"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்''
டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்
"மூன்று முகம்'' படப்பிடிப்பின்போது நிகழ்ந்த சுவையான சம்பவங்களை,
டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் வெளியிட்டார்.
"சண்டைக் காட்சிகளில் எல்லோரையும் ரஜினி அசர வைத்தார்'' என்று அவர்
கூறினார்.
டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் பத்திரிகையாளராக இருந்து, டைரக்டராக
உயர்ந்தவர். எம்.ஜி.ஆர். நடித்த "இதயக்கனி'' உள்பட பல
வெற்றிப்படங்களை இயக்கியவர்.
"மூன்று முகம்'' படத்தை இயக்கியபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி அவர்
கூறியதாவது:-
"பீட்டர் செல்வகுமார் எழுதிய மூன்று முகம் கதையை படமாக்குவது என்று
சத்யா மூவிஸ் முடிவு செய்ததும், பட வேலைகள் தொடங்கின.
ரஜினி கேட்ட கேள்வி
படத்தின் டைரக்டர் யார் என்று ஆர்.எம்.வீ.யிடம் ரஜினி
கேட்டிருக்கிறார். அவர் எனது பெயரை சொல்லியிருக்கிறார். "அவர்
இயக்கிய படம் எதையும் இதுவரை நான் பார்த்ததில்லையே!'' என்று
சொல்லியிருக்கிறார், ரஜினி.
உடனே ஆர்.எம்.வீரப்பன், "எங்கள் சத்யா மூவீசுக்கு எம்.ஜி.ஆர்.
நடித்த இதயக்கனி என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர் ஜெகந்நாதன்'' என்று
கூறியிருக்கிறார்.
"நான் இதயக்கனி படத்தை பார்க்க வேண்டுமே'' என்று ரஜினி சொல்ல
மறுநாளே "இதயக்கனி'' படத்தை ரஜினிக்கு காட்ட ஏற்பாடு செய்தார்,
ஆர்.எம்.வீ.
ரஜினி, நான், சத்யா மூவிசின் மானேஜர் பழனியப்பன் மூவரும் படம்
பார்த்தோம். படம் முடிந்ததும், "இந்தப்படத்தை எந்த வருஷம்
இயக்கினீர்கள்?'' என்று ரஜினி கேட்டார். "1974-ம் வருஷம்
எடுக்கப்பட்டு 1975-ல் ரிலீசானது'' என்றேன்.
உடனே ரஜினி, 1974-ல் நான் சினிமாவுக்கு வரவில்லை. அப்போதே
எம்.ஜி.ஆர். சாரை வைத்து படம் இயக்கியிருக்கிறீர்கள். நான்
நடிக்கும் இந்தப் படத்தை நீங்கள் இயக்குவதில் எனக்கு மகிழ்ச்சிதான்''
என்றார்.
பிரமிக்க வைத்த ஸ்டைல்கள்
படத்தில் நடிக்கும்போது, ரஜினியிடம் நான் கண்ட வேகம் பிரமிப்பானது.
காக்கி சீருடையில் அலெக்ஸ் பாண்டியனாக அவர் காட்டிய கம்பீரம்,
செட்டில் நடக்கும்போது வெளிப்பட்ட அந்த மிடுக்கு, போலீஸ்
நிலையத்தில் ஒரு குற்றவாளியிடம் பேசிக்கொண்டே இன்னொரு ரவுடியை
உதைக்கும் ஸ்டைல் என படம் முழுக்க அதிரடி ஸ்டைல்களை
வெளிப்படுத்தினார்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை சென்னை துறைமுகத்துக்கு வந்திருந்த
சரக்கு கப்பலில் 3 நாள் அனுமதி பெற்று எடுத்தோம். இந்த கிளைமாக்ஸ்
காட்சியை பார்த்த பட அதிபர் ஏவி.எம்.சரவணன் பாராட்டியபோது, "மூன்றே
நாளில் எடுத்து முடித்தோம்'' என்று சொன்னோம். அவருக்கு ஒரே
ஆச்சரியம். "எப்படியும் ஒரு வாரமாவது ஆகியிருக்கும் என்று
நினைத்தேன் என்று கூறினார்.
புதுமையான சண்டைக்காட்சி
இந்தப் படத்தின் சண்டைக் காட்சியில் ஒரு புதுமை செய்தேன். ரஜினி
பறந்து வந்து ரவுடிகளை அடித்து உதைப்பதாக வரும் காட்சியில், ஒரு
தடவை `ஜம்ப்' செய்யும்போதே, 4 பேரை உதைப்பது போல் காட்சி அமைத்தேன்.
இந்த சண்டைக்காட்சியை பார்த்ததும் ரஜினி ரொம்பவும் மகிழ்ச்சி
அடைந்தார். "நீங்கள் சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்'' என்று
பாராட்டினார்.
படம் ரிலீசாகி 150 நாட்களுக்கு மேல் ஓடியது. படத்துக்கான பாராட்டு
விழா மதுரையில் நடந்தபோது போலீஸ் டி.ஐ.ஜி. ஒருவர் தலைமை தாங்கினார்.
அவர் பேசும்போது, "போலீஸ் துறையில் பயிற்சி எடுப்பவர்களுக்கு
நாங்கள் பயிற்சி கொடுத்து உருவாக்குகிறோம். இதுவரை அப்படிச்
செய்தோம். இனி பயிற்சி அவசியமில்லை. `மூன்று முகம்' படத்தை
அவர்களுக்கு போட்டுக் காட்டினாலே போதும். ஒரு நேர்மையான போலீஸ்
அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதை இதைவிட சிறப்பாக சொல்ல
முடியாது'' என்று பாராட்டினார்.
ஒரு பிடி சோறு
சண்டைக் காட்சிகளில் நடிக்க நேரும்போது ரஜினி சரிவர சாப்பிட
மாட்டார். இப்படித்தான் ஒரு நாள் மதிய சாப்பாட்டு நேரம் வந்தது.
ரஜினி வீட்டில் இருந்து மணக்க மணக்க மீன் குழம்பு சாப்பாடு
வந்திருந்தது. மதியம் `பிரேக்' டைமில் ரஜினி என்னிடம், "சார்!
இன்றைக்கு என்னோடு சாப்பிட வாங்க'' என்று கேட்டுக்கொண்டார்.
சாப்பாட்டு நேரத்தில் ரஜினி `லஞ்ச் பாக்சை' திறந்தார். மீன் குழம்பு
வாசனை தூக்கியடித்தது. அந்த வாசனையை முகர்ந்தவர், மொத்த
சாப்பாட்டையும் என் பக்கம் திருப்பி வைத்து, "இது உங்களுக்குத்தான்''
என்றார். ஒரு கரண்டி அளவுக்கு சாதம் எடுத்து அதில் கொஞ்சமாய் ரசம்
மட்டும் ஊற்றி சாப்பிட்டார்.
ஒரு கை சாதம் மட்டும் அவர் சாப்பிட்டதில் எனக்கு அதிர்ச்சி. "ஏன்
இப்படி?'' என்று கேட்டேன். அதற்கு அவர், "சண்டைக் காட்சியில்
நடிக்கும்போது நிறைய சாப்பிட்டால் ரசிகர்கள் விரும்புகிற மாதிரி
காட்சி அமையாது'' என்றார்.
ரஜினி மகள் ஐஸ்வர்யா திருமண வரவேற்பு நடந்தபோது மணமக்களை நானும்
வாழ்த்தினேன். என்னைப் பார்த்ததும் ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவிடம்,
"இவர் மூன்று முகம் படத்தின் டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் '' என்று
அறிமுகப்படுத்தினார். மூன்று முகத்துடன் என் முகமும் அவருக்குள்
பதிந்து போனதை, அந்த நேரம் எனக்குள் பெருமிதமாக உணர்ந்தேன்.''
இவ்வாறு டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் கூறினார்.
("கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி - நாளை)
ரஜினி நடித்த திரைப்படங்கள்
81 அந்தா கானூன் (இந்தி) 07-04-1983 டி.ராமராவ்
82 தாய்வீடு 14-04-1983 ஆர்.தியாகராஜன்
83 சிவப்பு சூரியன் 27-05-1983 முக்தா சீனிவாசன்
84 ஜீத்ஹமாரி (இந்தி) 17-06-1983 ஆர்.தியாகராஜன்
85 அடுத்த வாரிசு 07-07-1983 எஸ்.பி.முத்துராமன்
86 தங்கமகன் 04-11-1983 எஸ்.ஏ.ஜெகநாதன்
87 மேரி அதாலத் (இந்தி) 13-01-1984 ஏ.டி.ரகு
88 நான் மகான் அல்ல 14-01-1984 எஸ்.பி.முத்துராமன்
89 தம்பிக்கு எந்த ஊரு 20-04-1984 ராஜசேகர்
90 கை கொடுக்கும் கை 15-06-1984 மகேந்திரன்
91 இதோ நா சவால் (தெலுங்கு) 16-06-1984 புரட்சிதாசன்
92 அன்புள்ள ரஜினிகாந்த் 02-08-1984 கே.நட்ராஜ்
93 கங்குவா (இந்தி) 14-09-1984 ராஜசேகர்
94 நல்லவனுக்கு நல்லவன் 22-10-1984 எஸ்.பி.முத்துராமன்
95 ஜான் ஜானி ஜனார்த்தன் (இந்தி) 26-10-1984 டி.ராமராவ்
96 நான் சிவப்பு மனிதன் 12-04-1985 எஸ்.ஏ.சந்திரசேகர்
97 மகா குரு (இந்தி) 26-04-1985 எஸ்.எஸ்.ரவிச்சந்திரன்
98 உன் கண்ணில் நீர் வழிந்தால் 20-06-1985 பாலுமகேந்திரா
99 வா பாதர் (இந்தி) 19-07-1985 தாசரி நாராயணராவ்
100 ஸ்ரீராகவேந்திரா 01-09-1985 எஸ்.பி.முத்துராமன்
>>> Part 47
|