|
சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்''
210 நாட்கள் ஓடியது
சிவாஜிகணேசனும், ரஜினிகாந்தும் நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள்
ஓடி வெற்றி வாகை சூடியது.
பெங்களூரைச் சேர்ந்த தமிழர்களான வீராசாமியும், ரவிச்சந்திரனும் "ஸ்ரீஈஸ்வரி
புரொடக்ஷன்ஸ்'' சார்பில் தயாரித்த படம் "படிக்காதவன்.''
இவர்கள் ஏற்கனவே பல கன்னடப் படங்களைத் தயாரித்தவர்கள். "குத்தார்''
என்ற இந்திப் படத்தின் கதையை வைத்து, அவர்கள் தமிழில் முதன்
முதலாகத் தயாரித்த படம் "படிக்காதவன்.''
இதில் சிவாஜி - ரஜினியுடன், அம்பிகா, ரம்யாகிருஷ்ணன், வடிவுக்கரசி,
நாகேஷ், ஜெய்சங்கர், பூர்ணம் விஸ்வநாதன், தேங்காய் சீனிவாசன்
ஆகியோர் நடித்தனர். வாலி, கங்கை அமரன், வைரமுத்து ஆகியோர் எழுதிய
பாடல்களுக்கு இசை இளையராஜா.
கதை
பெற்றோர்களை இழந்த சிவாஜி, தன் தம்பிகளான ராஜா, ராமு ஆகியோரை
அன்புடன் வளர்க்கிறார். "இவர்களை நம் குழந்தைகள் போல வளர்க்க
வேண்டும்'' என்று மனைவி வடிவுக்கரசியிடம் கூறுகிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வடிவுக்கரசி, சிவாஜி ஊரில் இல்லாதபோது,
இருவரையும் விரட்டி அடிக்கிறார். சென்னைக்கு ஓடும் ராஜாவும்,
ராமுவும் நாகேஷ் ஆதரவில் வளர்கிறார்கள்.
சிறுவர்கள், பெரியவர்களாகிறார்கள். ராஜா (ரஜினி) டாக்சி டிரைவர்
ஆகிறார். தன் தம்பி ராமுவை (விஜயபாபு) நன்கு படிக்க வைக்கிறார்.
விஜயபாபு, தொழில் அதிபர் மகளான ரம்யா கிருஷ்ணனை காதலிப்பதுடன், தன்
அண்ணன் பெரிய பணக்காரர் என்று ஏமாற்றுகிறார்.
இந்நிலையில், தொழில் அதிபரின் சொத்துக்களை அபகரிக்க அவர் தம்பி (ஜெய்சங்கர்)
திட்டம் போடுகிறார். அவர் விரிக்கும் வலையில், விஜயபாபு விழுகிறார்.
அண்ணனை "நீ படிக்காதவன்'' என்று அவமதிக்கிறார்.
இதற்கிடையில், ரஜினி மீது ஒரு கொலைப்பழி விழுகிறது. ஜெயிலில்
இருக்கும் ரஜினியை சிவாஜிகணேசன் சந்தித்து, உண்மைக் குற்றவாளியை
தான் கண்டுபிடிக்க உறுதியளிக்கிறார். நீதிபதியான சிவாஜி,
ரஜினிக்காக அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வக்கீலாக மாறி
வாதாடுகிறார். ஜெய்சங்கர்தான் குற்றவாளி என்று நிரூபிக்கிறார்.
ரஜினி விடுதலையாகிறார். பிரிந்த குடும்பம் ஒன்று சேருகிறது.
11-11-1985 தீபாவளி தினத்தன்று வெளியான இப்படம், 210 நாட்கள் ஓடியது.
மிஸ்டர் பாரத்
ஏவி.எம்.மின் சகோதர நிறுவனமான "பாலசுப்பிரமணியம் அன்கோ'' தயாரித்த
படம் "மிஸ்டர் பாரத்.''
இதில் ரஜினிகாந்தும், சத்யராஜம் இணைந்து நடித்தனர்.
இந்தியில் வெளியான "திரிசூல்'' படத்தின் தழுவல் இது. விசு திரைக்கதை,
வசனம் எழுத, எஸ்.பி.முத்துராமன் இயக்கினார்.
வில்லனாக இருந்த சத்யராஜ், கதாநாயகனாக மாறிய காலக்கட்டம் அது. எனவே,
ரஜினிக்கும் சத்யராஜக்கும் சம வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ரஜினியின்
அப்பாவாக சத்யராஜ் நடித்தார்.
அம்பிகா, வடிவுக்கரசி, விஜி, யமுனா, சாரதா, கவுண்டமணி, ரகுவரன்,
எஸ்.வி.சேகர் ஆகியோரும் நடித்தனர்.
கிராமத்தில் வாழும் சாரதாவை, அந்த கிராமத்துக்கு என்ஜினீயராக வரும்
சத்யராஜ் திருமண ஆசை காட்டி ஏமாற்றி விடுகிறார். சாரதாவுக்கு
பிறக்கும் மகன்தான் ரஜினி.
நடந்த உண்மையை ரஜினியிடம் கூறும் சாரதா, "உன் தந்தைக்கு நீதான்
பாடம் புகட்ட வேண்டும்'' என்று கூறிவிட்டு உயிர் துறக்கிறார்.
தாயின் வாக்குறுதியை ரஜினி எப்படி நிறைவேற்றுகிறார் என்பதே கதை.
இதில் ரஜினியும், சத்யராஜம் போட்டி போட்டு நடித்தனர். இருவரும்
சேர்ந்து பாடுவது போல் அமைந்த "என்னம்மா கண்ணு சவுக்கியமா?'' என்ற
பாடல் வெகு பிரபலம். இந்தப் படத்துக்கு இசை அமைத்தவர் இளையராஜா.
1-10-1986-ல் வெளியான இப்படம், நூறு நாள் ஓடியது.
நான் அடிமை இல்லை
பிரபல கன்னட நடிகரும், பட அதிபருமான துவாரகேஷ் தயாரித்த படம் "நான்
அடிமை இல்லை.''
இந்தப் படத்தின் கதை முதலில் இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய
மொழிகளில் தயாரிக்கப்பட்டது. பிறகு, தமிழுக்கு வந்தது. படத்தை
தயாரித்த துவாரகேஷ், டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்றார்.
ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்தார்.
ஸ்ரீதேவி, ஒரு பணக்காரரின் (கிரிஷ்கர்னாட்) மகள். ரஜினி,
போட்டோகிராபர். இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. பெற்றோர்
எதிர்ப்பையும் மறி ரஜினியை மணக்கிறார், ஸ்ரீதேவி.
ஆனால் அவர் தந்தை செய்யும் சூழ்ச்சியால், ரஜினியும், ஸ்ரீதேவியும்
பிரிகிறார்கள். ஸ்ரீதேவிக்கு பிறக்கும் குழந்தையை அனாதை விடுதியில்
சேர்த்து விட்டு, "குழந்தை செத்துப் பிறந்தது'' என்று
கூறிவிடுகிறார், கிரிஷ்கர்னாட்.
குழந்தை, ரஜினியிடம் வளர்கிறது. கடைசியில், "ஒரு ஜீவன்தான்... உன்
பாடல்தான்'' என்ற பாடல் மூலம், பிரிந்த குடும்பம் ஒன்று சேருகிறது.
இப்படத்தில் மனோரமா, வனிதா, புஷ்பலதா, வி.கே.ராமசாமி, தேங்காய்
சீனிவாசன், செந்தாமரை, விஜயகுமார், டெல்லி கணேஷ்,
ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரும் நடித்தனர்.
ஏ.எல்.நாராயணன் வசனம் எழுதிய இந்தப் படத்துக்கு இசை அமைத்தவர்:
விஜய் ஆனந்த்.
1-3-1986-ல் வெளியான இப்படத்தில் பாடல்கள் சிறப்பாக இருந்தும்,
படம் 50 நாட்களே ஓடியது.
>>> Part 57
| |