திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்?
திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது?
தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா?
சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!
திருமணம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, ரஜினிகாந்த்
அதிரடியாக பதில் அளித்து, பரபரப்பு உண்டாக்கினார்.
தன் திருமணம் 26-2-1981 அன்று திருப்பதியில் நடைபெற இருப்பதை
அதிகாரப்பூர்வமாக அறிவித்த ரஜினிகாந்த், நிருபர்கள் கேட்ட
கேள்விகளுக்கு பதிலளித்து கூறியதாவது:-
அழைப்பிதழ் எதற்காக?
"எனது திருமணத்துக்கு அழைப்பிதழ் அச்சிடப்படவில்லை. என்னோடு
நெருங்கிப் பழகிய, என் முன்னேற்றத்துக்கு காரணமாக
இருந்தவர்களைக்கூட, "வாருங்கள்! என் திருமண கோலத்தைக் கண்ணாரக்
கண்டு ஆசீர்வதியுங்கள்'' என்று அழைக்கவில்லை.
இதற்குக் காரணம் என்ன? அழைப்பிதழ் அச்சடித்து, குடும்பத்தினர்,
உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு வீடு வீடாகச் சென்று கொடுப்பது,
தபால், தந்தி, ரேடியோ வசதிகள் இல்லாத அந்தக் காலத்துக்கு
வேண்டுமானால் பொருத்தமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்தக் காலத்தில்
அது எதற்கு? என்னைப்போன்ற ஒரு நடிகனுக்குத் திருமணம் என்றால்,
அடுத்த நிமிடமே மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக நவீன வசதிகள்
இருக்கின்றன. அதனால் அழைப்பிதழ் அச்சடிக்கவில்லை.
என் திருமணத்துக்கு உடன் பிறந்தவர்கள் தவிர, வேறு எவரையும்
அழைக்கவில்லை. வயது முதிர்ந்த என் தந்தையிடம் கூட, மானசீகமாகத்தான்
வாழ்த்து பெற்று இருக்கிறேன்.
பஸ் கண்டக்டர்கள்
நான் பெங்களூரில் கண்டக்டராகப் பணியாற்றினேனே! அப்போது என்னுடன்
பழகி, என்னுடன் உண்டு உறங்கிய சில பஸ் கண்டக்டர்களை மட்டும்
திருமணத்துக்கு அழைத்திருக்கிறேன்.
தெய்வத்தின் சந்நிதானத்தில் என் திருமணம் நடைபெறுகிறது. தெய்வம்
என்னையும், என் குடும்பத்தையும் ஆசீர்வதித்தால் அதுவே போதும்.
வெறும் சடங்கு
வெறும் மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலியைத்தான் நான் லதா கழுத்தில்
கட்டப்போகிறேன்.
தாலி கட்டுவது என்பது வெறும் சடங்கு. ஆனால், தெய்வத்தை சாட்சியாக
வைத்துக் கொண்டு, மனச்சாட்சிக்கு பயந்து, ஒருத்தி கழுத்தில்
கயிற்றைக் கட்டுவதே உண்மையான திருமணம்.
ஏழைக்கு உணவு
இன்று நான் இருக்கும் நிலையில் 4 ஆயிரம் பேர் என்ன, 4 லட்சம்
பேருக்கு அறுசுவை உணவு வழங்கி திருமணத்தை சிறப்பாக செய்ய முடியும்.
ஆனால், கோடீசுவரன் என்றாலும், திருமண விழாவுக்கு பணத்தை விரயம்
செய்வதை நான் வெறுக்கிறேன்.
பசி அறியாதவர்கள் என் திருமணத்துக்கு வந்து விருந்துண்டு போவதைவிட,
பசித்தவர்களுக்கு சோறு போட நினைக்கிறேன். எனவே, சென்னையில் உள்ள
சில அனாதை விடுதிகளில் உள்ளவர்களுக்கு சீருடையுடன் உணவும் வழங்க
ஏற்பாடு செய்திருக்கிறேன்.''
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
தேன் நிலவு
"தேன் நிலவுக்கு எங்கே போகப்போகிறீர்கள்?'' என்று கேட்டதற்கு அவர்
கூறியதாவது:-
"தேன் நிலவாவது, சர்க்கரை நிலவாவது? `விஸ்கி' அடித்தால், தினமும்
தேன் நிலவுதான்! கள்ளம், கபடம் இல்லாமல், ஒருவர் மனதை ஒருவர்
புரிந்து கொண்டு வாழும் ஒவ்வொரு நாளும் தேன் நிலவு நாட்களே!
எனினும் இனி நான் `டிரிங்க்' செய்வதை குறைத்துக் கொண்டு விடுவேன்.
உடல் நலமே முக்கியம். சுவர் இருந்தால்தானே சித்திரம் தீட்ட முடியும்!
இதை கவனிக்கும் பொறுப்பு, இனி என்னை விட என் லதாவுக்கு அதிகம் உண்டு.''
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
போட்டோ
"செய்தி சேகரிப்பதற்காக திருமணத்துக்கு நிருபர்கள்,
புகைப்படக்காரர்கள் வரலாமா?'' என்று ஒரு நிருபர் கேட்டார்.
அப்போது, லதாவுடன் கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை
நிருபர்களிடம் ரஜினி கொடுத்தார்.
"திருமணத்துக்குப் பிறகு இந்தப் படத்தை போட்டுக் கொள்ளுங்கள்.
வரவேற்பு நிகழ்ச்சியை பின்னர் சென்னையில் நடத்தப் போகிறேன். தேதி
முடிவாகவில்லை. முடிவானபிறகு, என்னை ஆளாக்கிய கலை உலக, பத்திரிகை
உலக நண்பர்கள் ஒவ்வொருவரையும் நேரில் அழைப்பேன். திருப்பதி கோவிலில்
மாலை மாற்றி தாலி கட்ட விசேஷ அனுமதி பெற்று இருக்கிறேன். அங்கே
பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் வந்து கூட்டம் கூடினால் பிரச்சினை
ஏற்படும். எனவே, திருமணத்துக்கு யாரும் வரவேண்டாம்'' என்றார், ரஜினி.
"வந்தா...?'' என்று ஒரு நிருபர் கேட்க, ரஜினி `டென்ஷன்' ஆகி, "உதைப்பேன்''
என்றார்.
இந்த பதில், நிருபர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
"ரஜினி! இந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தாதீர்கள். இதை
அப்படியே பிரசுரித்தால் நன்றாக இருக்குமா?'' என்று, மூத்த நிருபர்
ஒருவர் கூறினார்.
அமைதி அடைந்த ரஜினி, "நீங்கள் நேருக்கு நேராக இப்படி கூறியதைப்
பாராட்டுகிறேன். அப்படிச் சொன்னதற்கு வருந்துகிறேன்... சாரி!
ஆனாலும், திருப்பதிக்கு யாரும் வரவேண்டாம். காமிராவோட யாரையாவது
பார்த்துட்டா உதைக்கிறதைத் தவிர வேறு வழி தோணாது!'' என்றார், ரஜினி!
>>> Part 38
|