"இருண்ட
காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்
ரஜினிகாந்த் உடல் நலமும், மன நலமும் பாதிக்கப்பட்டிருந்த காலக்
கட்டத்தை, "இருண்ட காலம்'' என்று டைரக்டர் கே.பாலசந்தர்
குறிப்பிட்டார்.
ரஜினிகாந்தின் திரையுலகப் பிரம்மாவான டைரக்டர் பாலசந்தர், ரஜினிக்கு
அந்த கறுப்பு நாட்களில் ஏற்பட்ட குழப்பத்தைப் பற்றியும், நரம்புத்
தளர்ச்சி பற்றியும் அவ்வப்பொழுது கூறியவை வருமாறு:-
மாற்றங்கள்
"தப்புத்தாளங்கள் படத்திற்கு அடுத்த படம் `நினைத்தாலே இனிக்கும்.'
அதன் படப்பிடிப்பு முடியும் தறுவாயில், நான் ரஜினிகாந்திடம் பல
மாற்றங்களைக் கண்டேன். அதை ஓர் "இருண்ட காலம்'' என்றே சொல்வேன்.
ரஜினிகாந்த் புது வீட்டிற்குக் குடியேறியிருந்தபோது, என்னை
அழைத்திருந்தார். அவ்வளவு பெரிய வீட்டில் என் புகைப்படத்தை மட்டும்
பெரியதாக மாட்டி வைத்திருந்தார்.
அந்தப் படத்தை திடீர் என்று ஒரு நாள் கழட்டி எறிந்திருக்கிறார். `அதை
ஏன் கழட்டிவிட்டீர்கள்' என்று யாரோ கேட்டிருக்கிறார்கள். `இந்தப்
புகழுக்கெல்லாம் பாலசந்தர்தானே காரணம்' என்று உதவியாளர்களிடம்
சத்தம் போட்டிருக்கிறார். ரஜினியின் நண்பர் வீட்டில் என்னிடம் வந்து
சொல்லி `ஏன் இப்படியெல்லாம் வினோதமாகச் செயல்படுகிறார் என்று
புரியவில்லை. நீங்கள் வந்து அவரிடம் கொஞ்சம் பேசுங்கள்' என்றும்
சொன்னார்.
குழந்தை போல அழுதார்
ரஜினியை சந்தித்து நான் கேட்டேன்.
ரஜினி சொன்னார்: "நிம்மதியாக ஒரு கண்டக்டராக இருந்த சிவாஜி ராவை,
நீங்கதானே ரஜினிகாந்தாக ஆக்கினீங்க? திடீர்னு வந்த புகழ் போதையைத்
தாங்கிக்கக் கூடிய சக்தி எனக்கில்லை சார்'' என்று தேம்பித் தேம்பி
ஒரு குழந்தையைபோல் அழுதார். அவரது பேச்சு தொடர்பில்லாமல் இருந்தது.
ரஜினியை அந்த சூழ்நிலையில் பார்த்த என் கண்கள் கலங்கின.
நினைத்தாலே இனிக்கும் படத்தின் டப்பிங் ஏ.பி.என் தியேட்டரில் நடந்து
கொண்டிருந்தது. ரஜினிகாந்த் டப்பிங் பேச மறுப்பதாக என் உதவி
டைரக்டர் கண்மணிசுப்பு, எனக்கு போன் செய்தார். நான் உடனே அங்கு
சென்று ரஜினியை தனியே அழைத்து, "ஏன் டப்பிங் பேச மறுக்கிறீர்கள்?''
என்று கேட்டேன்.
"கால் முடமானவனை ஓடச்சொல்லி வேடிக்கை பார்ப்பது ஆறறிவு படைத்த
மனிதன் செய்கிற வேலையா? உடல் நலம் குன்றி இருக்கும் ஒரு மனிதனிடம்
வேலை வாங்குவது நியாயமா?'' என்று சொன்னார்.
இப்படியெல்லாம் ரஜினி என்னிடம் பேசமாட்டார். மனநிலை
சரியில்லாமல்தான், இப்படியெல்லாம் பேசுகிறார் என்று புரிந்து
கொண்டேன்.
உடனே டப்பிங்கை கேன்சல் செய்துவிட்டு, டாக்டர் ஆர்.எஸ்.ராஜகோபால்
அவர்களிடம் அழைத்துச் சென்றேன்.
இடைவிடாத உழைப்பால் அதிக அளவில் ரத்த அழுத்தம் இருப்பதாகக் கூறி,
ஓய்வெடுத்துக் கொள்ளும்படி கூறினார் டாக்டர். வெலிங்டன்
மருத்துவமனையில் சேர்த்து கண்டிப்பாக ஒரு வாரம் ஓய்வு எடுக்க
வேண்டும் என்று சொல்லி, தினம் காலையிலும் மாலையிலும் சென்று அவரைப்
பார்த்துவிட்டு வந்தேன். அவர் அங்கே இருப்பது யாருக்கும் தெரியாமல்
வைக்கப்பட்டது.
இந்த நேரத்தில் பலர் பலவிதமாகப் பேசினார்கள். இத்தோடு அவர் வாழ்க்கை
அஸ்தமித்துவிட்டது என்றும், அவரது பெயரைக்கூட சொல்லாமல் சிலர் `மெண்டல்'
என்று குறிப்பிடுகின்ற துர்பாக்கியமான நிலைமை ஏற்பட்டிருந்தது.
ரஜினியின் நலனில் அக்கறையுள்ளவர்கள் என்று பலர் கூறிக்கொள்ளலாம்.
அவர்களெல்லாம் என்ன சொன்னார்கள் என்பது என் காதுகளுக்கு மட்டும்
கொண்டு வரப்பட்ட விஷயங்கள்.
ஐ.வி. சசி அவர்கள் கமலஹாசனையும், ரஜினியையும் வைத்து "அலாவுதீனும்
அற்புத விளக்கும்'' என்ற திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருந்தார்.
மிகப்பெரிய செட் போட்டு, நெப்டின் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு
நடத்த ஏற்பாடு செய்திருந்தார். படப்பிடிப்பு அன்று ரஜினி
ஸ்டூடியோவுக்கு சென்று மேக்கப்பும் போட்டுக்கொண்டார்.
ஷாட் ரெடியானதும் ரஜினியை உடை மாற்றிக்கொள்ளச்
சொல்லியிருக்கிறார்கள். ரஜினி மறுத்துவிட்டார். எல்லோரும் போய்
கேட்டிருக்கிறார்கள். யார் சொல்லியும் அவர் கேட்கவில்லை. கமலஹாசனும்,
நூற்றுக்கணக்கான ஜுனியர் ஆர்டிஸ்ட்களும் காத்திருக்கிறார்கள்.
டைரக்டர் ஐ.வி. சசிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. எனக்கு போன்
செய்தார். "யார் சொல்லியும் ரஜினி கேட்க மறுக்கிறார். இன்றோடு செட்
பிரிக்கப்பட வேண்டும். இங்கு ஸ்டூடியோவிற்கு வந்துவிட்டு
போகமுடியுமா?'' என்று அழாக்குறையாகக் கேட்டார். நானும் உடனே போனேன்.
ரஜினியை மேக்கப் அறையில் சந்தித்தேன். `ஏன் ரஜினி! டிரஸ் போட்டுக்க
வேண்டாமா? ஷாட் ரெடியா இருக்குல்ல!' என்று நான் சற்று அதட்டிச்
சொல்வது போல் சொன்னதும், டிரஸ் போட ஆரம்பித்தார்.
ஐ.வி.சசியிடம் சென்று, "ரஜினி டிரஸ் போட்டுகிட்டிருக்காரு. இன்னும்
5 நிமிடத்துலே வந்துடுவாரு. அப்ப நான் கிளம்பவா?'' என்று கேட் டேன்.
ஐ.வி.சசி அவர்கள் கெஞ்சாத குறையாக, "அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ
நீங்களும் இங்கேயே இருந்துட்டுப்போங்க. நான் அதுக்குள்ள கமலோட
இருக்கிற காம்பினேஷன் ஷாட் எல்லாம் எடுத்து முடிச்சுக்கிறேன்''
என்று சொன்னார். அவரைப் பார்த்தால் பாவமாக இருந்தது. சரியென்று
ஒப்புக்கொண்டேன்.
படப்பிடிப்பு நடக்க ஆரம்பித்தது. அது கத்திச்சண்டை காட்சி. நானும்
பார்வையாளராக உட்கார்ந்து கொண்டே இருந்தேன். ஐ.வி.சசி அவர்களும் மள
மளவென்று ஷாட்டுகளை எடுத்துக்கொண்டே இருந்தார். மதிய உணவுக்காக
விடுகின்ற `பிரேக்' வரையில் இருந்துவிட்டு, நான் வந்துவிட்டேன்.
ஸ்ரீபிரியா வேண்டுகோள்
இந்தக் காலக்கட்டத்தில்தான் ஒரு முன்னணி நடிகை என் வீட்டிற்கு
வந்தார். "சார்! உங்கள் ஒருவரால்தான் ரஜினிகாந்தைச் சரியான
பாதைக்குத் திருப்ப முடியும். ஒரு நல்ல நடிகரை தமிழ்த் திரைக்கு
அளித்தீர்கள். ரஜினிகாந்தின் இழப்பைத் தடுக்க நீங்கள்தான் முயற்சி
எடுக்கவேண்டும்'' என்று மனம் விட்டுப் பேசினார்.
`கதை முடிந்தது' என்று பலர் முடிவுரை எழுதிக்கொண்டிருந்தபோது, அது
தொடர்கதை ஆகவேண்டும் என்று விரும்பும் ஒரு நல்ல உள்ளமும் இருக்கிறதே
என்று அறிந்ததும் என் கண்களில் நீர் திரையிட்டது. அவர்தான் நடிகை
ஸ்ரீபிரியா. அவரது உயர்ந்த உள்ளத்துக்கு நான் தலை வணங்குகிறேன்.
மேஜர் சுந்தரராஜன், பாலாஜி, நாகேஷ் ஆகியோரோடு கலந்தாலோசித்து, விஜயா
நர்சிங் ஹோமில் ரஜினியை சேர்த்தோம். டாக்டர் செரியனின்
கண்காணிப்பில் 15 நாள் பரிபூரண ஓய்வெடுத்துக் கொண்டதால் நலம்
பெற்றார், ரஜினிகாந்த்!
ரஜினிகாந்த் போன்ற கலைஞர்களை இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒரு
முறைதான் காணமுடியும். கைநழுவ இருந்த ஒரு கலைஞனை, திரைப்பட உலகம்
திரும்பப் பெற்றதில் நான் பூரிப்பும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.''
இவ்வாறு பாலசந்தர் அன்று கூறியிருக்கிறார்.
>>> Part 27
|