லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார்
முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு
"லதாவுக்கும் எனக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற இருக்கிறது''
என்று ரஜினிகாந்த் அறிவித்தார்.
1981 பிப்ரவரி 25-ந்தேதி மாலை 4 மணிக்கு, நிருபர்களை திடீரென்று
ரஜினி அழைத்தார்.
சில நிமிடங்களுக்கெல்லாம் நிருபர்கள் பெருந்திரளாகக் கூடிவிட்டனர்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
தினத்தந்திக்கு புகழாரம்
"7 மாதங்களுக்கு முன்பே, ரஜினிகாந்த் - லதா திருமணம் என்ற செய்தியை
வெளியிட்ட ஒரே பத்திரிகை "தினத்தந்தி''தான்.
ரகசியமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருந்த இந்தச்
செய்தியை, "தினத்தந்தி'' வெளியிட்டது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
அந்தச் செய்தி "தினத்தந்தி''யில் வெளிவந்ததும், லட்சக்கணக்கான எனது
ரசிகர்களிடம் இருந்து பல கடிதங்கள் வந்தன. பட அதிபர்களும்,
நடிகர்களும் `போன்' செய்து, "இது உண்மையா என்று கேட்டார்கள். சற்று
பொறுத்திருக்கும்படி கூறினேன்.
அந்தச் செய்தி இன்று உண்மையாகி, எல்லோரும் பாராட்டும் விதமாக
அமைந்தது பற்றி பெருமைப்படுகிறேன்.''
இவ்வாறு கூறிய ரஜினிகாந்த், அங்கிருந்த தினத்தந்தி நிருபருடன் கை
குலுக்கினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:-
"லதாவுடன் எனது காதல் கனிந்து, கடவுள் அருளால் திருமணம்
நடைபெறுகிறது. இது எப்படி என்பது பற்றி, என் அன்பு ரசிகர்களுக்கு
சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
வாழ்க்கையின் இன்ப - துன்பங்களை உணர்ந்தவன் மட்டுமல்ல; அனுபவித்து
அறிந்தவன் நான். முதுகில் தழும்பேற மூட்டை சுமந்து, `மில்லி'
அடித்து, வாழ்க்கையின் மேடு - பள்ளங்கள் அனைத்தையும் உணர்ந்து இந்த
நிலைக்கு வந்திருக்கிறேன்.
லதா சந்திப்பு
என் வாழ்க்கையில் பெரும் திருப்பம் நகழ்ந்தது, பிரபல நடிகை சவுகார்
ஜானகியின் வீட்டில்தான்.
7 மாதங்களுக்கு முன் அங்கு, டைரக்டர் பாலசந்தர் சாரின் "தில்லு
முல்லு'' படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அதில் நான் நடித்துக்
கொண்டிருந்தேன்.
பகல் ஒரு மணி இருக்கும். எத்திராஜ் கல்லூரி மாணவிகள் சிலர் வந்தனர்.
அவர்களில், என் முன்னால் வந்து, தன்னை அறிமுகம் செய்து கொண்டவர் லதா.
"மிஸ்டர் ரஜினி! நான் கல்லூரி மாணவி. எங்கள் கல்லூரியின் சிறப்பு
இதழுக்கு, உங்களை பேட்டி காண வந்திருக்கிறேன். சம்மதமா?'' என்று
கேட்டார். நான் சம்மதித்தேன்.
பேட்டி தொடர்ந்தது. சுவையான, அறிவுபூர்வமான கேள்விகள் பலவற்றை லதா
கேட்க கேட்க, நானும் என் பாணியில் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.
லதா கேட்ட கேள்வி
லதா திடீரென்று "மிஸ்டர் ரஜினிகாந்த்! உங்கள் திருமணம் எப்போது?''
என்று கேட்டார்.
"குடும்பப் பாங்கான பெண் எப்போது கிடைக்கிறாளோ, அப்போதுதான்
திருமணம்'' என்று பதிலளித்தேன், லதா மீது கண்களைப் பதித்தபடி.
"இப்படிச் சொன்னால் எப்படி! விளக்கமாகச் சொல்லுங்கள்!'' என்றார்,
லதா.
"உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். உங்களை மாதிரி ஒரு பெண்
கிடைத்தால் நான் கல்யாணம் செய்து கொள்வேன்'' என்றேன்.
நாணத்தால் லதாவின் முகம் சிவந்து விட்டது.
என் வாழ்க்கையில் ஒளிவு - மறைவு இல்லை. உண்மை பேசி வாழ
விரும்புகிறேன். என் மனமார, எவருக்கும் துரோகம் செய்யமாட்டேன்.
அதனால்தான் மனம் திறந்து, "என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமா?''
என்று லதாவிடம் கேட்டேன். தொடர்ந்து, இதுபற்றி ஒய்.ஜி.மகேந்திரனிடம்
பேசினேன்.
சம்மதம்
லதாவிடமும், லதாவின் பெற்றோரிடமும் மகேந்திரன் பேசினார். அவர்களின்
சம்மதம் கிடைத்தது.
அதன் பிறகு நானும் லதா வீட்டுக்கு சென்று அவர் பெற்றோர்களிடம்
பேசினேன். `திருமணத்துக்கான ஏற்பாடுகளை எல்லாம் நானே செய்கிறேன்.
அதுவரை வெளியே யாருக்கும் தெரிய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன்.
அண்ணனும் சம்மதித்தார்
நான் பெங்களூர் சென்று என் அண்ணனிடம் லதா பற்றி கூறினேன். முதலில்
அவர் அதிர்ச்சி அடைந்தார்.
`அந்தப் பெண் நம்ம சாதி இல்லேன்னு சொல்றே. மராத்தியில் கிடைக்காத
பெண்ணா உனக்கு மதராசில் கிடைக்கப்போகுது?'' என்று கேட்டார்.
`நான் நல்லா இருக்கணும்னு நீங்க விரும்பினா, லதாவை மணந்து கொள்ள
எனக்கு அனுமதி கொடுங்க' என்று சொல்லிவிட்டு வந்தேன்.
பிறகு என் அண்ணன், சென்னைக்கு வந்தார். லதாவைப் பார்த்துவிட்டு,
சம்மதம் தெரிவித்தார்.
லதா மட்டும், "உங்களை மணந்து கொள்ளமாட்டேன்'' என்று கூறியிருந்தால்,
என் மனம் தாங்கியிருக்காது. ஏனென்றால் ஒரு பொருளின் மீது ஆசை
கொண்டால் அதை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறி கொண்டவன் நான்.
சம்யுக்தையை பிருதிவிராஜன் தூக்கிச்சென்றது போன்ற நிலைமை
ஏற்பட்டிருக்கும். அதற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது.
திருமணத்துக்காக 7 மாதம் காத்திருந்தேன். அதற்குக் காரணம் உண்டு.
எனது மனைவியின் குணநலன்கள் எப்படி? என் குணத்தையும், மனதையும்
அறிந்து நடந்து கொள்வாளா? அவளது நடை, உடை, பாவனை எப்படி என்பதை
எல்லாம் அறிந்து கொள்ள விரும்பினேன். அதற்குத்தான் 7 மாதம்
பிடித்தது.
பாடலாம்; நடிக்கலாம்
என் மனைவி லதாவுக்கு சங்கீத ஞானம் உண்டு. நன்றாகப் பாடுவாள். அவள்
விரும்பினால் சினிமாவில் பின்னணி பாடலாம். நடிக்க விரும்பினால் கூட
நடிக்கலாம். நான் தடை சொல்லமாட்டேன்.
என்னோடு ஜோடியாக நடிக்க விரும்பினால்கூட, நான் நடிக்கத் தயார்!
பெண்கள் என்பவர்கள், வீட்டில் கணவன் காலடியில் நெளியும் புழுவோ,
பூச்சியோ அல்ல. பெண்களுக்கு சுதந்திரம் தேவை. அந்த சுதந்திரத்தை
நான் முழுமையாகத் தருவேன்.''
இவ்வாறு ரஜினி கூறினார்.
>>> Part 37
|