"ஜானி''யில்
புதுமையான இரட்டை வேடம்
ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்
ரஜினிகாந்த்
நடித்த மிகச்சிறந்த படங்களில் ஒன்று "ஜானி.'' மகேந்திரன்
இயக்கத்தில் உருவான படம்.
புதுமையான இரட்டை வேடம்
இதில் ரஜினிக்கு இரட்டை வேடம். ஒரு ரஜினிக்கு ஜோடி ஸ்ரீதேவி.
இன்னொரு ரஜினிக்கு ஜோடி தீபா.
வழக்கமாக, இரட்டை வேடப்படம் என்றால் இருவரும் ஒரே தோற்றம்
கொண்டவர்களாகவோ, இரட்டையர்களாகவோ இருப்பார்கள்.
இதில் ஒரு ரஜினி ஹீரோ; மற்றொரு ரஜினி பார்பர்! இவர் மகா கஞ்சன்.
இவருடைய செய்கைகள் வித்தியாசமாகவும், வயிறு குலுங்க சிரிக்க
வைப்பதாகவும் இருக்கும். கடைசியில் தீபா துரோகம் செய்வதால், கொலை
செய்து விடுவார்.
ஹீரோ ரஜினி - ஸ்ரீதேவி காதலை மென்மையாகச் சித்தரித்திருந்தார்,
மகேந்திரன்.
படத்தின் உச்சகட்டத்தில், ஸ்ரீதேவி உருக்கமாகப்பாட, எதிரிகளை
வீழ்த்திவிட்டு ரஜினி ஓடிவருவார். அந்தக் காட்சி மெய்சிலிர்க்கச்
செய்யும்.
கண்ணதாசனும், கங்கை அமரனும் எழுதிய பாடல்களுக்கு, இளையராஜா
அற்புதமாக இசை அமைத்திருந்தார்.
அசோக்குமாரின் படப்பிடிப்பு பிரமாதம்.
1980 சுதந்திர தினத்தன்று வெளிவந்த "ஜானி'', நூறு நாட்களுக்கு மேல்
ஓடியது.
மகேந்திரன் அனுபவம்
"ஜானி'' படமானபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி டைரக்டர் மகேந்திரன்
கூறியிருப்பதாவது:-
"ஜானிக்கு முன்பு வரை, ஸ்ரீதேவியின் அழகை மட்டும் படங்களில்
பார்க்க முடிந்தது. ஜானியில்தான் முதன் முறையாக அவருடைய
நடிப்பாற்றலை எல்லோரும் உணர முடிந்தது.
ஜானியில் ரஜினிக்கு இரண்டு வேடங்கள். என்ன அழகாய்
வித்தியாசப்படுத்தி நடித்தார்! இருந்தாலும், `ஸ்ரீதேவியின்
நடிப்புக்கு ஈடு கொடுத்து என்னால் அந்தக் காட்சியில் நடிக்க
இயலவில்லை' என்று அவ்வப்போது கூறுவார். அதுதான் ரஜினிகாந்த்!
நூறு குடைகள்
`ஜானி' கடைசி நாள் ஷூட்டிங். ஒரு மாதம் முன்னரே சொல்லியிருந்தபடி,
மழை அடிக்கும் வேளையில் மேடையில் ஸ்ரீதேவி பாடும் பாடல் காட்சிக்கு
நூறு குடைகளும், இருநூறு ஆட்களும் தேவை என்று தயாரிப்பாளரிடம்
சொல்லியிருந்தேன். ஜானி சம்பந்தப்பட்ட சில காட்சிகளை சென்னையில்
பகலில் ஒரு பகுதியில் எடுத்துவிட்டு உச்சகட்ட பாடல் காட்சி எடுக்க
மாலையில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திற்கு வந்தால், குடையும் இல்லை,
ஆளும் இல்லை! மழைத் தண்ணீருக்காக வரவழைக்கப்பட்டிருந்த தீயணைப்பு
படை வண்டி மட்டுமே நிற்கிறது.
குடையும் ஆளும் கிடைக்காததற்கு தயாரிப்பாளர் ஏதேதோ காரணம் சொல்ல
நான் இடிந்துபோய் உட்கார்ந்து விட்டேன். `நான் நினைத்த மாதிரி இந்த
கிளைமாக்ஸ் பாடல் காட்சியை எடுக்க முடியாதா?' என்று சோர்வடைந்தேன்.
ரஜினி என்னிடம் ஓடி வந்தார். என் சோர்வுக்குக் காரணம் கேட்டார்.
சொன்னேன். தயாரிப்பாளரிடம் ஓடினார்.
"ஒருநாள்தான் உங்கள் கால்ஷீட்டும், ஸ்ரீதேவி கால்ஷீட்டும்
இருக்கிறது. இந்த நிலையில், கிடைக்காத குடைகளுக்கும், ஆட்களுக்கும்
நான் எங்கே போவது?'' என்றார் தயாரிப்பாளர்.
"ஒரு நாள் இல்லை சார்! இன்னும் ஒரு வாரமோ - பத்து நாளோ, மகேந்திரன்
சார் சொல்ற வரைக்கும் இந்தப் பாட்டை முடிக்காம நானோ ஸ்ரீதேவியோ
இங்கேயிருந்து போகமாட்டோம். டைரக்டர் நினைக்கிற மாதிரி இந்தப் பாடலை
எடுக்கவிடுங்க'' என்றார், ரஜினி தீர்க்கமாக!
"இன்றைக்கு விட்டால் தீயணைப்பு வண்டி இன்னும் ஒரு மாதத்திற்கு
கிடைக்காது. நான் என்ன பண்றது?'' என்று திரும்பவும் தயாரிப்பாளர்
பல காரணங்களைச் சொல்லவே, "நிலைமையை நான் சமாளிக்கிறேன். இத்துடன்
விட்டுவிடுங்கள்'' என்று ரஜினியை சமாதானப்படுத்தினேன்.
அன்று இரவு, விடிய விடிய படப்பிடிப்பு நடத்தி, பாடல் காட்சியை
எடுத்து முடித்தேன்.
"ஜானி'' வெளியாகி வெற்றிப்படமானது.
நடிப்பில் மட்டுமல்ல, நட்பிலும் ஆழமானவர் ரஜினி.''
இவ்வாறு மகேந்திரன் கூறியுள்ளார்.
எல்லாம் உன் கைராசி
அடுத்து ரஜினி நடித்து வெளிவந்த படம் "எல்லாம் உன் கைராசி.''
இதற்கு கதை, திரைக்கதை எழுதி டைரக்ட் செய்தவர் எம்.ஏ.திருமுகம்.
ரஜினியுடன் சீமா, சவுகார் ஜானகி, சச்சு, அசோகன், மேஜர் சுந்தர்ராஜன்,
சுருளிராஜன் ஆகியோர் நடித்தனர்.
இசை இளையராஜா.
9-10-1980ல் வெளிவந்த இந்தப்படம், எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.
பொல்லாதவன்
குடும்பக் கதைகளை படமாக்கி வந்த `முக்தா' சீனிவாசன், ரஜினியை வைத்து
தயாரித்த படம் "பொல்லாதவன்.''
இதில் ரஜினியுடன் லட்சுமி, ஸ்ரீபிரியா ஆகியோர் இணைந்து நடித்தனர்.
மற்றும், சுருளிராஜன், டெல்லிகணேஷ், வி.கோபாலகிருஷ்ணன், பேபி அஞ்சு
ஆகியோரும் நடித்தனர். வசனம்: தூயவன்; இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.
முரட்டு இளைஞன் வேடத்தில் ரஜினி பிரமாதமாக நடித்து, ரசிகர்களைக்
கவர்ந்தார்.
6-11-1980-ல் வெளிவந்த இப்படம் நூறு நாள் ஓடிய வெற்றிப்படம்.
>>> Part 34
|