ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா''
100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்
ரஜினிகாந்தின் 125-வது படமாக வெளிவந்த "ராஜாதிராஜா'' பெரிய
வெற்றிப்படமாக அமைந்தது.
இது, "பாவலர் கிரியேஷன்ஸ்'' தயாரிப்பு. இதற்கான கதையை எழுதி, படத்தை
இயக்கியவர் ஆர்.சுந்தரராஜன். திரைக்கதை, வசனத்தை பஞ்சு அருணாசலம்
எழுதினார்.
இரட்டை வேடம்
இந்தப் படத்தில், ரஜினி இரட்டை வேடத்தில் நடித்தார்.
ஒரு ரஜினிக்கு ஜோடி நதியா. இன்னொரு ரஜினிக்கு ராதா.
மற்றும் விஜயகுமார், ராதாரவி, ஒய்.விஜயா ஆகியோர் நடித்திருந்தனர்.
படத்தின் கதை சுவையானது.
ராஜா கோடீஸ்வரன். அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறான். ஊரில்
இருக்கும் ராஜாவின் அப்பா விஜயகுமார், மகனுக்குத் தெரியாமல் `சின்னவீடு'
ஒன்றை `செட்டப்' செய்து கொள்கிறார். சின்னவீடு ஒய்.விஜயாவும் அவளது
தம்பி ராதாரவியும் பணக்காரரின் சொத்துக்கு குறி வைத்து
காத்திருக்கிறார்கள்.
சின்னவீட்டின் போலி அன்பை தெரிந்து கொண்ட பணக்காரர், அவளையும்,
அவளது தம்பியையும் வீட்டை விட்டுத் துரத்தியடிக்கிறார். ஆனால்
அவர்களோ இரவில் பணக்காரர் போதையில் இருக்கிற சமயம், அவரை மாடியில்
இருந்து கீழே தள்ளி கொலை செய்து விடுகிறார்கள்.
அப்பாவை பார்க்க அமெரிக்காவில் இருந்து ராஜா வருகிறான். சென்னை
விமான நிலையத்தில் இறங்கியதுமே தன் நண்பர்கள் மூலம் அப்பாவின் மரணம்
பற்றி அறிந்து கொள்கிறான். அப்பாவின் சின்னவீட்டை அவன்
பார்த்ததில்லை. சின்னவீட்டுக்கும் அவனைத் தெரியாது. இதனால் உண்மையை
அறிய, சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் தனது நண்பன் ஜனகராஜை தனது பெயரில்
தங்கள் பங்களாவுக்கு அனுப்பி வைக்கிறான். ஜனகராஜின் கார் டிரைவராக
ராஜாவும் அந்த பங்களாவுக்குள் அடியெடுத்து வைக்கிறான்.
சில நாட்களிலேயே சொத்துக்காக தனது அப்பா கொல்லப்பட்ட உண்மையை
கண்டுபிடிக்கிறான். சின்னவீடு ஒய்.விஜயாவையும், அவள் தம்பி
ராதாரவியையும் போலீஸ் வளையத்துக்குள் சிக்க வைக்க திட்டம்
தீட்டுகிறான்.
இந்த நேரத்தில் `பணக்காரர் வாரிசு ஜனகராஜ் இல்லை. டிரைவர்தான்
வாரிசு' என்பதை ராதாரவி கண்டுபிடித்து, ஜனகராஜை கொலை செய்கிறார்.
அந்தப் பழியை ராஜா மீது போட்டு விடுகிறார்.
ராஜாவுக்கு கோர்ட்டு தூக்குத் தண்டனை விதிக்கிறது. ஜெயிலில்
அடைக்கப்பட்ட ராஜா, உண்மைக் குற்றவாளிகளை சட்டத்தின் முன்
நிறுத்தும் எண்ணத்தில் ஜெயிலில் இருந்து தப்புகிறான்.
மற்றொரு ரஜினி
அப்போதுதான், தன்னை அப்படியே அச்சில் வார்த்தது போலிருக்கும்
சின்னராசுவை காண்கிறான். ராஜாவைப் பார்த்து சின்னராசுவும் அதிர்ந்து
போகிறான். ராஜா தனது இக்கட்டான சூழலை சின்னராசுவிடம் விவரித்து, "என்னைப்
போல உள்ள நீ, எனக்காக 15 நாள் ஜெயிலில் இருந்தால் அதற்குள் நான்
உண்மைக் குற்றவாளிகளை தகுந்த ஆதாரத்துடன் போலீசில் ஒப்படைத்து
விடுவேன். இந்த முயற்சி 15 நாட்களில் முடியாவிட்டால் கூட,
ஜெயிலுக்கு வந்து எனக்கான தண்டனையை ஏற்றுக்கொள்வேன்'' என்கிறான்.
சின்னராசுவுக்கும் ஒரு நெருக்கடி இருந்தது. கிராமத்து மாமா பெண்
மீது உயிரையே வைத்திருந்தான். மாமா மகளுக்கும் அவன் மீது காதல்.
மாமா பணம் படைத்தவர். சின்னராசுவிடமோ அவர் அளவுக்கு அந்தஸ்து இல்லை.
என்றாலும் மாமா மகள் தந்த தைரியத்தில் மாமாவிடம் பெண் கேட்கச்
செல்கிறான். அவரோ தனக்கு சரிநிகர் அந்தஸ்து இல்லாதவன் என்று கூறி
அவமானப்படுத்தி விடுகிறார். முடிவாக, ஒரு மாதத்திற்குள் 50 ஆயிரம்
பணத்தைக் கொண்டு வந்தால் பெண் தருகிறேன் என்று `கெடு' வைக்கிறார்.
இந்த மாதிரியான சூழ்நிலையில் ராஜாவை சந்தித்த சின்னராசு, தனது
நெருக்கடியை ராஜாவிடம் சொல்கிறான். தனக்கு மட்டும் உதவினால் பணமும்
தந்து, திருமணமும் செய்து வைக்கிறேன் என்று ராஜா வாக்குறுதி
கொடுக்கிறான். அதை நம்பி சின்னராசு ஜெயிலுக்கு போகிறான்.
ராஜா துப்பறிந்து எதிரிகளை கண்டு பிடிக்க தாமதமாகிறது.
சின்னராசுவுக்கோ ஜெயிலில் ஒவ்வொரு நாளும் பயம். ராஜாவை தூக்கில்
போடப்போகும் நாளும் வருகிறது. தான் ராஜா இல்லை என்று சொல்ல முடியாத
நிலையில், சின்னராசு தூக்கு மேடையை சந்திக்கிறான்.
ஆனால், கடைசி நிமிடத்தில் ராஜா கோர்ட்டில் குற்றவாளிகளை ஒப்படைத்து,
தனக்காக தூக்கில் தொங்கவிருந்த சின்னராசுவை காப்பாற்றுகிறான்.
காமெடி காட்சிகள்
ராஜாவாக வரும் ரஜினிக்கு ராதா ஜோடி. சின்னராசுவாக வரும் ரஜினிக்கு
நதியா ஜோடி.
இரண்டு ஜோடிகளின் கலகல காமெடி, படத்துக்கு மிகப்பெரிய பலமாக
இருந்தது. குறிப்பாக சின்னராசு, மாமா மகள் நதியாவிடம் தன்னை வீரனாக
காட்டிக்கொள்ள `சிலம்பம்' கற்றுக்கொள்ளும் காட்சிகள் கூட,
நகைச்சுவைப் பின்னணியில் அமைக்கப்பட்டிருந்ததை ரசிகர்கள் வெகுவாக
ரசித்தார்கள்.
இளையராஜா
இந்தப் படத்துக்கு இளையராஜா பிரமாதமாக இசை அமைத்திருந்தார். எல்லாப்
பாடல்களும் இனிமையாய் ஒலித்தன.
குறிப்பாக கவிஞர் பொன்னடியான் எழுதிய "எங்கிட்டே மோதாதே, நான்
ராஜாதி ராஜனடா'' என்ற பாடலும், பிறைசூடன் எழுதிய "மீனம்மா மீனம்மா''
என்ற பாடலும் சூப்பர் ஹிட்டாக அமைந்தன.
இந்தப்படம் சென்னையில் 150 நாட்கள் ஓடியது. மதுரையில் 181 நாட்கள்
ஓடியது.
சென்னையில், தொடர்ந்து 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகளாக
நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
1,22,000 கேசட்டுகள்
இந்தப் படத்தின் பாடல் கேசட்டுகள், அந்தக் காலகட்டத்தில்
விற்பனையில் சாதனை படைத்தன.
லட்சத்தையும் தாண்டி ஒரு லட்சத்து 22 ஆயிரம் கேசட்டுகள்
விற்பனையாயின. படத்தின் வெற்றி விழாவுக்கு அன்றைய முதல்-அமைச்சர்
கருணாநிதி தலைமை தாங்கி "பிளாட்டினம் டிஸ்க்''கை வெளியிட்டார்.
பொன்னடியான் அனுபவம்
இந்தப் படத்துக்கு பாடல் எழுதிய அனுபவம் பற்றி பொன் னடியான்
கூறியதாவது:-
"ஒருநாள் மாலை, சென்னை கடற்கரையில் நானும், ஆர்.டி.பாஸ்கரும் (இளையராஜாவின்
சகோதரர்) அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, பாஸ்கர் என்னிடம்
"ஊட்டியில் ராஜாதிராஜா'' படப்பிடிப்பு வேகமாக நடந்து
கொண்டிருக்கிறது. ரஜினி பாடுவது போல் அமைந்த ஒரு பாடலை உடனே பதிவு
செய்து அனுப்ப வேண்டும். அந்தப் பாடலை நீங்கள்தான் எழுதுகிறீர்கள்.
இதுபற்றி இளையராஜாவிடம் பேசிவிட்டேன்'' என்றார். மறுநாள், பிரசாத்
ஸ்டூடியோவுக்குச் சென்று இளையராஜாவை சந்தித்தேன்.
"கதாநாயகன் மிகவும் பயந்த சுபாவம் உடையவன். அவன் காதலி, அவனுக்கு
கொஞ்சம் கொஞ்சமாக தைரியம் ஊட்டி வீரனாக்குவாள். அவன் தன்
எதிரிகளுடன் மோதி, அவர்களை வீழ்த்தும்போது பாடும் பாடல்தான் இது''
என்றார், இளையராஜா.
"ரஜினி ஸ்டைலில், அவருடைய குணாதிசயங்களையும், சமுதாய
கருத்துக்களையும் வைத்து இந்தப் பாடல் வரிகளை அமைக்கலாம்'' என்றும்
கூறினார்.
உடனே பாடல் எழுதப்பட்டு, அவருடைய சில திருத்தங்களையும் ஏற்று, பாடல்
பதிவு செய்யப்பட்டு, அன்றிரவே படப்பிடிப்பு நடக்கும் ஊட்டிக்கு
அனுப்பி வைக்கப்பட்டது.
அதுதான், "எங்கிட்டே மோதாதே-நான் ராஜாதி ராஜனடா! வம்புக்கு
இழுக்காதே-நான் வீராதி வீரனடா!'' என்ற பாடல்.
ரஜினி பாராட்டு
பிறகு ஒரு நாள், படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, ரஜினிக்கு
என்னை ஆர்.டி.பாஸ்கர் அறிமுகப்படுத்தினார்.
பல நாட்கள் பழகியது போன்ற பாசத்தோடும், நட்புணர்வோடும், என்னிடம்
அன்பு காட்டினார். "இசையும், உங்கள் பாடலும் ரசிகர்களைக் கவரும்
வகையில் அமைந்திருந்தன'' என்று மனந்திறந்து பாராட்டினார்.''
இவ்வாறு பொன்னடியான் கூறினார்.
>>> Part
61
|