ரஜினிகாந்துக்கு
தீவிர சிகிச்சை
தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு
ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில்
சேர்க்கப்பட்ட தகவல், தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
1979 மார்ச் 11-ந்தேதியன்று விஜயா நர்சிங் ஹோமில் ரஜினி
சேர்க்கப்பட்டார்.
அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள், "நல்லவேளை, சரியான நேரத்தில்
கொண்டு வந்தீர்கள். இன்னும் 10 நாட்கள் இப்படியே விட்டு
வைத்திருந்தால், பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும'' என்று
கூறினார்கள்.
பரபரப்பு
ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செய்தி,
தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. திரை உலகத்தில்
அதுபற்றித்தான் பேச்சு.
"சீக்கிரம் சரியாகி விடுவார். முன்போலவே, சுறுசுறுப்பாக நடிப்பார்''
என்று பலர் நினைத்தாலும், ஒருசிலர் "அவர் கதை அவ்வளவுதான். இனி
அவரால் நடிக்க முடியாது'' என்றார்கள்.
ஆனாலும், அவர் விரைவில் குணம் அடையவேண்டும் என்று நல்ல உள்ளங்கள்
பிரார்த்தனை செய்தன.
ஓய்வு எடுக்காமல், இரவு - பகலாக உழைத்ததுதான் இந்த பாதிப்புக்குக்
காரணம் என்பதை டாக்டர்கள் மட்டுமல்ல, ரஜினியுடன் பழகியவர்களும்
கூறினார்கள்.
சுஜாதா
ரஜினிகாந்த் நடித்த "ப்ரியா'' படத்தின் கதாசிரியரான பிரபல
எழுத்தாளர் சுஜாதா கூறியதாவது:-
"ப்ரியா'' படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் எனக்குப் பழக்கமானார்.
அப்போது அவர் உச்சியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார். இருந்தும் என்னை
விமானத்திலோ, படப்பிடிப்பிலோ சந்தித்தால் தனியாக மதிப்புக்
கொடுத்துப் பேசிக் கொண்டிருப்பார். நான் சொல்வதைக் கவனமாகக்
கேட்பார்.
ரஜினிகாந்துக்கு தற்காலிக "நெர்வ்ஸ் பிரேக் டவுன்'' (நரம்பு மண்டல
பாதிப்பு) ஏற்பட்ட காரணங்களை, அப்போதே என்னால் அடையாளம் கண்டு
கொள்ள முடிந்தது.
பெங்களூரில் இரவு எட்டரை மணிக்குப் பாலசந்தர் படத்தின்
படப்பிடிப்பில் (தப்புத்தாளங்கள் என்று நினைக்கிறேன்) சைக்கிள்
செயின் சுழற்றிக் கொண்டிருக்கிறார்.
எட்டு நாற்பத்தைந்துக்கு, ஏணியை விலக்குவதற்கு இரண்டு நிமிஷம்
முன்னால் பெங்களூரில் விமானம் ஏறி, சென்னை போய், அங்கேயிருந்து
ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மற்றொரு பிளேன் பிடித்து சிங்கப்பூர்
போய், அதிகாலையில் அங்கே `ப்ரியா' சூட்டிங். மூன்று நாள் கழித்துத்
திரும்பிப் பெங்களூர் வந்து சைக்கிள் செயின் சுழற்றி விட்டு மறுபடி
சிங்கப்பூர்! இந்த மாதிரி அலைந்தால் ஒரு திபேத்திய லாமாவுக்குக்கூட
"நெர்வ்ஸ் ப்ரேக் டவுன்'' வந்து விடும்.''
இவ்வாறு சுஜாதா கூறினார்.
பஞ்சு அருணாசலம்
ரஜினியின் திரையுலக முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும் பஞ்சு
அருணாசலம் அப்போது ஒரு பேட்டியில் கூறியதாவது:-
"உடல் நலம் சரி இல்லாதபோதும், படப்பிடிப்பை ரத்து செய்யாமல்
நடித்தவர் ரஜினி. இதற்காக அவரை நான் கடிந்து கொண்டது உண்டு.
அப்போதெல்லாம், "சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற வேண்டாமா சார்!
தூக்கம் என்ன வேண்டிக் கிடக்கிறது!'' என்பார்.
தயாரிப்பாளர், டைரக்டர்களின் மனதை வருத்தக்கூடாதே என்று தன் உடலை
வருத்திக்கொண்டார்.
ஓய்வே இல்லாமல் நடித்ததால்தான் அவருக்கு இந்நிலை ஏற்பட்டது.
அவரைப்போல் பரபரப்பான - சுறுசுறுப்பான நடிகரைப் பார்ப்பது அபூர்வம்.''
இவ்வாறு பஞ்சு அருணாசலம் கூறினார்.
>>> Part 26
|