|
ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்''
ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 100-வது படமான "ஸ்ரீராகவேந்திரர்'',
ரஜினி அதுவரை நடித்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக
அமைந்தது. தனக்கே உரித்தான ஸ்டைல்களையும், அதிரடி சண்டைகளையும்
ஒதுக்கி வைத்துவிட்டு, ராகவேந்திரராகவே வாழ்ந்து காட்டினார்.
ரஜினிகாந்த், ராகவேந்திரரின் தீவிர பக்தர். எனவே, ராகவேந்திரரின்
வாழ்க்கை வரலாற்றை தனது 100-வது படமாகத் தயாரிக்க முடிவு செய்தார்.
இப்படத்தை, கே.பாலசந்தரின் "கவிதாலயா'' பேனரில் தயாரிக்க முடிவு
செய்யப்பட்டது.
எஸ்.பி.முத்துராமன் தயக்கம்
இந்தக் காலக் கட்டத்தில், ரஜினியின் பெரும்பாலான படங்களை
எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்து வந்தார். எனவே, "ராகவேந்திரர்''
படத்தையும் அவரே டைரக்ட் செய்யவேண்டும் என்று, ரஜினி விரும்பினார்.
இதுகுறித்து, முத்துராமனிடம் பேசினார்.
டைரக்ஷன் பொறுப்பை ஏற்க முத்துராமன் தயங்கினார். காரணம், இதுவரை
அவர் புராணப் படம் எதையும் டைரக்ட் செய்ததில்லை. தவிரவும் அவருடைய
தந்தையும், குடும்பத்தினரும் சுயமரியாதை இயக்கத்தில் பற்றுள்ளவர்கள்.
எனவே, `அந்த பாரம்பரியத்தில் வந்த நாம், புராணப் படத்தை இயக்குவது
சரியா?' என்ற கேள்வி அவர் மனதைக் குடைந்தது.
முத்துராமனின் தயக்கத்தை ரஜினி புரிந்து கொண்டார். எனினும் வேறு
டைரக்டரைப் போட அவர் விரும்பவில்லை.
எஸ்.பி.முத்துராமனை நேராக, கே.பாலசந்தரிடம் அழைத்துச் சென்றார். "ராகவேந்திரர்''
படத்தை டைரக்ட் செய்ய எஸ்.பி.முத்துராமன் தயங்குகிறார். நீங்கள்
அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள்'' என்று கேட்டுக்கொண்டார்.
அதன்படி, முத்துராமனிடம் பாலசந்தர் பேசினார். புராணப் படங்களை
இயக்குவதில் தனக்குள்ள சிரமங்களை முத்துராமன் விளக்கினார்.
இருதரப்பு "வாதங்களையும்'' கேட்ட பாலசந்தர், இறுதியில் தன் "தீர்ப்பை''
வழங்கினார்.
"முத்துராமன்! உங்களுக்குள்ள பிரச்சினை எனக்குப் புரிகிறது. ரஜினியை
வைத்து எத்தனையோ மாறுபட்ட படங்களை எடுத்தவர் நீங்கள். இந்தப்
படத்தையும் நீங்கள் சிறப்பாக எடுக்க முடியும். ரஜினியின்
உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஒப்புக்கொள்ளுங்கள். இந்தப் படத்தை
சிறப்பாக எடுக்க கவிதாலயா எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கும்.
உங்கள் விருப்பம் போல் படத்தை எடுக்கலாம். செலவைப்பற்றி கவலை
வேண்டாம்'' என்றார், பாலசந்தர்.
முடிவில், ராகவேந்திரர் படத்தை உருவாக்க சம்மதித்தார், முத்துராமன்.
வசனம் - இசை
படத்துக்கு வசனம் எழுதும் பொறுப்பை ஏ.எல்.நாராயணன் ஏற்றார். அவர்
பக்தி சிரத்தையுடன் வசனத்தை எழுதினார்.
வாலி எழுதிய பாடல்களுக்கு இளையராஜா இசை அமைத்தார்.
ராகவேந்திரர், குழந்தையாகப் பிறப்பதில் இருந்து படம் தொடங்குகிறது.
குழந்தைக்கு "வேங்கடநாதன்'' என்று பெயர் சூட்டுகிறார்கள்.
வேங்கடநாதன் சிறுவயதிலேயே மிகுந்த புத்திசாலியாகவும்,
சாஸ்திரங்களில் கரைகண்டவராகவும் விளங்குகிறான்.
ஒருநாள் அவன் பிரசாதமாக வாங்கி வரும் மாம்பழத்தை, கிருஷ்ணன் வாங்கி
சாப்பிடுகிறார். வீடு திரும்பும் வேங்கடநாதனிடம், "மாம்பழம் எங்கே?''
என்று தந்தை கேட்க, "கிருஷ்ணன் வாங்கிச் சாப்பிட்டு விட்டார்''
என்று அவன் கூறுகிறான்.
கோபம் கொண்ட தந்தை, "பொய்யா சொல்லுகிறாய்?'' என்று வேங்கடநாதனை
அடிப்பதுடன், தோப்புக்கரணம் போடச்சொல்கிறார். "கிருஷ்ணா! கிருஷ்ணா!''
என்று கூறியபடி அவன் தோப்புகரணம் போட, கிருஷ்ணனே வந்து
தோப்புக்கரணம் போடுகிறார்.
இக்காட்சியைக் காணும் தாயும், தந்தையும் வேங்கடநாதனின் மகிமையை
உணர்ந்து, கிருஷ்ணன் காலடியிலேயே உயிரை விட்டு, சொர்க்கம்
அடைகிறார்கள்.
அண்ணன் வீட்டில் வாழும் வேங்கடநாதன், வாலிப வயதை அடைந்ததும் (ரஜினி)
கும்பகோணம் சென்று அங்குள்ள மடாதிபதியின் சீடராகிறார். வேத
சாஸ்திரங்களை கற்றுத் தேர்ந்து, மதுரைக்கும், பிறகு தஞ்சைக்கும்
சென்று அங்குள்ள புலவர்களை வாதத்தால் வெற்றி கொள்கிறார்.
குருவின் யோசனைப்படி, இல்லற வாழ்க்கையை மேற்கொள்கிறார், வேங்கடநாதன்.
சரஸ்வதி என்ற பெண் (லட்சுமி) அவருக்கு மனைவியாகிறாள். ஒரு
குழந்தையும் பிறக்கிறது.
சாதி வேற்றுமைகளைப் பாராது, மாட்டுக்கார சிறுவனை சீடனாக ஏற்றதால்,
வேங்கடநாதனை அந்த கிராமத்து மக்கள் ஊரை விட்டே விலக்கி
வைக்கிறார்கள்.
இதற்கிடையே கும்பகோணம் சென்று, குருவை சந்திக்கிறார். "சம்சார
சாகரத்தில் இருந்து மீண்டு, சந்நியாசம் வாங்கிக்கொள். என்னுடைய
வாரிசாக இந்த மடத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்'' என்று கூறுகிறார்,
குரு.
இதற்கு தன் மனைவியின் சம்மதத்தைப் பெற முயற்சிக்கிறார், வேங்கடநாதன்.
அவள் சம்மதிக்கவில்லை. இதனால் சஞ்சலப்படும் வேங்கடநாதன் முன்,
சரஸ்வதி தோன்றி, "முன்ஜென்மங்களில் நீ பிரகலாதனாகவும், பின்னர்
வியாசராகவும் பிறந்தவன். இந்த ஜென்மத்தில் நீ ராகவேந்திரர்'' என்று
கூறி மறைகிறார்.
இதனால், மத்வ பீடாதிபதியாக பொறுப்பேற்கிறார்.
மனம் உடைந்த அவர் மனைவி, குழந்தையை உறவினரிடம் ஒப்படைத்து விட்டு
கிணற்றில் குதித்து உயிர் விடுகிறாள்.
ஆவியாக தன்னை வந்து சந்திக்கும் அவளை தூய்மையாக்கி, சொர்க்கத்துக்கு
அனுப்புகிறார், ராகவேந்திரர்.
பின்னர், நாடு முழுவதும் பிரயாணம் செய்கிறார். எழுதப்படிக்கத்
தெரியாத இளைஞனை படிக்கச் செய்கிறார். முஸ்லிம் நவாப், "பரிசாக''
அளிக்கும் மாமிசத்தை மலர்களாக மாற்றுகிறார்.
இப்படி பல அதிசயங்களை நிகழ்த்தும் ராகவேந்திரர், பல ஜோசியர்கள்
கூறிய கருத்துக்களை பொய்யாக்கி, 78-வது வயதில் "ஜீவ சமாதி''
அடைகிறார்.
மாறுபட்ட ரஜினி
இந்தப் படத்தில், ரஜினிகாந்த் நடிக்கவே இல்லை. ராகவேந்திரராகவே
வாழ்ந்து காட்டினார்.
இளைஞனாக, திருமணம் ஆனவராக, இளம் துறவியாக, நடுத்தர வயதுடையவராக,
முதியவராக... இப்படி பல தோற்றங்களில் தோன்றி நடிப்பில் புதிய
உயரத்தைத் தொட்டார்.
அவர் மனைவியாக லட்சுமி பொருத்தமாக நடித்தார்.
கவுரவ வேடங்களில், அம்பிகா (ராஜ நர்த்தகி), சோழமன்னன் (மேஜர்
சுந்தர்ராஜன்), நவாப் (சத்யராஜ்) போன்றவர்கள் சிறிது நேரமே
வந்தாலும், மனதைக் கவர்ந்தனர்.
மற்றும் மோகன், கே.ஆர்.விஜயா, சோமயாஜலு, டெல்லி கணேஷ், மனோரமா,
பண்டரிபாய், ஒய்.ஜி.மகேந்திரன், தேங்காய் சீனிவாசன், நிழல்கள்ரவி
ஆகியோரும் உண்டு.
அனுபவங்கள்
இந்தப்படம் தயாரானபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி எஸ்.பி.முத்துராமன்
கூறியதாவது:-
"ராகவேந்திரர் படத்தை இயக்கும்படி ரஜினியும், பாலசந்தரும்
வற்புறுத்தியதால், அந்தப் பொறுப்பை ஏற்றேன். அந்தக் காலக்கட்டத்தில்,
புராணப் படங்களை தயாரிப்பதில் ஏ.பி.நாகராஜன் மிகவும் புகழ்
பெற்றிருந்தார். அவருடைய "திருவிளையாடல்'', "கந்தன் கருணை'', "திருவருட்செல்வர்''
முதலான படங்கள் பெரும் வெற்றி பெற்றிருந்தன.
அவர் எடுத்த படங்களின் "வி.சி.டி''களை வாங்கி அனைத்தையும் போட்டுப்
பார்த்தேன். அவற்றைப் பார்த்ததன் மூலம் புராணப்படத்தை இயக்கக்கூடிய
மனோபலம் எனக்கு வந்தது. இந்த வகையில் ஏ.பி.நாகராஜனை என்னுடைய
மானசீக குரு என்று கூறலாம்.
ரஜினிகாந்த், தன்னுடைய ஸ்டைல்கள் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்தவர்.
சண்டைக் காட்சிகளில் மிகவும் புகழ் பெற்றவர். இவை எல்லாம் இல்லாமல்,
ஒரு மகான் வேடத்தில் அவரை ரசிகர்கள் ஏற்பார்களா என்று
சந்தேகப்பட்டோம். ராகவேந்திரரின் பலதரப்பட்ட தோற்றங்களில் `மேக்கப்'
போட்டு பார்த்தோம். ரஜினி, தன்னுடைய முகபாவம், வேகமான நடை
ஆகியவற்றையெல்லாம் மாற்றிக்கொண்டு பக்தி சிரத்தையோடு நடித்தார்.
படப்பிடிப்பு நடந்த காலத்தில் ரஜினி அசைவம் சாப்பிடாமல் விரதம்
இருந்தார். படப்பிடிப்பு குழுவினரும் விரதம் இருந்தோம்.
படம் முடிந்து, முதல் பிரதியை போட்டுப்பார்த்தபோது, "இந்தப் படத்தை
எடுத்ததில் பெருமை அடைகிறேன்'' என்று பாலசந்தர் கூறினார்.
ரஜினிகாந்தும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
ரஜினி ரசிகர்களும் இப்படத்தை ஏற்றுக்கொண்டனர்.''
இவ்வாறு எஸ்.பி.முத்துராமன் கூறினார்.
வரிவிலக்கு
1-1-1985-ல் வெளிவந்த இந்தப் படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு
அளித்தது.
அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை, ரஜினிக்கு சினிமா
ரசிகர்கள் சங்கமும், சினிமா எக்ஸ்பிரஸ் இதழும் வழங்கி கவுரவித்தன.
இப்படம் நூறு நாள் ஓடியது.
>>> Part 56
| |