ரஜினி இதயத்தில்
காதல் மலர்ந்தது!
பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்
ரஜினிகாந்தின் மனைவி லதா, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது
(1980) ரஜினியை பேட்டி காண வந்தார். அவரிடம் மனதைப் பறிகொடுத்த
ரஜினி, `உன்னைப்போல் பெண் கிடைத்தால், திருமணம் செய்து கொள்வேன்'
என்றார்.
ரஜினி, புகழின் சிகரத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த நேரம்.
அவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். அவருடைய ஸ்டைலில் மனதைப்
பறிகொடுத்த பெண்கள் - குறிப்பாக கல்லூரி மாணவிகள், அவருக்கு காதல்
கடிதங்கள் எழுதுவார்கள். தினம் தினம் இப்படி நூற்றுக்கணக்கான
கடிதங்கள் வந்து குவியும்.
நடிகைகள்
ரஜினியுடன் நடித்த நடிகைகள் சிலரும், ரஜினியை மணக்க விரும்பினர்.
ஆனால், ரஜினியின் மனதில் காதல் மலரவில்லை. அவர் மனதை எந்தப்
பெண்ணும் கவரவில்லை.
ரஜினி 30-வது வயதில் அடியெடுத்து வைத்தபோது, மன்மதனின் மலர்க்கணை
அவர் மீது பாய்ந்தது!
1980-ம் ஆண்டு மத்தியில், கே.பாலசந்தர் இயக்கத்தில் கலாகேந்திரா
நிறுவனத்தின் "தில்லுமுல்லு'' படம் உருவாகிக்கொண்டிருந்தது.
பேட்டி காண வந்தார்
இந்தப் படத்தின் படப்பிடிப்பு, நடிகை சவுகார் ஜானகியின் வீட்டில்
நடந்து கொண்டிருந்தபோது, எத்திராஜ் கல்லூரி மாணவிகள் சிலர் அங்கு
வந்தனர்.
அவர்களில் லதாவும் ஒருவர். கல்லூரியின் சிறப்பிதழுக்கு பேட்டி காண
வந்திருப்பதாக ரஜினியிடம் கூறினார். பேட்டிக்கு ரஜினி சம்மதித்தார்.
லதா தமிழிலும், ஆங்கிலத்திலும் சரமாரியாகக் கேள்விகள் கேட்டார்.
அவற்றுக்கெல்லாம் சளைக்காமல் தன் பாணியில் பதில் சொன்னார் ரஜினி.
லதாவின் அழகும், புத்திசாலித்தனமும் ரஜினியைக் கவர்ந்தன. அந்த
நிமிடமே ரஜினியின் இதயத்தில் லதா குடியேறிவிட்டார்.
"உங்கள் திருமணம் எப்போது?'' என்று லதா கேட்க, "குடும்பப் பாங்கான
பெண் கிடைக்கும்போது என் திருமணம் நடைபெறும்'' என்று ரஜினி பதில்
அளித்தார்.
"விளக்கமாக சொல்லுங்கள்'' என்று லதா கேட்க, "உங்களை மாதிரி பெண்
கிடைத்தால், நான் திருமணம் செய்து கொள்வேன்'' என்று ரஜினி
பதிலளித்தார். அதாவது, தன் காதலை மறைமுகமாக வெளிப்படுத்தினார்.
ஒய்.ஜி.மகேந்திரன்
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவியின் தங்கைதான் லதா.
மகேந்திரனும், ரஜினியும் நண்பர்கள். எனவே, லதாவை பார்த்ததற்கு
மறுநாள், மகேந்திரனிடம் "நான் லதாவை மணந்து கொள்ள விரும்புகிறேன்''
என்று ரஜினி கூறினார்.
ரஜினி யாரைக் குறிப்பிடுகிறார் என்பது, மகேந்திரனுக்கு சட்டென்று
புரியவில்லை. எம்.ஜி.ஆருடன் படங்களில் நடித்து வரும் லதாவைக்
குறிப்பிடுகிறாரோ என்று நினைத்தார்.
"என்னப்பா! லதா, உனக்கு சீனியர் நடிகை. எம்.ஜி.ஆரோடு எல்லாம்
நடித்தவர். அவரையா நீ காதலிக்கிறாய்?'' என்று கேட்டார்.
"நான் கூறுவது நடிகை லதாவை அல்ல. உன் மைத்துனி லதாவைத்தான்
கூறுகிறேன்'' என்றார், ரஜினி.
ஒரு நிமிடம் திகைத்து நின்ற மகேந்திரன், "சரி. இதுபற்றி என்
குடும்பத்தாருடன் பேசுகிறேன். நல்லது நடக்கும்'' என்றார்.
லதாவை ரஜினி மணக்க விரும்புவதை, தன் மனைவியிடமும், குடும்பத்து
பெரியவர்களிடமும் மகேந்திரன் தெரிவித்தார். எல்லோருக்கும் மிகுந்த
மகிழ்ச்சி. லதாவும் சம்மதம் தெரிவித்தார்.
ஆனாலும், இதை ரகசியமாக வைத்திருந்தார்கள்.
"தினத்தந்தி'' செய்தி
இந்த நிலையில், ரஜினிகாந்துக்கு விரைவில் திருமணம் நடைபெற
இருக்கிறது என்ற செய்தியை "தினத்தந்தி'' வெளியிட்டது. மணமகள் லதா
என்பதையும் செய்தியில் குறிப்பிட்டு இருந்தது.
இச்செய்தி, தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
"இது உண்மையா?'' என்று கேட்டு ரஜினிக்கு ஏராளமான போன்கள் வந்தன.
கடிதங்கள் குவிந்தன.
திரை உலகில் இதுபற்றித்தான் பேச்சு.
ரஜினி எதுவும் பேசாமல் மவுனம் காத்தார்.
(திருமணத்தை உறுதி செய்தார் - திங்கட்கிழமை)
ரஜினி நடித்த திரைப்படங்கள்
படம் வெளியான தேதி டைரக்டர்
1 அபூர்வ ராகங்கள் 18-08-1975 கே.பாலசந்தர்
2 சுதா சங்கமா (கன்னடம்) 23-10-1976 எஸ்.ஆர்.புட்டண்ணா
கனகல்
3 அந்துலேனி கதா (தெலுங்கு) 27-02-1976 கே.பாலசந்தர்
4 மூன்று முடிச்சு 22-10-1976 கே.பாலசந்தர்
5 பாலுஜேனு (கன்னடம்) 10-12-1976 கே.ஆர்.பாலன்
கே.நாகபூஷணம்
6 அவர்கள் 25-02-1977 கே.பாலசந்தர்
7 கவிக்குயில் 29-07-1977 தேவராஜ்
- மோகன்
8 ரகுபதி ராகவ ராஜாராம் 12-08-1977 துரை
9 சில சும்மா செப்பிந்தி 13-08-1977 யோங்கி சர்மா
(தெலுங்கு)
10 புவனா ஒரு கேள்விக்குறி 02-09-1977 எஸ்.பி.முத்துராமன்
11 ஒந்து பிரேமதே கதே 02-09-1977 ஜாய் சைமன்
(கன்னடம்)
12 16 வயதினிலே 15-09-1977 பாரதிராஜா
13 சகோதர சவால் (கன்னடம்) 16-09-1977 கே.ஆர்.தாஸ்
14 ஆடுபுலி ஆட்டம் 30-09-1977 எஸ்.பி.முத்துராமன்
15 குங்கும ரக்ஷே (கன்னடம்) 14-10-1977 எஸ்.கே.ஏ.சாரி
16 காயத்ரி 17-10-1977 பட்டாபிராமன்
17 ஆறு புஷ்பங்கள் 10-11-1977 கே.எம்.பாலகிருஷ்ணன்
18 தொலிரேயி கடிசிந்தி 17-11-1977 ராமிரெட்டி
(தெலுங்கு)
19 ஆம்மே கதா (தெலுங்கு) 18-11-1977
ராகவேந்திர ராவ்
20 கலாட்டா சம்சாரா (கன்னடம்) 02-12-1977 சி.வி.ராஜேந்திரன்
>>> Part 36
|