காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி
நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார்
ரஜினி-லதா காதலுக்கு வழிவகுத்த "தில்லுமுல்லு'' படம், அவர்களுடைய
திருமணத்துக்குப்பின் வெளிவந்து, வெற்றிப்படமாக அமைந்தது.
இந்தப் படத்தில், ரஜினிகாந்த் நகைச்சுவை நடிப்பில் முத்திரை
பதித்தார்.
பாலாஜியின் "தீ''
ரஜினியின் திருமணத்துக்கு முன்னதாக கடைசியாக ரிலீஸ் ஆன படம் "தீ.''
(26-1-1981) இதைத் தயாரித்தவர் கே.பாலாஜி. இவர் பிற மொழிப் படங்களை
தமிழில் மீண்டும் தயாரித்து ("ரீமேக்'') வெற்றிமேல் வெற்றி பெற்றவர்.
இப்படி இவர் ரீமேக் செய்த "பில்லா'' பெரிய வெற்றி பெற்றதால்,
இந்தியில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற "தீவார்'' படத்தை "தீ''
என்ற பெயரில் தமிழில் தயாரித்தார். இதில் ரஜினிக்கு குணச்சித்ர
வேடம்.
பாடல்களை கண்ணதாசன் எழுத, வசனத்தை ஏ.எல்.நாராயணன் எழுதினார்.
ரஜினியுடன் ஷோபா, ஸ்ரீபிரியா, சவுகார்ஜானகி, சுமன், மனோரமா,
தேங்காய் சீனிவாசன், மேஜர் சுந்தரராஜன், பாலாஜி, அசோகன்,
ஏவி.எம்.ராஜன் நடித்தனர்.
இலங்கை நிறுவனத்துடன் கூட்டாக இந்தப் படத்தை பாலாஜி தயாரித்தார்.
எனவே, இலங்கையிலும் படப்பிடிப்பு நடந்தது.
ரஜினியின் திருமணத்துக்கு சரியாக ஒரு மாதத்துக்கு முன் வெளிவந்த
இந்தப்படம் இலங்கையில் 100 நாள் ஓடியது. தமிழ்நாட்டில் 60 நாள்
ஓடியது.
கழுகு
திருமணத்துக்குப்பின் வெளிவந்த முதல் படம் "கழுகு'' (6-3-1981).
பஞ்சு அருணாசலத்தின் பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ் தயாரித்த படம்.
வசனத்தையும், பாடல்களையும் பஞ்சு அருணாசலம் எழுத, இளையராஜா இசை
அமைத்தார். டைரக்ஷன்: எஸ்.பி.முத்துராமன்.
ஒரு போலிச்சாமியாரின் அந்தரங்க ரகசியங்களை கண்டுபிடித்து, அதை
அம்பலப்படுத்தும் பத்திரிகை நிருபர் ஒருவரைப் பற்றியதுதான் கதை.
நிருபராக ரஜினி நடித்தார்.
இந்தப் படத்தில், கதாபாத்திரங்களுடன் ஒரு பஸ் முக்கிய இடம்
பெற்றிருந்தது. இதற்காக ஒரு பஸ்சை வாங்கி, அதன் சீட்களை
நீக்கிவிட்டு, ஒரு வீடு மாதிரி மாற்றி அமைத்தார்கள். சமையல் அறை,
பெட்ரூம், பாத்ரூம் எல்லாம் உள்ளேயே அமைக்கப்பட்டன. சுருக்கமாகச்
சொன்னால், "நடமாடும் வீடு'' மாதிரி இருந்தது இந்த பஸ்!
இந்தப்படம் நடுத்தரமாக ஓடியது. ரஜினி படங்களில் "நடுத்தரம்''
என்றால், லாபம் குறையும். அவ்வளவுதான்!
தில்லுமுல்லு
இதன்பிறகு வெளிவந்த படம் "தில்லுமுல்லு.'' கே.பாலசந்தர் இயக்கத்தில்
கலாகேந்திரா தயாரித்த படம். இந்தப் படத்துக்கான வசனங்களை வாசு
எழுதினார். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.
ரஜினி வாழ்க்கையில், "தில்லுமுல்லு'' முக்கியமான படம். இந்தப்
படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதுதான், கல்லூரி
மாணவியான லதா ரஜினியை பேட்டி காண வந்தார். காதல் அரும்பி,
கல்யாணத்தில் முடிந்தது.
இந்தப்படம், "கோல்மால்'' என்ற இந்திப்படத்தைத் தழுவி
தயாரிக்கப்பட்டதாகும். ரஜினிக்கு ஜோடியாக மாதவி நடித்தார். மற்றும்
தேங்காய் சீனிவாசன், பூர்ணம் விஸ்வநாதன், நாகேஷ், சவுகார்ஜானகி
ஆகியோர் நடித்தனர். கமலஹாசனும், லட்சுமியும் கவுரவ வேடத்தில்
தோன்றினர்.
நகைச்சுவை
படம் முழுக்க முழுக்க நகைச்சுவை காட்சிகள் நிறைந்திருந்தன.
ரஜினிக்கு இரட்டை வேடம் இல்லாவிட்டாலும், சந்தர்ப்ப சூழ்நிலை
காரணமாக ரஜினி மீசையோடும், மீசை இல்லாமலும் இரண்டு வித தோற்றங்களில்
வருவார். இரண்டு தோற்றங்களிலும் வருவது ஒருவரே என்றாலும், "இருவர்''
என்று கூறி தில்லுமுல்லு செய்வார்.
1-5-1981-ல் வெளியான இப்படம் வெற்றிகரமாக ஓடியது.
(தொடரும்)
***
ரஜினி நடித்த திரைப்படங்கள்
21 சங்கர் சலீம் சைமன் 10-02-1978 பி.மாதவன்
22 கில்லாடி கிட்டு (கன்னடம்) 03-03-1978 கே.எஸ்.ஆர்.தாஸ்
23 அண்ண தம்முல சவால் 03-03-1978 கே.எஸ்.ஆர்.தாஸ் (தெலுங்கு)
24 ஆயிரம் ஜென்மங்கள் 10-03-1978 துரை
25 மாத்து தப்பித மகா (கன்னடம்) 31-03-1978 பெக்கட்டி சிவராம்
26 மாங்குடி மைனர் 19-05-1978 வி.சி.குகநாதன்
27 பைரவி 02-06-1978 எம்.பாஸ்கர்
28 இளமை ஊஞ்சலாடுகிறது 09-06-1978 ஸ்ரீதர்
29 சதுரங்கம் 30-06-1978 துரை
30 வணக்கத்துக்குரிய காதலியே 14-07-1978 ஏ.சி.திருலோகசந்தர்
31 வயசு பிலி சிந்தி (தெலுங்கு) 04-08-1978 ஸ்ரீதர்
32 முள்ளும் மலரும் 15-08-1978 மகேந்திரன்
33 இறைவன் கொடுத்த வரம் 22-09-1978 ஏ.பீம்சிங்
34 தப்பித தாளா (கன்னடம்) 06-10-1978 கே.பாலசந்தர்
35 தப்புத்தாளங்கள் 30-10-1978 கே.பாலசந்தர்
36 அவள் அப்படித்தான் 30-10-1978 ருத்ரய்யா
37 தாய்மீது சத்தியம் 30-10-1978 ஆர்.தியாகராஜன்
38 என்கேள்விக்கென்ன பதில்? 09-12-1978 பி.மாதவன்
39 ஜஸ்டிஸ் கோபிநாத் 16-12-1978 டி.யோகானந்த்
40 ப்ரியா 22-12-1978 எஸ்.பி.முத்துராமன்
>>> Part 41
|