கன்னடத்தில்
இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை'
முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்
கன்னடத்தில் வெளிவந்த "கதாசங்கமா''
என்ற படம், தமிழில் "கை கொடுக்கும் கை'' என்ற பெயரில் தயாராகியது.
கன்னடத்தில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த், தமிழில் கதாநாயகனாக
நடித்தார்.
நடிகர் விஜயகுமார், ரஜினியை வைத்து சொந்தமாகப் படம் தயாரிக்க
விரும்பினார். அதை ஏற்றுக்கொண்ட ரஜினி, திரைக்கதை, வசனம், டைரக்ஷன்
ஆகிய பொறுப்புகளை மகேந்திரனிடம் ஒப்படைக்குமாறு கூறினார்.
ஒரே படத்தில் 3 கதைகள்
கன்னடத்தில் பிரபல டைரக்டராக விளங்கியவர் புட்டண்ணா. அவர் 1976-ல்
"கதா சங்கமா'' என்ற படத்தை எடுத்தார். அந்தப் படத்தில், 3
எழுத்தாளர்களின் மூன்று கதைகள் இடம் பெற்று இருந்தன. மூன்று
கதைகளிலும் வெவ்வேறு நடிகர் - நடிகைகள் நடித்திருந்தனர்.
மூன்றாவது கதையின் பெயர் "முனிதாயி.'' அதை விரிவுபடுத்தி, "கை
கொடுக்கும் கை'' என்ற பெயரில் படமாக்க மகேந்திரன் முடிவு செய்தார்.
"முனிதாயி'' கதை புரட்சிகரமானது. கதாநாயகியான முனிதாயி, பார்வையற்ற
பெண். முற்போக்கான இளைஞன் ஒருவன் அவளைத் திருமணம் செய்து கொள்கிறான்.
அந்த வீட்டில் வேலை செய்யும் சிறுவன் - முனிதாயியை "அக்கா'' என்று
அழைப்பவன் - ஒரு நாள் அவள் குளிப்பதை பார்த்து விடுகிறான்.
அந்த ஊரில், குடித்து விட்டு சீட்டாடி பொழுதைப் போக்கும் போக்கிரிக்
கூட்டம் ஒன்று உண்டு. அந்தக் கூட்டத்திற்கு தலைவர் ரஜினிகாந்த்.
முனிதாயி குளிப்பதைத் தான் பார்த்தது பற்றி வேலைக்கார சிறுவன்
வர்ணிக்க, அவனிடம் பணம் கொடுத்து விட்டு, குளியல் காட்சியை
பார்க்கிறார், ரஜினிகாந்த்.
ஒரு நாள் இரவு. கணவன் இல்லாத நேரம். வேலைக்கார பையனின் துணையோடு,
கணவன் போல் நடித்து முனிதாயின் கற்பை சூறையாட முயல்கிறார், ரஜினி.
ஆனால் முனிதாயி, உண்மையைத் தெரிந்து கொண்டு கற்பைக் காப்பாற்றிக்
கொள்ளப் போராடுகிறாள். ஆனால், தோற்றுப்போகிறாள்.
மறுநாள் கணவன் வந்ததும், நடந்ததைச் சொல்லிக் கதறுகிறாள். "நான்
கற்பைப் பறிகொடுத்தவள். உங்களுக்கு ஏற்றவள் அல்ல'' என்று கூறுகிறாள்.
ஆனால் கணவனோ, "முனிவர் மனைவியான அகல்யா மீது ஆசை கொண்ட இந்திரன்,
முனிவரைப் போல் வேடம் போட்டு, அவள் கற்பை சூறையாடினான். கண்
இருந்தும், அகல்யா கற்பிழந்தாள். நீயோ கண் இல்லாதவள்.
அப்படியிருந்தும் கற்பைக் காப்பாற்றிக்கொள்ள போராடி இருக்கிறாய்.
நீ நிரபராதி. நடந்ததை இருவரும் மறந்துவிடுவோம்'' என்கிறான்.
முனிதாயி மனம் நெகிழ்ந்து, "கற்பிழந்த அகல்யாவை முனிவர் கல்லாக
சபித்தார். நீங் களோ என்னை மன்னித்து ஏற்றுக் கொள்கிறீர்கள்.
நீங்கள் முனிவர் அல்ல; தெய்வம்'' என்று கூறுகிறாள்.
ரஜினியும், அவருக்கு உதவிய வேலைக்கார பையனும் ஊரை விட்டே
ஓடிவிடுகிறார்கள்.
ரஜினி - ரேவதி
கதையில் சிற்சில மாற்றங்கள் செய்து படமாக்கினார், மகேந்திரன்.
பாடல்களை வாலி, புலமைப்பித்தன், நா.காமராசன், கங்கை அமரன் ஆகியோர்
எழுத, இளையராஜா இசை அமைத்தார்.
"கதா சங்கமா'' படத்தில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த், இதில்
கதாநாயகனாக நடித்தார். குருட்டுப்பெண் வேடத்தில் ரேவதி நடித்தார்.
மற்றும் சவுகார் ஜானகி, ராஜலட்சுமி, ரங்கநாத், ஒய்.ஜி.மகேந்திரன்,
தேங்காய் சீனிவாசன், சின்னிஜெயந்த், பூர்ணம் விஸ்வநாதன், வீரராகவன்
ஆகி யோர் இடம் பெற்றனர்.
15-6-1984-ல் வெளிவந்த "கை கொடுக்கும் கை'', நூறு நாட்களுக்கு மேல்
ஓடி வெற்றி பெற்றது.
ஜான், ஜானி, ஜனார்த்தன்
ரஜினிகாந்த் நடித்த இந்திப்படமான "ஜான், ஜானி, ஜனார்த்தன்'' இந்தியா
முழுவதும் ஒரே நாளில் (26-10-1984 ல்) வெளிவந்தது. தமிழில்
வெளிவந்த "மூன்று முகம்'' படம்தான், இந்தப் பெயரில் ரீமேக்
செய்யப்பட்டது. இந்தப் படத்தில், ரஜினிக்கு ஜோடி ரதி.
இதற்கு முன் திலீப்குமார், அமிதாப்பச்சன் ஆகியோர்தான் இந்தியில்
மூன்று வேடங்களில் நடித்தவர்கள். அவர்களைவிட ரஜினி மூன்று
வேடங்களில் சிறப்பாக நடித்திருப்பதாக, இந்திப்பட உலகம் பாராட்டியது.
இந்தப்படம் வெள்ளி விழா கொண்டாடியது.
>>> Part 51
|