ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்''
"உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''
ரஜினிகாந்த் உடல் நலம் குன்றியிருந்தபோது அவரை எம்.ஜி.ஆர். சென்று
பார்த்தார். "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்'' என்று கனிவுடன்
கூறினார்.
ரஜினிகாந்த், யானையுடன் நடித்த "அன்னை ஓர் ஆலயம்'' படத்தை டைரக்ட்
செய்தவர், ஆர்.தியாகராஜன். (சாண்டோ சின்னப்ப தேவர் மருமகன்)
இந்தப் படத்தை இயக்கியபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி அவர்
கூறியதாவது:-
"1979-ல் `அன்னை ஓர் ஆலயம்' படத்தை இயக்கினேன். இது அந்த வருடம்
தீபாவளிக்கு ரிலீசானது. "தாய்ப்பாசம் என்பது மிருகங்களுக்கும் உண்டு''
என்பதை மையக்கருத்தாக்கி வந்த படம். பெரிய வெற்றி.
இந்தப் படத்தில், ஒரு சிறுத்தையை ரஜினி தோள் மீது தூக்கிச் செல்லும்
காட்சி, ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இந்தப்படம் தமிழில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, "அம்மா வெருகேனு
அம்மா'' என்ற பெயரில் தெலுங்கிலும் தயாரித்தோம். அதிலும் ரஜினி
நடித்தார். தெலுங்கும் வெற்றிப்படமே.
எளிமை
சினிமாப்புகழ் எப்போதுமே அவரை பாதித்ததில்லை. திடீர் திடீரென எங்கள்
ஆபீசுக்கு வருவார். களைப்பாக இருந்தால், எங்கேயாவது ஒரு ஓரத்தில்
கையை தலைக்கு வைத்து படுத்துக்கொள்வார். சாதாரண ஓட்டலில் இடியாப்பம்
- பாயா வாங்கி வரச்சொல்லி அதையே சாப்பிடுவார்.
ஒரு படத்தில் நடித்ததுமே, `நட்சத்திர ஓட்டல் டிபன்தான் வேண்டும்'
என்று கேட்கிற சினிமா உலகில், எந்த பந்தாவும் இல்லாமல் ரஜினி
எளிமையாக இருந்தார்.
"அன்னை ஓர் ஆலயம்'' படத்தில் ரஜினி நடித்த நேரத்தில், தூங்காமல் -
ஓய்வு எடுக்காமல் உழைத்தார். அவருக்குள் ஒருவித குழப்ப நிலை
நீடித்ததை உணர்ந்து கொண்டோம். இதனால் எங்கள் கம்பெனி தயாரிப்பு
நிர்வாகி, உதவி இயக்குனர் விஜயசிங்கம், கார் டிரைவர் மூவரையும்
எப்போதும் ரஜினியுடன் இருக்கும்படி ஏற்பாடு செய்தோம்.
எம்.ஜி.ஆருக்கு தகவல்
ஆனால், இதையும் தாண்டி அவருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு விடுமோ
என்ற பயத்தில், சத்யா ஸ்டூடியோவில் ரஜினி நடிக்க வந்த நேரத்தில்
எம்.ஜி.ஆரின் செயலாளராக இருந்த பத்மநாபனிடம் இதுபற்றி கவலை
தெரிவித்தோம்.
எம்.ஜி.ஆர். அப்போது முதல்-அமைச்சராக இருந்தார். ரஜினி பற்றிய தகவல்
பத்மநாபன் மூலம் அவருக்குத் தெரிந்தது. எம்.ஜி.ஆர். சத்யா
ஸ்டூடியோவுக்கு வந்து, ரஜினியை பார்த்துப் பேசினார். "உடம்பு
விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். சுவரை வைத்துத்தான் சித்திரம்
எழுத முடியும்'' என்று ரஜினிக்கு அன்புடன் `அட்வைஸ்' செய்துவிட்டுப்
போனார்.
லாபமா, நஷ்டமா?
"அன்னை ஓர் ஆலயம்'' கடைசி நாள் படப்பிடிப்பு. பூசணிக்காய் உடைத்த
பிறகு, காரில் ஏறப்போன ரஜினி நேராக என்னிடம் வந்தார். என்னை
எப்போதும் `மாப்பிள்ளை' என்றுதான் அழைப்பார்.
"என்ன மாப்பிள்ளை! இந்தப்படம் உங்களுக்கு லாபமா? நஷ்டமா?'' என்று
கேட்டார். தனது உடல் நலம் காரணமாக, படப்பிடிப்பு கொஞ்சம்
தள்ளிப்போனதால், தயாரிப்பு செலவு அதிகமாகியிருக்குமோ என்ற எண்ணம்
அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் அப்படிக் கேட்டார்.
நான் அவரிடம், "ரஜினிபாய்! உங்களை வைத்து தயாரிக்கும் படத்தால்
நஷ்டம் வராது. லாபத்தில் கொஞ்சம் குறைவு. அவ்வளவுதான்!'' என்றேன்
சிரித்தபடி.
உடனே, தனது கையில் வைத்திருந்த ஒரு கடிதத்தை என் கையில் தந்தார்
ரஜினி. "நாளைக்கு இதை படிச்சுப் பாருங்க'' என்று கூறிவிட்டுப்
புறப்பட்டார்.
அவர் புறப்பட்டுப் போனதும், ஆவலை அடக்க முடியாமல் அந்தக் கடிதத்தை
அப்போதே பிரித்துப் பார்த்தேன். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என்று 3
மாதங்களுக்கான தேதிகளை எங்கள் பட நிறுவனத்துக்கு (படப்பிடிப்பு
நடத்திக்கொள்ள) கொடுத்திருப்பதாக அதில் குறிப்பிட்டு இருந்தார்.
அந்த தேதிகளில் ஒரு தெலுங்குப் படத்தையும், ஒரு தமிழ்ப்படத்தையும்
எடுத்து முடித்தோம்.''
இவ்வாறு தியாகராஜன் கூறினார்.
தனித்து நடிக்க முடிவு
அபூர்வ ராகங்கள், அவர்கள், 16 வயதினிலே, இளமை ஊஞ்சலாடுகிறது,
நினைத்தாலே இனிக்கும் உள்பட பல படங்களில் இணைந்து நடித்த கமலஹாசனும்,
ரஜினிகாந்தும் இனி தனித்தனியே நடிப்பது என்று முடிவு செய்தனர்.
இருவருடைய வளர்ச்சிக்கும் அதுதான் நல்லது என்று அவர்கள் கருதினர்.
இதுபற்றிய அறிவிப்பை, பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் கமலஹாசன்
அறிவித்தார். அப்போது ரஜினிகாந்த் உடன் இருந்தார்.
>>> Part 32
|