தனிச்சிறப்பு
வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்''
ரஜினியாகவே ரஜினி நடித்த படம்
கதை வசன ஆசிரியர் தூயவனும், பட
அதிபர் `அழகன்' தமிழ்மணியும் சேர்ந்து உருவாக்கிய படம் "அன்புள்ள
ரஜினிகாந்த்.''
இந்தியாவிலேயே எந்த ஒரு நடிகரின் பெயரையும் தலைப்பாக வைத்து படம்
தயாரிக்கப்பட்டது இல்லை. அந்தப் பெருமை ரஜினிக்கு மட்டுமே கிட்டியது.
இதன் கதை, திரைக்கதை, வசனத்தை தூயவன் எழுதினார். ரஜினிகாந்த்,
கவுரவ வேடத்தில் (ரஜினிகாந்தாகவே) நடித்தார்.
ரஜினிகாந்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும், அதே சமயம் படம் "டாக்குமெண்டரி''
போல் இல்லாமல் நவரசம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில்
கொண்டு, கதையை வெகு திறமையாக உருவாக்கியிருந்தார், தூயவன்.
கருணை இல்லம்
அனாதைக் குழந்தைகளின் புகலிடமான "கருணை இல்ல''த்தையும், அதில்
வசிக்கும் உடல் ஊனமுற்ற சிறுமி ரோசியையும் (மீனா) சுற்றிச்
சுழல்கிறது, கதை.
பெற்றோர் யார் என்று தெரியாத அனாதைக் குழந்தை ரோசி. பிறந்த சில
நிமிடங்களிலேயே கேட்பாரற்று கிடந்த அவள், கருணை இல்லத்தில்
சேர்க்கப்படுகிறாள்.
தன்னை அனாதையாக விட்டு விட்டுப்போனதால், `அம்மா' என்ற சொல்லைக்
கேட்டாலே ரோசிக்கு வெறுப்பு. யாருடனும் பேசுவது இல்லை; சிரிப்பது
இல்லை.
கருணை இல்லத்து "மதர்'' (மணிமாலா), ஆயா (அம்பிகா) ஆகியோர் ரோசியிடம்
தனி அன்பு செலுத்துகிறார்கள்.
ரஜினி வருகை
ஒருநாள், கருணை இல்லத்துக்கு ரஜினிகாந்த் வருகை தருகிறார். அவர்
பேசும்போது, எல்லாக் குழந்தைகளும் கைதட்டி மகிழ, ரோசி மட்டும் `உம்'
என்று இருக்கிறாள். அது மட்டுமல்ல; ரஜினி கொடுக்கும் சாக்லெட்டை
தூக்கி எறிகிறாள்; பூங்கொத்தை வீசி எறிகிறாள்.
இந்நலையில், ரஜினி நடித்த "அன்னை ஓர் ஆலயம்'' படம், அனாதை இல்லக்
குழந்தைகளுக்குத் திரையிட்டுக் காண்பிக்கப்படுகிறது.
தாயிடம் ரஜினி காட்டும் அன்பு, பிடித்து வைத்திருந்த
மிருகங்களையெல்லாம் தாயின் விருப்பப்படி அவர் `விடுதலை' செய்வது,
படத்தின் இறுதியில் தாய் யானையுடன் குட்டி யானையை சேர்த்து வைப்பது
போன்ற காட்சிகள் ரோசியிடம் பெரிய மனமாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
ரஜினியிடம் மிகுந்த அன்பு கொள்கிறாள். டெலிபோன் செய்து மன்னிப்பு
கேட்கிறாள்.
அதன் பிறகு ரஜினிக்கு ரோசி கடிதம் எழுத, அவளுக்கு ரஜினி பதில் எழுத
இருவருக்கும் இடையே அன்பும், பாசமும் வளருகின்றன.
அம்பிகாவின் குழந்தை
இதற்கிடையே, தன் குழந்தைதான் ரோசி என்ற உண்மை அம்பிகாவுக்குத்
தெரிகிறது.
அம்பிகா வாழ்க்கை பற்றிய "பிளாஷ்பேக்'':
அம்பிகா ஒரு பணக்காரரின் (செந்தாமரையின்) மகள். தந்தைக்குத்
தெரியாமல் காதல் திருமணம் செய்து கொள்கிறார். தம்பதிகள் ஒரு நாள்
மட்டுமே மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். மறுநாள், செந்தாமரையின்
ஆட்களால் அம்பிகாவின் கணவன் கொல்லப்படுகிறான்.
ஒரே ஒரு நாள் கணவனுடன் வாழ்ந்த வாழ்க்கையால், அம்பிகா ஒரு
குழந்தைக்கு தாயாகிறார். பிறந்தவுடனேயே, செந்தாமரையின் சூழ்ச்சியால்
குழந்தை பிரிக்கப்பட்டு கருணை இல்லத்தில் சேர்க்கப்படுகிறது.
மறுமணம் செய்து கொள்ள மறுத்து, கருணை இல்லத்தில் `ஆயா'வாகச்
சேருகிறார், அம்பிகா.
சொந்தக் குழந்தைக்கே "ஆயா''வாக இருக்க நேரிட்ட அவலத்தை எண்ணி
கலங்கும் அம்பிகா, ரோசி தன் குழந்தை என்பதை வெளிப்படுத்த
துடிக்கிறார். ஆனால், "ரோசிக்கு இதய நோய்; அதிக சந்தோஷமோ, அதிக
துக்கமோ ஏற்பட்டால் அவள் இறந்து விடுவாள்'' என்பதை அறிந்ததால்,
உண்மையை வெளிப்படுத்த முடியாமல் குமுறுகிறார்.
இதையெல்லாம் அறியும் ரஜினி, பெரிய டாக்டர்களையெல்லாம் அழைத்து
ரோசியைக் காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறார். ஆனால்
பலன் இல்லை. அம்பிகாதான் தன் தாயார் என்பதை அறிந்து கொண்டு, அவரை "அம்மா''
என்று அழைத்தபடி உயிர் விடுகிறாள், ரோசி.
உள்ளத்தை தொடும் காட்சிகள்
இந்தப் படத்தை டைரக்ட் செய்தவர் கே.நட்ராஜ். நடிப்புப்பயிற்சி
கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றியவர். ரஜினியின் நண்பர். படத்தை
விறுவிறுப்புடன் இயக்கி இருந்தார்.
படம் முழுவதும், உள்ளத்தைத் தொடும் காட்சிகள் நிறைந்திருந்தன.
ரஜினிகாந்த், கடினமான கதாபாத்திரங்களையும் லேசாக ஊதித்தள்ளுபவர்.
ரஜினி, ரஜினியாக நடிப்பது சிரமமா என்ன? இயல்பான ரஜினியைக்
காணவேண்டுமானால், இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.
சிறுமியாக இருக்கும்போதே மீனாவிடம் நல்ல நடிப்புத் திறமை இருந்ததை
இப்படம் உணர்த்தியது. அதனால்தான் குமரியான பிறகு "முத்து'' படத்தில்
ரஜினிக்கு ஜோடியாக நடிக்க முடிந்தது.
மீனாவின் கனவில், "முத்துமணி சுடரே வா; முல்லை மலர் சரமே வா!''
என்று ரஜினி பாடி ஆடும் காட்சி கண்ணுக்கு குளிர்ச்சி.
ரஜினிகாந்த் கிருஷ்ணதேவராயராகவும், கே.பாக்யராஜ் தெனாலிராமனாகவும்
நடித்த ஓரங்க நாடகம், வயிறு வலிக்க சிரிக்க வைத்தது.
மணிமாலா, அம்பிகா ஆகியோரும் பாத்திரத்தை உணர்ந்து நடித்தனர்.
ரஜினி வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக விளங்கிய "அன்புள்ள ரஜினிகாந்த்'',
2-8-1984 ல் வெளிவந்து, நூறு நாட்கள் ஓடியது.
>>> Part 52
|