|
ஏவி.எம்
தயாரித்த `பாயும் புலி'
"கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி
"மூன்று முகம்'' படத்தைத்
தொடர்ந்து மேலும் பல வெற்றிப் படங்களை ரஜினி கொடுத்தார்.
ஏவி.எம். தயாரிப்பான "பாயும்புலி''யில், "கராத்தே'', "குங்பூ''
முதலான சண்டைகளை மின்சார வேகத்தில் செய்து, ரசிகர்களை வியப்பில்
ஆழ்த்தினார்.
புது மாதிரியான படம்
சண்டைக் காட்சிகளில், ரஜினியின் நடிப்பு படத்துக்குப்படம்
மெருகேறிக் கொண்டிருந்தது. எனவே, சண்டைகளுக்கு முக்கியத்துவம்
கொடுத்து "பாயும் புலி'' படத்தைத் தயாரிக்க ஏவி.எம. முடிவு செய்தது.
இதற்கான கதை, வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுதினார்.
எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். பாடல்கள் வாலி; இசை இளையராஜா.
இந்தப் படத்தின் முன் பகுதியில் பயந்தாங்கொள்ளியாக ரஜினி வருவார்.
தங்கை கற்பழிக்கப்பட்டாள் என்று அறிந்ததும், ஆக்ரோஷமாக மாறி,
கராத்தே, குங்பூ முதலிய சண்டைகளைக் கற்று, எதிரிகளைப் பந்தாடும்
கதாபாத்திரம்.
ஆயிரம் அடிக்கு ஒரு சண்டைக்காட்சி. புகுந்து விளையாடினார், ரஜினி.
ராதா
இதில், ரஜினிக்கு ஜோடியாக ராதா நடித்தார்.
மற்றும் மனோரமா, இந்திரா, `சில்க்' சுமிதா, ஜெய்சங்கர், பாலாஜி,
வி.கே.ராமசாமி, ஒய்.ஜி.மகேந்திரன், சத்யராஜ் ஆகியோரும்
நடித்திருந்தனர்.
14-1-1983-ல் வெளிவந்த இந்தப்படம், நூறு நாட்களைக் கடந்து ஓடி
பெரிய வெற்றி பெற்றது.
மீண்டும் ஸ்ரீதர்
பட அதிபர் கே.ஆர்.ஜி. தயாரித்த "துடிக்கும் கரங்கள்'' படத்தில்
ஸ்ரீதர் இயக்கத்தில் ரஜினி நடித்தார்.
"இளமை ஊஞ்சலாடுகிறது'' படத்துக்குப்பின், ஏறத்தாழ ஐந்தாண்டு
இடைவெளிக்குப்பிறகு ரஜினியும், ஸ்ரீதரும் இப்படத்தில் இணைந்தனர்.
ரஜினியுடன் ராதா, சுஜாதா, சில்க் சுமிதா, வனிதா, ஜெய்சங்கர்,
விஜயகுமார் ஆகியோரும் நடித்தனர்.
இந்தப் படத்தின் மூலம்தான் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,
இசை அமைப்பாளராக அறிமுகமானார். பாடல்கள் எல்லாம் பிரபலமாயின.
4-3-1983-ல் வெளிவந்த இந்தப்படம், நூறு நாளை நெருங்கி ஓடி, வசூல்
ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது.
`சித்ராலயா' கோபு
"துடிக்கும் கரங்கள்'' படத்துக்கு இணை இயக்குனராகப் பணியாற்றிய `சித்ராலயா'
கோபு, அப்போது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி கூறியதாவது:-
"துடிக்கும் கரங்கள்'' குறுகிய காலத் தயாரிப்பாகும். ஊட்டியில், ஒரு
மாதத்தில் இப்படம் தயாரிக்கப்பட்டது.
ரஜினி ரொம்ப சுறுசுறுப்பாக இருப்பார். டைரக்டர் வருவதற்கு முன்பே,
மேக்கப் போட்டு தயாராக இருப்பார். நேரம் தவறாமையில் சிவாஜியும்,
ரஜினியும் ஒரே மாதிரியானவர்கள்.
டைரக்டர் ஸ்ரீதர் மீது ரஜினி மிகுந்த மதிப்பும், மரியாதையும்
வைத்திருந்தார். ஒவ்வொரு காட்சியும் படமானதும், "சரியா?'' என்று
டைரக்டரிடம் கேட்பார்.
"என்ன சீன்?'' என்று கேட்டு, அதை உள்வாங்கி மனதில் பதிய
வைத்துக்கொண்டு, கச்சிதமாக நடித்து முடிப்பார்.
எளிமை
ரஜினி, எளிமையானவர். படப்பிடிப்பின் இடைவேளையில், தனியாக எங்கேயாவது
படுத்து தூங்குவார். "பந்தா'' எதுவும் இல்லாதவர்.
மற்றவர்களுடன் பேசும் போது, மரியாதையாக "சார்'' போட்டு பேசுவார்.
ரஜினியை நான் தனியாக இயக்கியதில்லை. இப்படத்தின் ஒரு சிறு காட்சியை
படமாக்கும் பொறுப்பை என்னிடம் ஸ்ரீதர் ஒப்படைத்தார்.
மெக்கானிக் ஷெட்டில் ரஜினி வேலை செய்வார். அப்போது அவர் டெலிபோனில்
பேசுவது போன்றதுதான் அக்காட்சி. அப்போது உணர்ச்சி ததும்ப நடித்தார்.
சூப்பர் ஸ்டாரை அந்த ஒரு காட்சியில் இயக்கியதை பெருமையாக
கருதுகிறேன்.
பிறந்த நாள்
ஊட்டியில் படப்பிடிப்பு நடந்தபோது, ரஜினியின் பிறந்தநாள் வந்தது.
பிறந்த நாளை ஆடம்பரமாகக் கொண்டாட விரும்பாதவர் ரஜினி. ஆயினும்,
சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார், பட அதிபர் கே.ஆர்.ஜி.
ரஜினியின் மனைவி லதாவும் ஊட்டி வந்து, இந்த விழாவில் கலந்து
கொண்டார்.
ரஜினியின் பிறந்த நாளில் பங்கு கொண்ட அந்த நாளையும் என்னால் மறக்க
முடியாது.''
இவ்வாறு சித்ராலயா கோபு கூறினார்.
தாய் வீடு
தேவர் பிலிம்ஸ் தயாரித்த "தாய் வீடு'' படத்தில், கார் திருடனாக
ரஜினி நடித்தார்.
சிறுவனாக இருக்கும்போதே, ரஜினியை திருடர்கள் கடத்திச்சென்று
விடுகிறார்கள். அதனால் அவரும் கார் திருடனாக மாறுகிறார். அப்போது
சொந்த வீட்டிலேயே திருட நேரிடுகிறது.
தன் கதையை அறிந்து கொள்ளும் ரஜினி, கொள்ளைக் கூட்டத்தினரை பழி
வாங்குகிறார்.
இதில் ரஜினியுடன் இந்தி நடிகை அனிதாராஜ் ஜோடியாக நடித்தார்.
சுஹாசினி தங்கையாக நடித்தார். மற்றும் சில்க் சுமிதா, பண்டரிபாய்,
அருணா இராணி, ஜெய்சங்கர், மேஜர் சுந்தரராஜன், எம்.என்.நம்பியார்,
விஜயகுமார், ராஜேஷ் ஆகியோர் நடித்தனர். ஆர்.தியாகராஜன் டைரக்ட்
செய்தார். இந்தி இசை அமைப்பாளர் பப்பி-லஹரி இசை அமைத்தார்.
14-4-1983-ல் வெளிவந்த இப்படம் நூறு நாள் ஓடியது.
சிவப்பு சூரியன்
மாயா ஆர்ட் நிறுவனத்துக்காக முக்தா பிலிம்ஸ் தயாரித்த படம் "சிவப்பு
சூரியன்.''
இதை முக்தா சீனிவாசன் டைரக்ட் செய்தார். கதை-வசனம்: செல்வகுமார்.
வாலியின் பாடல்களுக்கு இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.
ரஜினிகாந்துக்கு ஜோடியாக ராதா நடித்தார். மற்றும் சரிதா, மனோரமா,
சில்க் சுமிதா, சிவகாமி, தேங்காய் சீனிவாசன், ஒய்.ஜி.மகேந்திரன்,
சிவசந்திரன், சங்கிலி முருகன், ராதாரவி ஆகியோரும் நடித்தனர்.
27-5-1983-ல் வெளிவந்த இப்படமும் நூறு நாள் படமாக அமைந்தது.
தெலுங்கிலும் இப்படம் `டப்' செய்யப்பட்டது.
>>> Part 48
| |