ரஜினி நடித்த இந்திப்படம்
"அந்தா கானூன்'' மகத்தான வெற்றி
இந்திப்பட உலகில் வெற்றி உலா
ரஜினிகாந்த் நடித்த முதல் இந்திப்படமான "அந்தாகானூன்'' மகத்தான
வெற்றி பெற்றது.
தமிழில் வெற்றி மேல் வெற்றி பெற்று, சூப்பர் ஸ்டாராக உயர்ந்த
ரஜினிகாந்துக்கு, இந்திப் பட உலகில் இருந்தும் நறைய அழைப்புகள்
வந்தன.
சட்டம் ஒரு இருட்ட
தமிழில், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய "சட்டம் ஒரு இருட்டறை''
மாபெரும் வெற்றி பெற்றது. இதில் கதாநாயகனாக நடித்த விஜயகாந்த்,
நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
பெற்றோர்களை படுகொலை செய்த கொடியவர்களை மகன் பழிவாங்குவதுதான் கதை.
இந்தி "ஷோலே'' படம் போல, எதிர்பாராத திருப்பங்களும் உள்ளத்தைத்
தொடும் சம்பவங்களும் நிறைந்த கதை. இதை எழுதியவர் இயக்குனர்
சந்திரசேகரின் மனைவியும், நடிகர் விஜய் தாயாருமான ஷோபா.
இந்தக் கதையை இந்தியில் "அந்தா கானூன்'' என்ற பெயரில் படமாக்க,
பிரபல பட அதிபர் பூர்ணசந்திரராவ் முடிவு செய்தார். கதாநாயகனாக
நடிக்க, ரஜினியை அழைத்தார். தமிழில் நிறைய படங்களில் நடித்துக்
கொண்டிருந்தாலும், இந்தப்படம் நிச்சயம் `ஹிட்' ஆகும் என்று கருதி,
தேதி கொடுத்தார், ரஜினி.
ஹேமமாலினி
ரஜினிக்கு அக்காவாக, போலீஸ் அதிகாரி வேடத்தில் ஹேமமாலினி நடித்தார்.
அமிதாப்பச்சன், பிரான், பிரேம் சோப்ரா, டானி, ரீனாராய் ஆகியோரும்
இடம் பெற்றனர்.
ரஜினி, தன் சொந்தக் குரலில் பேசி நடித்தது குறிப்பிடத்தக்கது.
ரஜினிக்கு இந்தி அதிகம் தெரியாதாகையால், அவர் டப்பிங் பேசுவதற்கு,
டப்பிங் தியேட்டரை 4 நாட்களுக்கு `புக்' செய்து வைத்திருந்தார்கள்.
ஆனால், ரஜினி மிக சரளமாக இந்தி பேசி ஒரே நாளில் டப்பிங் வேலைகளை
முடித்துக் கொடுத்தார்.
மசாலா படங்களை டைரக்ட் செய்வதில் மன்னர் என்று பெயர் பெற்றிருந்த
ராமாராவ், இப்படத்தை டைரக்ட் செய்தார்.
50 வாரம்
ரஜினியின் இந்த முதல் இந்திப்படம் 7-4-1983-ல் வெளிவந்து, மெகாஹிட்
படமாக அமைந்தது.
வடநாட்டில் இப்படம் 50 வாரம் ஓடியது. சென்னையில் 25 வாரம் ஓடி
வெள்ளி விழா கொண்டாடியது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, மேலும் பல இந்திப் படங்களில் ரஜினி
நடித்தார். அவர் நடித்த இந்திப் படங்களின் எண்ணிக்கை 24.
இவை எல்லாமே வெற்றிப்படங்கள். "காங்குவா'' 50 வாரமும், "மேரி அதாலத்'',
"சாலபாஸ்'', "ஹம்'', "பூல்பனே அங்காரே'' ஆகிய படங்கள் 25 வாரமும்,
மற்ற படங்களில் பெரும்பாலானவை நூறு நாட்களுக்கு மேலும் ஓடின.
அதிசயம்
தமிழ்நாட்டில் இருந்து வடக்கே போன வைஜயந்திமாலா, ஹேமமாலினி, வகீதா
ரஹ்மான், ஸ்ரீதேவி ஆகியோர் வெற்றி பெற்று ஏராளமான படங்களில்
நடித்தனர்.
கமலஹாசன், "ஏக் து ஜே கேலியே'' உள்பட சில வெற்றிப் படங்களில்
நடித்தார்.
ஆனால், நடிகைகளை ஏற்றுக்கொண்டது போல் நடிகர்களை இந்திப்பட உலகம்
ஏற்றுக்கொண்டது இல்லை. நடிகர்கள் அங்கு நிலைத்து நிற்க முடியாமல்
திரும்பிவிட்டனர். இதிலும் விதிவிலக்காக, ரஜினிகாந்த் 24
இந்திப்படங்களில் நடித்து சாதனை படைத்தார்.
"கமலஹாசன் நடித்த `ஏக் து ஜே கேலியே' படம் சிறப்பாக அமைந்து, பெரிய
வெற்றி பெற்றது. அது ஏற்படுத்திய தாக்கத்தினால்தான் நான்
இந்திப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்'' என்று மனம் திறந்து
கூறியுள்ளார், ரஜினி.
தியாகராஜன் அனுபவம்
சாண்டோ சின்னப்பதேவரின் மருமகனான தியாகராஜன், ரஜினி நடித்த பல
படங்களை இயக்கியுள்ளார். ரஜினி நடித்த "பேவபா'' என்ற இந்திப்படத்தை
இயக்கியவரும் அவரே.
அப்போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து அவர் கூறியதாவது:-
"ரஜினிக்கு எப்போதுமே தன்னம்பிக்கை அதிகம். யாருடன் நடிக்க
அழைத்தாலும், கவலைப்படாமல் நடித்துக் கொடுப்பார். வில்லனாக
ஆரம்பித்து, பிற்பகுதியில் கதாநாயகன் ஆகிற கேரக்டர்கள் அவருக்கு
ரொம்பவே பொருந்தின
"பேவபா'' இந்திப் படத்தில் ராஜேஷ் கன்னாவுடன் நடித்தபோது,
கறுகறுவென்றிருந்தாலும் ரஜினியைப் பார்க்கவே நட்சத்திரங்கள்
கூட்டமாக வருவார்கள்.
இவர்களில் இந்தி முன்னணி நடிகர்கள் ஜாக்கி ஷெராப், அனில்கபூர்
போன்ற பிரபலங்களும் உண்டு.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது ஒருநாள்
ராஜேஷ் கன்னா என்னிடம், "ரஜினியின் கண்களில் ஒரு `பவர்' இருக்கிறது.
அதனால் அவர் கண்ணை என்னால் நேருக்கு நேராகப் பார்க்க முடியவில்லை.
அதனால் ஒரே பிரேமில் நாங்கள் நேருக்கு நேராக பார்ப்பது மாதிரி
எடுக்காதீர்கள்'' என்று கேட்டுக்கொண்டார்.
படத்தின் "கிளைமாக்ஸ்'' காட்சியில் இருவரும் சேர்ந்து நடித்தாக
வேண்டும். இதில், ரஜினிதான் எல்லாரையும்விட நடிப்பில் பெயரை
தட்டிக்கொண்டு போனார்.
மும்பையில் நடந்த படப்பிடிப்பின்போது, ரஜினியை பார்க்க யார்
வந்தாலும் அவரைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். அவர்
சம்பந்தப்பட்ட காட்சி இல்லாவிட்டால், செட்டில் எங்காவது ஒரு
மூலையில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பார். ரஜினியின் இந்த
எளிமைதான், இந்தி நடிகர்களை எல்லாம் ஆச்சரியப்பட வைத்தது.''
இவ்வாறு டைரக்டர் தியாகராஜன் கூறினார்.
(பெயர் மாற்றத்துடன் வந்த "நான் மகான் அல்ல'' - நாளை)
***
ரஜினி நடித்த திரைப்படங்கள்
படம் வெளியான தேதி டைரக்டர்
101 பேவபா (இந்தி) 20-09-1985 ஆர்.தியாகராஜன்
102 படிக்காதவன் 11-11-1985 ராஜசேகர்
103 மிஸ்டர் பாரத் 10-01-1986 எஸ்.பி.முத்துராமன்
104 நான் அடிமை இல்லை 01-03-1986 துவாரகீஷ்
105 ஜீவன போராட்டம் (தெலுங்கு) 10-04-1986 ராஜா சந்திரா
106 விடுதலை 11-04-1986 கே.விஜயன்
107 பகவான் தாதா (இந்தி) 25-04-1986 ஓம் பிரகாஷ்
108 அஸ்லி நகலி (இந்தி) 17-10-1986 சுதர்சன்நாக்
109 தோஸ்தி துஷ்மன் (இந்தி) 31-10-1986 டி.ராமராவ்
110 மாவீரன் 01-11-1986 ராஜசேகர்
111 வேலைக்காரன் 07-03-1987 எஸ்.பி.முத்துராமன்
112 இன்சாஸப் கோன் சுரேங்கா 19-06-1987 சுதர்சன நாக் (இந்தி)
113 ஊர்க்காவலன் 04-08-1987 மனோபாலா
114 மனிதன் 02-10-1987 எஸ்.பி.முத்துராமன்
115 உத்தர் தக்ஷின் (இந்தி) 13-11-1987 பிரபாத் கன்னா
116 தாமச்சா (இந்தி) 26-02-1988 ரமேஷ் அகுஜா
117 குரு சிஷ்யன் 13-07ற-1988 எஸ்.பி.முத்துராமன்
118 தர்மத்தின் தலைவன் 24-09-1988 எஸ்.பி.முத்துராமன்
119 பிளட் ஸ்டோன் (ஆங்கிலம்) 07-10-1988 டுவைட் லிட்டில்
120 கொடி பறக்குது 08-11-1988 பாரதிராஜா
>>> Part 49
|