யானைகளுடன்
ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்'
சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி
தேவர் பிலிம்ஸ்
தயாரித்த "அன்னை ஓர் ஆலயம்'' படத்தில் ரஜினிகாந்த், யானைகளுடன்
நடித்தார். இந்தப் படத்தில் ஒரு காட்சியில், ஒரு சிறுத்தையை தோள்
மீது போட்டுக்கொண்டு நடப்பார், ரஜினி!
சாண்டோ சின்னப்ப தேவர் மறைவுக்குப்பின், அவர் மகன் சி.தண்டாயுதபாணி
"தேவர் பிலிம்ஸ்'' பேனரில் படங்களைத் தயாரித்தார்.
தேவரின் கதை
தேவர் பிலிம்ஸ் படங்களுக்கான கதைகளை பெரும்பாலும் தேவரே
உருவாக்குவது வழக்கம். யானைகளை வைத்து அவர் எழுதி வைத்திருந்த கதை
"அன்னை ஓர் ஆலயம்.'' அதை தண்டாயுதபாணி, படமாக எடுத்தார்.
வசனத்தை தூயவன் எழுதினார். படத்தை, தேவரின் மருமகன் ஆர்.தியாகராஜன்
டைரக்ட் செய்தார்.
இதில் ரஜினியும், ஸ்ரீபிரியாவும் ஜோடியாக நடித்தனர். ரஜினியின்
அம்மாவாக அஞ்சலிதேவி நடித்தார். மற்றும் ஜெயமாலினி, மோகன்பாபு,
மேஜர் சுந்தர்ராஜன், அசோகன், தேங்காய் சீனிவாசன், நாகேஷ்,
சுருளிராஜன் ஆகியோர் நடித்தனர்.
பாடல்களை வாலி எழுத, இளையராஜா இசை அமைத்தார்.
கதை
மிருகங்களுக்கும் தாய்ப்பாசம் உண்டு என்பதை சித்தரிக்கும் கதை.
இதில், வேட்டைக்காரராக ரஜினி நடித்திருந்தார். காட்டுக்குள்
தைரியமாகச் சென்று, மிருகங்களைப் பிடித்து அவற்றை சர்க்கஸ்
கம்பெனிகளுக்கு விற்பது அவரது வேலை.
தாயிடம் இருந்து குட்டி மிருகங்களை தந்திரமாகப் பிடித்து விற்பனை
செய்து விடுவார்.
இப்படி தாய் மிருகங்களிடம் இருந்து குட்டிகளைப் பிரிப்பது அவர்
அம்மா அஞ்சலிதேவிக்குப் பிடிக்கவில்லை. அவர் ரஜினியிடம், "மிருகங்களுக்கு
தாய்ப்பாசம் அதிகம். அதனால், தாயிடம் இருந்து குட்டிகளைப்
பிரிக்காதே'' என்று கேட்டுக்கொள்வார்.
ரஜினியோ, "மிருகங்களுக்காவது, தாய்ப்பாசமாவது!'' என்று
சிரித்துக்கொண்டு போய்விடுவார்.
இந்நிலையில், ஒரு தாய் யானையிடம் இருந்து குட்டி யானையைப் பிரித்து,
சர்க்கஸ் கம்பெனிக்கு விற்று விடுவார். விஷயம் தெரிந்ததும், "உன்
தாயை பிரியும்போதுதான் அந்த வேதனை உனக்குத் தெரியும்'' என்று
ரஜினியிடம் கூறுவார், அஞ்சலிதேவி.
சில நாட்களிலேயே அப்படியொரு விபரீதம் நடக்கிறது. காட்டில் மகனைத்
தேடிவந்த தாயாரை, ஏற்கனவே குட்டியை பிரிந்த சோகத்தில் இருந்த தாய்
யானை துரத்துகிறது. தாயின் கூக்குரல் கேட்டு ரஜினி தாயைக்
காப்பாற்ற ஓடிவருவார். வரும் வழியில் மிருகங்களை பிடிக்க
வைத்திருந்த `பொறி'யில் மாட்டிக்கொள்வார்.
அவரது கண்ணெதிரிலேயே அஞ்சலிதேவியை தன் துதிக்கையால் தூக்கி
வீசியெறிகிறது, யானை. மரணத் தறுவாயில் அஞ்சலிதேவி, "மகனே! இந்த தாய்
யானையிடம் அதன் குட்டியை கொண்டு வந்து சேர்த்துவிடு!'' என்று
ரஜினியிடம் சொல்லிவிட்டு உயிரை விடுகிறார்.
தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்ய குட்டி யானையை விற்ற சர்க்கஸ்
கம்பெனிக்கு ஓடுவார், ரஜினி. ஆனால் அதற்குள் அந்த குட்டி யானை
வேறொரு சர்க்கஸ் கம்பெனிக்கு கொடுக்கப்பட்டு விடுகிறது. இதனால்
குட்டி யானை இருந்த கம்பெனியை தேடிப்போய் அதை மீட்கிறார்,ரஜினி.
ஆனால் குட்டி யானை, அவரைப் பார்த்து பயந்து ஓட்டம் பிடிக்கிறது.
ரஜினியும் விடாமல் அதைப் பிடித்து, அதற்கு தான் எதிரி எல்ல என்பதை
நம்ப வைக்கிறார். கடைசியில், அதை காட்டுக்கு அழைத்துச்சென்று தாய்
யானையுடன் சேர்த்து வைக்கிறார். முடிவில் தாய் யானை, குட்டி யானை
இரண்டும், துதிக்கையை தூக்கி ரஜினியை ஆசீர்வதித்து விட்டுப் போகும்.
அப்போது தன் தாயே தன்னை ஆசீர்வதிப்பதாக எண்ணி மகிழ்வார், ரஜினி.
சினிமா தியேட்டரில் யானை
இந்தப் படத்தில் ரஜினி, யானைக்குட்டி சம்பந்தப்பட்ட அத்தனை
காட்சிகளும் கலகலப்பானவை.
ரஜினியிடம் இருந்து தப்பி ஒரு சினிமா தியேட்டருக்குள் நுழையும்
யானைக்குட்டி, அங்கே திரையில் `நல்ல நேரம்' படத்தில் யானைகள்
வருகிற காட்சியை பார்த்து திரையை கிழிப்பது, பிறகு ரஜினி வந்து
குட்டி யானையை அடக்குவது போன்ற காட்சிகளை குழந்தைகள் குதூகலமாக
ரசித்தார்கள்.
இளையராஜா இசையில் "அப்பனே அப்பனே பிள்ளையாரப்பனே'', "நதியோரம்'', "அம்மா
நீ சுமந்த பிள்ளை'' போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன.
சிறுத்தை
இந்தப் படத்தில் சிறுத்தை ஒன்றை சர்வ சாதாரணமாக தோளில் தூக்கிப்
போட்டபடி நடப்பார், ரஜினி.
இந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது, "மிருகங்களின் குணம் ஒவ்வொரு
நேரத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். குறிப்பாக சிறுத்தை
விஷயத்தில் நாம் ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே `டூப்'
போட்டுக்கொள்ளுங்கள்'' என்று ரஜினியிடம், மிருகங்களை பழக்கும் `மாஸ்டர்'
கூறினார்.
ஆனால் ரஜினியோ, `டூப்' போடவில்லை. அவராகவே சர்வசாதாரணமாக சிறுத்தையை
தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு நடந்து
போனார்.சாதாரணமாக, இரண்டு பேர் சேர்ந்து தூக்கும் அளவுக்கு எடை
கொண்டது அந்த சிறுத்தை. அதை, தன்னந்தனி ஆளாக அதுவும் அநாயாசமாக
ரஜினி தூக்கியதைப் பார்த்து, படப்பிடிப்பில் இருந்த அத்தனை பேரும்
ஆச்சரியத்தில் திகைத்துப் போனார்கள்.
19-10-1979 அன்று "அன்னை ஓர் ஆலயம்'' வெளியாயிற்று. ரசிகர்களின்
கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திரையரங்குகள் திணறின. படம் நூறு
நாட்களை தாண்டி ஓடியது.
இதே படம் "மா'' என்ற பெயரில் இந்தியிலும் தயாரிக்கப்பட்டது.
>>> Part 31
|