|
பெயர்
மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல''
கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!
ரஜினி நடிக்க, கவிதாலயா தயாரித்த "நான்
காந்தி அல்ல'' என்ற படம், கடைசி நேரத்தில் "நான் மகான் அல்ல''என்று
பெயர் மாற்றப்பட்டு வெளிவந்தது.
எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்த படம் இது. ரஜினியும்,
முத்துராமனும் இணைந்த 13-வது படம் இது.
இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடி ராதா.
நான் காந்தி அல்ல
நாட்டில் நடக்கும் ஊழல்களை ஒழித்து, நீதியை நிலைநாட்ட ரஜினி முயற்சி
செய்வார். ஆனால் அயோக்கியர்களை அகிம்சை வழியில் திருத்த முடியாமல்
போனதால், சட்டத்தைக் கையில் ஏந்துவார். அக்கிரமக்காரர்களை
ஒழித்துக்கட்டுவார்.
கதை அமைப்பை கருத்தில் கொண்டு, இதற்கு "நான் காந்தி அல்ல'' என்று
பெயர் சூட்டியிருந்தார்கள்.
வழக்கு
ஆனால், படம் வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, படத்தின்
பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. "காந்தியை
தேசப்பிதாவாகப் போற்றுகிறோம். அப்படியிருக்க, "நான் காந்தி அல்ல''
என்று பெயர் வைப்பது அவரை அவமதிப்பது ஆகும்'' என்று வழக்கில்
குறிப்பிடப்பட்டது.
இதன் காரணமாக, படத்தின் பெயர் "நான் மகான் அல்ல'' என்று
மாற்றப்பட்டு, 14-1-1984-ல் படம் ரிலீஸ் செய்யப்பட்டது.
கண்ணாடி மாளிகை
படத்தின் "கிளைமாக்ஸ்'' சண்டைக்காட்சி புதுமையான கண்ணாடி மாளிகையில்
படமாக்கப்பட்டது.
ரஜினியும், வில்லன்களும் சண்டை போடும்போது, கண்ணாடியில் பல
உருவங்களாகத் தெரிவார்கள். நிஜமான ஆள் யார், பிம்பம் எது என்பதே
தெரியாது! புதுமையான இந்த சண்டைக்காட்சி, மெய்சிலிர்க்கச் செய்யும்
வகையில் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு இருந்தது.
வக்கீல்
இப்படத்தில், ரஜனி வக்கீலாக தோன்றி பக்கம் பக்கமாக எழுதப்பட்ட
நீண்ட வசனங்களை தெளிவாகப் பேசி நடித்தது குறிப்பிடத்தக்கது. (வசனம்:
ஏ.எல்.நாராயணன்)
நீதிபதியைப் பார்க்கும் கேமரா, பிறகு ரஜினியை நோக்கித் திரும்பும்.
ரஜினி நடந்தபடியே வாதம் செய்வார். கேமரா அவரையே சுற்றிச் சுழலும்.
ரஜினி பேசி முடித்ததும், கடைசியில் நீதிபதியிடம் சென்று "ஷாட்''
முடிவடையும்.
டிராலியில் காமிராவை வைத்து, ஒரே ஷாட்டில் இக்காட்சியை அற்புதமாக
படமாக்கியிருந்தார்கள்.
நீண்ட வசனங்களையும் ரஜினி தடங்கலின்றி கம்பீரமாகப் பேசுவார் என்பதை
இப்படம் எடுத்துக்காட்டியது.
இது, 100 நாள் படமாக அமைந்தது.
அடுத்த வாரிசு
பிரபல கன்னட படத் தயாரிப்பாளரும், நடிகருமான துவாரகேஷ் தயாரித்த
படம். "ராஜாராணி'' என்ற இந்திப் படத்தின் கதையைத் தழுவி இது
தயாரிக்கப்பட்டது. திரைக்கதை - வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுத,
எஸ்.பி.முத்துராமன் இயக்கினார்.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடி ஸ்ரீதேவி. மற்றும் சில்க் சுமிதா,
மனோரமா, எஸ்.வரலட்சுமி, ரவீந்தர், ஜெய்சங்கர், வி.கே.ராமசாமி, சோ,
செந்தாமரை, வி.கோபாலகிருஷ்ணன், சி.எல்.ஆனந்தன், எஸ்.எஸ்.சந்திரன்
ஆகியோரும் நடித்தனர்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் உதயபூரில் படமாக்கப்பட்டன. இதில்
ஆனந்தனுடன் ரஜினி போட்ட கத்திச்சண்டை புதுமையாகவும்,
விறுவிறுப்பாகவும் இருந்தது. வாள் வீச்சிலும் புது ஸ்டைலை கையாண்டு
வெற்றி பெற்றார், ரஜினி.
7-7-1983-ல் வெளிவந்த இந்தப்படம் வெற்றி பெற்று, "தங்கரி தொங்கா''
என்ற பெயரில் தெலுங்கிலும் "டப்'' செய்யப்பட்டது.
247 நாள் ஓடிய "தங்கமகன்''
ரஜினிகாந்த் நடித்த சத்யா மூவிஸ் "தங்க மகன்'' படம், பெரிய வெற்றி
பெற்றது.
எஸ்.ஜெகதீசன் எழுதிய கதைக்கு,
ஆர்.எம்.வீரப்பன் திரைக்கதை எழுதினார். வாலி, வைரமுத்து,
முத்துலிங்கம், புலமைப்பித்தன், நா.காமராசன் ஆகியோர் எழுதிய
பாடல்களுக்கு இளையராஜா இசை அமைத்தார். ஏ.ஜெகந்நாதன் டைரக்ட்
செய்தார்.
ரஜினிக்கு ஜோடியாக பூர்ணிமா ஜெயராம் நடித்தார். மற்றும் விஜயகுமாரி,
சில்க் சுமிதா, அனுராதா, மனோரமா, ஜெய்சங்கர், தேங்காய் சீனிவாசன்,
ரவீந்தர், வி.கே.ராமசாமி, மனோகர், வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர்
நடித்தனர்.
ரஜினியின் நடிப்பும், படப்பிடிப்பும், பாடல் காட்சிகளும் சிறப்பாக
இருந்தன.
வில்லன்களிடம் இருந்து பூர்ணிமாவை காப்பாற்ற, ஜீப்பை சுற்றிச்சுற்றி
ஓட்டியபடி ரஜினி போட்ட சண்டை விறுவிறுப்பாக இருந்தது.
படத்தின் பிற்பகுதியில் ரெட்டியார் வேடத்தில் ரஜினி தோன்றி,
தெலுங்கு பேசி அசத்துவார். ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க
வைத்த காட்சி இது.
சென்னையில் நூறு நாட்களைத் தாண்டி ஓடிய இப்படம், மதுரையில் 247
நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
தம்பிக்கு எந்த ஊரு?
பஞ்சு அருணாசலத்தின் பி.ஏ. ஆர்ட் புரொடக்ஷன்ஸ் தயாரித்த படம் "தம்பிக்கு
எந்த ஊரு.''
இதில் ரஜினிக்கு ஜோடி மாதவி. மற்றும் சுலக்ஷனா, வாணி, கோவை சரளா,
செந்தாமரை, வி.எஸ்.ராகவன், வினுசக்ரவர்த்தி, ஸ்ரீகாந்த், ஜனகராஜ்
நடித்தனர்.
பஞ்சு அருணாசலம் எழுதிய பாடல்களுக்கு, இளையராஜா இசை அமைத்தார்.
ராஜசேகர் டைரக்ட் செய்தார்.
இந்தப் படத்தில் வில்லனாக சத்யராஜ் நடித்தார். படப்பிடிப்பின்போது
சத்யராஜின் நடிப்பை ரஜினி பாராட்டியதுடன், "எதிர்காலத்தில்
கதாநாயகனாக வெற்றி பெறுவீர்கள்'' என்று வாழ்த்தினார். சத்யராஜின்
இன்றைய வெற்றியை அன்றே கணித்தவர் ரஜினி.
இந்தப் படத்துக்கு, ஆரம்பத்தில் "நானே ராஜா, நீயே ராணி'' என்று
பெயர் வைத்திருந்தனர். பிறகு பெயர் மாற்றப்பட்டது.
"தம்பிக்கு எந்த ஊரு'', நூறு நாட்கள் ஓடிய வெற்றிப்படம்.
>>> Part 50
| |