ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்'
சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம்
சிறந்த நடிப்புக்காக ரஜினிகாந்த் பல விருதுகளை பெற்ற படம் "நல்லவனுக்கு
நல்லவன்.''
தெலுங்கில் வெளிவந்த "தர்மாத்மூடு'' என்ற படத்தின் கதையை வைத்து,
ஏவி.எம். தயாரித்த படம் இது. திரைக்கதை, வசனத்தை விசு எழுத,
எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.
வாலி, வைரமுத்து, கங்கை அமரன், முத்துலிங்கம், நா.காமராசன் ஆகியோர்
பாடல்களை எழுத, இளையராஜா இசை அமைத்தார்.
கதை
படத்தின் தொடக்கத்தில், `அடிதடியே வாழ்க்கை' என்று கருதும் இளைஞன்
கேரக்டரில் அறிமுகமாகிறார், ரஜினி. அவரை தன் நற்பண்புகளால் கவர்ந்து,
மனைவியாகிறார், ராதிகா.
`ஒரு பிடி சோறு சாப்பிட்டாலும், அது உங்கள் உழைப்பில் கிடைத்ததாக
இருக்க வேண்டும்' என்று ரஜினியிடம் கூறுகிறார், ராதிகா. அது
ரஜினியின் போக்கை மாற்றி விடுகிறது.
அவருடைய கடும் உழைப்பும், நேர்மையும் ஒரு மில் அதிபரை (விசு) கவர,
மில் நிர்வாகியாகிறார், ரஜினி.
அந்த மில் முதலாளிக்கு ஒரு உதவாக்கரை மகன் (கார்த்திக்). அவரைத்
திருத்த முயற்சிக்கிறார், ரஜினி.
காலச்சக்கரம் வேகமாக சுழல்கிறது. இப்போது ரஜினி, நடுத்தர வயது
மனிதர். அவருக்கு ஒரு அழகான மகள் (துளசி). அவள் கார்த்திக்
பார்வையில் விழ, காதல் அரும்பி, பெற்றோர் எதிர்ப்பை மீறி
கல்யாணத்தில் முடிகிறது.
மகளின் திருமணத்தால் மனம் உடைந்த ராதிகா, உயிர் துறக்கிறார்.
கார்த்திக் உயிருக்கு, அவருடைய நண்பர்களாலேயே ஆபத்து ஏற்படுகிறது.
தக்க நேரத்தில் ரஜினி அவரைக் காப்பாற்றுகிறார். கார்த்திக்
திருந்துகிறார். சிதறிய குடும்பங்கள் ஒன்று சேருகின்றன.
மூன்றுவித தோற்றங்கள்
ரவுடி இளைஞன், நடுத்தர வயதுக்காரர், வயதானவர் என்று, மூன்று
காலக்கட்டத்தையும் ரஜினி தனது பண்பட்ட நடிப்பில் துல்லியமாக பதிவு
செய்த படம் இது. "சிட்டுக்கு - சின்ன சிட்டுக்கு ஒரு சிறகு
முளைத்தது'' என்று, ஓடிப்போன மகளைப்பற்றி ரஜினி பாடும் காட்சி,
மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.
பட வாய்ப்புகள் சரிவர அமையாமல் இருந்த காலக்கட்டத்தில், இந்தப்
படத்தின் மூலம் கார்த்திக் மீண்டும் "பிசி''யானார்.
மற்றும் ஒய்.விஜயா, வி.கே.ராமசாமி, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரும்
இப்படத்தில் நடித்திருந்தனர்.
விருதுகள்
சிறந்த நடிப்புக்காக, பிலிம்பேர், சினிமா எக்ஸ்பிரஸ் பரிசுகள்
உள்பட பல விருதுகள் இப்படத்தின் மூலம் ரஜினிக்கு கிடைத்தன.
22-10-1984 ல் வெளிவந்த இப்படம் 154 நாட் கள் ஓடியது.
நான் சிகப்பு மனிதன்
பூர்ணசந்திரராவ் தனது லட்சுமி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்த படம்
"நான் சிகப்பு மனிதன்.''
இது, "ஆஜ்கி ஆவாஸ்'' என்ற இந்திப்படத்தின் தமிழாக்கம். திரைக்கதை,
வசனம் எழுதி இயக்கினார், எஸ்.ஏ.சந்திரசேகரன்.
வாலி, கங்கை அமரன், வைரமுத்து, புலமைப்பித்தன், மு.மேத்தா ஆகியோர்
எழுதிய பாடல்களுக்கு இசை இளையராஜா.
இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடி அம்பிகா. மற்றும் எம்.என்.நம்பியார்,
சத்யராஜ், தேங்காய் சீனிவாசன், சுமதி, வாணி, ரேணுகா ஆகியோரும்
நடித்தனர்.
குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் பிரைவேட் `டிடெக்டிவ்' ஆக கவுரவ
வேடத்தில் கே.பாக்யராஜ் நடித்தார்.
12-4-1985 ல் வெளியான இப்படம் நூறு நாள் ஓடியது.
உன் கண்ணில் நீர் வழிந்தால்
கலாகேந்திரா மூவிசுக்காக பாலு மகேந்திரா கதை-வசனம் எழுதி இயக்கிய
படம் இது.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடி மாதவி. மற்றும் சங்கீதா, விஜயலட்சுமி,
ஒய்.ஜி.மகேந்திரன், பூர்ணம் விஸ்வநாதன், செந்தாமரை ஆகியோரும்
நடித்தனர்.
இசை அமைப்பு: இளையராஜா.
20-6-1985-ல் வெளியான இந்தப்படம், சிறந்த படமாக சென்னை சினிமா
ரசிகர்கள் சங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
>>> Part 55
|