒரு நிரந்தர இடம்
இருந்ததோ, அதே மாதிரியான நிரந்தர இடத்தை ரஜினி பெற்றார்.
>>> Part 23
|