திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்
திருமணத்துக்குப்பின், ரஜினிகாந்த்
வாழ்க்கையில் வரவேற்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன.
முன்பெல்லாம், இரவு நெடுநேரம் கழித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த
ரஜினி, திருமணத்துக்குப்பின் மாலை 6 மணிக்கு படப்பிடிப்பை
முடித்துக்கொண்டு வீடு திரும்பலானார்.
இதுபற்றி கேட்டவர்களிடம், "முன்பு நான் தனி ஆள். இப்போது எனக்காக
ஒருத்தி வீட்டில் தனியாகக் காத்திருக்கிறாளே! அவளுக்காக
காலாகாலத்தில் வீட்டுக்குப் போகவேண்டாமா!'' என்று பதிலளித்தார்.
"ஜில்லு''
இனிய சுபாவமும், கருணை உள்ளமும் கொண்டவர், லதா. அவரை ரஜினி
செல்லமாக "ஜில்லு'' என்று அழைப்பது வழக்கம்.
லதாவின் முயற்சியால் சிகரெட், மது ஆகியவற்றை படிப்படியாக
குறைக்கலானார், ரஜினி. பேச்சில் பொறுமையும், செயல்களில் நிதானமும்
ஏற்பட்டன.
"திருமணத்துக்குப்பின் உங்கள் நடவடிக்கைகள் முற்றிலும் மாறிவிட்டனவே''
என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, "ஒருவர் திருமணம் செய்து கொள்வதே,
மாற்றம் வேண்டும் என்பதற்காகத்தானே! அந்த மாற்றங்களைத்தான் இப்போது
பார்க்கிறீர்கள்! நேரம் வரும்போது, எல்லாம் தானாகவே நடக்கும்''
என்று ரஜினி பதில் அளித்தார்.
லதா பேட்டி கண்டார்
திருமணத்துக்குப்பின் ரஜினியை லதா பேட்டி காண்பது போல ஒரு
நிகழ்ச்சிக்கு, ஒரு பத்திரிகை ஏற்பாடு செய்தது. இதற்கு ரஜினி, லதா
இருவரும் சம்மதம் தெரிவித்தனர்.
அப்போது, லதா கேட்ட கேள்விகளும் ரஜினி அளித்த பதில்களும் வருமாறு:-
லதா:- நீங்கள் எனக்குப் பதிலாக ஒரு சினிமா நடிகையை மணந்து
கொண்டிருந்தால் உங்கள் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும்?
ரஜினி:- சினிமா நடிகையும் ஒரு பெண்தானே!
லதா:- படப்பிடிப்புக்குப் போய்விட்டு வீடு திரும்பும்போது
உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
ரஜினி:- எனக்கு என்ன தோன்றும் என்று உனக்குத்தான் தெரியுமே!
எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமா?'' (`வேண்டாம்'
என்றார், லதா வெட்கத்தோடு)
கல்யாணம் ரொம்ப `லேட்'
லதா:- `ஏன் கல்யாணம் செய்து கொண்டோம். பிரம்மச்சாரியாக
இருந்திருக்கக்கூடாதா' என்று எண்ணியதுண்டா?
ரஜினி:- உன்னோடு வாழும் வாழ்க்கையை நினைக்கும்போது, கல்யாணத்தை
எவ்வளவு தாமதமாகச் செய்து கொண்டோம் என்று வருத்தப்படத்தான்
தோன்றுகிறது.
லதா:- வசதியான வீடு, மனத்திற்கேற்ற மனைவி, சினிமாப்புகழ் இந்த
மூன்றையும் தவிர வேறு எதை விரும்புகிறீர்கள்?
ரஜினி:- என் தனித்தன்மையை.
லதா:- என்னிடம் இதுவரை சொல்லாத ரகசியமோ, மறைத்து வைத்த விஷயமோ உண்டா?
இருந்தால் ஏன் சொல்லவில்லை?
ரஜினி:- என்னிடம் எந்த ரகசியமும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட நீயே
இப்படி ஒரு கேள்வி கேட்கிறாயே, நியாயமா?
முதல் குழந்தை
லதா:- ஒரு மனைவியின் முதல் குழந்தை கணவன் என்கிறார்களே, அதை நீங்கள்
ஒப்புக்கொள்கிறீர்களா?
ரஜினி:- என்னைப் பொறுத்தவரை ஒப்புக்கொள்கிறேன்.
லதா:- குடும்ப வாழ்க்கையில் என்னை நன்கு புரிந்து
கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு எது அடையாளம்?
ரஜினி:- நான் இப்பொழுது மகிழ்ச்சியாக இருப்பதுதான் அடையாளம்.
லதா:- ஒரு பிரபல நடிகரின் மனைவியாகிய எனக்கு, உண்மையான மகிழ்ச்சி
எதில் அடங்கியிருக்கிறது?
ரஜினி:- என்னுடைய மகிழ்ச்சியில்.
லதா:- என்னைப்போலவே யாராவது டெலிபோனில், `நான்தான் லதா பேசுகிறேன்'
என்று சொன்னால் நீங்கள் நம்பிவிடுவீர்களா?
ரஜினி:- என் ஜில்லுவின் குரல் எனக்குத் தெரியாதா என்ன?''
லதா:- மனம் விட்டுச் சொல்லுங்கள். என்னிடம் உங்களுக்கு பிடிக்காதது
எது?
ரஜினி:- முன்பின் தெரியாமல் எல்லோரிடமும் கருணை காட்டுவது!''
மேற்கண்டவாறு பதில் அளித்தார், ரஜினி.
>>> Part 40
|