|
சூரியனை மறைத்த
கிரகணம் நீங்கியது!
புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி
ஓயாத உழைப்பினால்
உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற
ரஜினிகாந்த், நன்றாக குணம் அடைந்து, புதுப்பொலிவுடன் மீண்டும்
நடிக்கத் தொடங்கினார்.
எதையும் எரித்து பஸ்பமாக்கிவிடக்கூடிய சூரியனையே, கிரகணம் பிடித்து
விடுகிறது! ஆயினும் சில மணி நேரம்தான். பிறகு கிரகணத்தின்
பிடியிலிருந்து சூரியன் விடுபட்டு மீண்டும் பிரகாசிக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினியையும் கிரகணம் கவ்வியது. ஆனால், சில
நாட்களிலேயே கிரகணத்தின் பிடியில் இருந்து விடுபட்டு, மீண்டும்
வெற்றி பவனி வரத்தொடங்கினார், ரஜினி.
படப்பிடிப்பு இடையில் நின்று போன படங்களை எல்லாம்
முடித்துக்கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து ரஜினியின் படங்கள், வரிசையாக வெளிவரத்தொடங்கின.
நினைத்தாலே இனிக்கும்
கமலும், ரஜினியும் இணைந்து நடிக்க, கே.பாலசந்தரின் திரைக்கதை, வசனம்,
டைரக்ஷனில் உருவான "நினைத்தாலே இனிக்கும்'' படம், 1979
தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் (14-4-1979) வெளிவந்தது.
எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து, மசாலாத்தனம்
இல்லாமல், இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம் இது.
பிரேமாலயா வெங்கட்ராமன் தயாரித்த இந்தப்படத்தில், ஜெயப்பிரதா,
ஜெயசுதா, கீதா, பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோரும் நடித்திருந்தனர். இசை:
எம்.எஸ்.விஸ்வநாதன். பாடல்கள்: கண்ணதாசன், கண்மணிசுப்பு.
படத்தின் பெரும்பகுதி சிங்கப்பூரில் படமாக்கப்பட்டது.
கதை இதுதான்:
இசைக்குழு ஒன்றை நடத்துபவர், கமல். அதில் கிடார் வாசிப்பவர் ரஜினி.
இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
மர்ம மங்கை
இந்த இசைக்குழுவினர், 10 நாட்கள் இசை நிகழ்ச்சி நடத்த
சிங்கப்பூருக்கு செல்கிறார்கள். போகும்போது ஒரு மர்ம மங்கையை (ஜெயப்பிரதா)
சந்திக்கிறார், கமல்.
அந்த மர்ம மங்கை, இரண்டுவிதமான தோற்றங்களில் வந்து கமலை குழப்புவார்.
கேட்டால், "நான் அவள் இல்லை'' என்பார். சமயத்துக்கு தக்கபடி அவர்
பொய் பேசுவதாக கமல் நினைப்பார். ஆனாலும் அவரை காதலிப்பார்.
இடையிடையே ஜெயப்பிரதாவை ஒரு "பயங்கர மனிதன்'' துரத்துவது போன்ற
தோற்றம் வந்து போகும்.
பல திருப்பங்களுக்குப்பின், உண்மை வெளிப்படும்.
ஜெயப்பிரதாவுக்கு ரத்தப்புற்று நோய். சில நாட்களில்
இறந்துவிடக்கூடிய நிலையில் இருப்பவர். கடைசி காலத்தை சந்தோஷ மாகக்
கழிக்க விரும்புவதாகக் கூறி, கமலின் இசைக்குழுவில் சேருகிறார்.
பல ஊர்களுக்குச் சென்று இசை நிகழ்ச்சி நடத்தும்போது, ஒருமுறை
ரத்தவாந்தி எடுப்பார். அவரை பரிசோதிக்கும் டாக்டர்கள், "உங்கள்
ஆயுள் இன்னும் மூன்று நாட்கள்'' என்று கூறுவார்கள்.
இதை அறியும் கமல், தன் தாயார் முன்னிலையில் ஜெயப்பிரதாவை மணந்து
கொள்வார். இருவரும் சந்தோஷமாக வாழ்வார்கள். பிறகு, ஜெயப்பிரதாவை
துரத்திக்கொண்டிருந்த "பயங்கர மனிதனிடம்'' (மரணம்) அவர்
சிக்கிவிடுவார்.
ரஜினி காமெடி
இந்தப் படத்தில் ரஜினியின் பங்களிப்பு கணிசமானது. ஓட்டல்களிலும்,
பக்கத்தில் இருப்பவர்களிடமும் சின்னச்சின்ன பொருள்களை (கண்ணாடி,
ஸ்பூன், மதுபாட்டில் போன்றவற்றை) திருடுவது அவர் காரக்டர். நிறைய
தமாஷ் செய்வார்.
ஒருநாள், அவருக்கு ஒரு ஆடியோ டேப் வரும். அதில், "அன்பரே! உங்களைக்
கண்டதும் காதல் கொண்டேன். என்னை சந்திக்க வருகிறீர்களா?'' என்று ஒரு
பெண் பேசுவாள். முகவரியை, தெளிவில்லாமல் பதிவு செய்திருப்பாள்.
ரஜினி, அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க டேப் ரிக்கார்டருடன்
சிங்கப்பூர் முழுவதும் அலைவார். கடைசியில் அந்தப் பெண்ணைக்
கண்டுபிடிப்பார். அவள் ஒரு "லூஸ்'' என்று அறிந்து அதிர்ச்சி அடைவார்.
சிகரெட்டை தூக்கிப்போட்டு உதட்டில் பிடிக்கும் ரஜினி ஸ்டைல் ரொம்பப்
பிரபலமானது, இந்தப் படத்தில்தான். அவர் ஸ்டைலைப் பார்த்த பூர்ணம்
விஸ்வநாதன், "தொடர்ந்து இப்படி 10 முறை சிகரெட்டைத் தூக்கிப்போட்டு
பிடிக்க முடியுமா? அதில் நீ ஜெயித்தால், ஒரு காரை பரிசளிக்கிறேன்''
என்று சவால் விடுவார்.
ரஜினி அந்த சவாலை ஏற்றுக்கொள்வார்.
"பந்தயத்தில் வெற்றி பெற்றால் உனக்கு கார். தோற்றுவிட்டால், நீ
உன்னுடைய சுண்டு விரலை வெட்டிக்கொடுத்து விடவேண்டும்!'' என்று
பூர்ணம் விஸ்வநாதன் பயமுறுத்துவார்.
"வந்தால் ஒரு கார்! போனால் ஒரு விரல்தானே!'' என்று நண்பர்கள்
உற்சாகப்படுத்தியதால், சிகரெட்டை தூக்கிப்போட்டுப் பிடிக்க
ஆரம்பிப்பார், ரஜினி. 9 முறை வெற்றிகரமாக இப்படி செய்து விடுவார்.
பிறகு, அவருடைய சுண்டு விரல் அவரை பயமுறுத்தும். "சார்! உங்களுக்கு
கார் முக்கியம். எனக்கு விரல் முக்கியம். யாருக்கும் வெற்றி தோல்வி
இல்லாமல் போட்டியை இதோடு முடித்துக் கொள்வோமே!'' என்று கூறிவிடுவார்!
அதாவது, தமாஷ் வேடம் என்பதால் காட்சி இப்படி முடிந்தது! இன்று இந்த
மாதிரி காட்சி அமைக்கப்பட்டால், ரஜினி 10 தடவை என்ன, 100 தடவை கூட
சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடித்து விடமாட்டாரா!
"மன்மதன் வந்தானா, நம்ம சங்கதி சொன்னானா?'', "யாதும் ஊரே யாவரும்
கேளிர்'', "சயோனரா'', "இனிமை நிறைந்த உலகம் இருக்கு'', "பாரதி
கண்ணம்மா'' உள்பட எல்லாப் பாடல்களும் ஹிட்.
ரஜினிக்காக, எம்.எஸ்.வி. பாடிய "சம்போ... சிவசம்போ...!'' பாடல் வெகு
பிரபலம்.
பாலசந்தரின் நுட்பமான டைரக்ஷன், கமல் - ரஜினி ஆகியோரின் நடிப்பு,
இனிமையான பாடல்கள், கண்ணுக்கு குளிர்ச்சியான சிங்கப்பூர் காட்சிகள்
ஆகியவற்றால், படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.
>>> Part 28
| |