மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி''
100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டது
ரஜினிகாந்தின் திரை உலகப் பயணத்தில், ஒரு முக்கியமான மைல்கல் "தளபதி.''
இது மணிரத்னம் டைரக்ட் செய்த படம். ரஜினியுடன் மம்முட்டி இணைந்து
நடித்தார்.
இப்படம் 1991 நவம்பர் 5-ந்தேதி திரையிடப்பட்டது. தமிழ்நாட்டிலும்,
வெளிநாடுகளிலும் ஒரே சமயத்தில் 100 தியேட்டர்களில் ரிலீஸ்
ஆகியது.நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில்
உருவாக்கப்பட்டிருந்த இந்தப் படத்தில், ரஜினியின் நடிப்பு மேலும்
மெருகேறி
வெளிப்பட்டது.ரஜினியின் நண்பராக நடித்த மம்முட்டியும்
உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
மகாபாரதத்தை நினைவூட்டும் கதை
மகாபாரதத்தில் திருமணத்துக்கு முன்பே சூரியபகவானை நினைத்து கர்ணனை
பெற்ற குந்திதேவி, கர்ணனை ஓடுகிற ஆற்றில் பேழையில் வைத்து விட்டு
விடுவார். தளபதி படத்தில் ஸ்ரீவித்யாவுக்கும் இதே மாதிரி ஏற்பட்ட
ஒரு விபரீத சூழலில் ரஜினி உருவாகிறார். பிறந்த குழந்தை தன்னுடையது
என்று சொந்தம் கொண்டாட முடியாத நிலை, ஸ்ரீவித்யாவுக்கு.
குழந்தை அனாதையாக `கூட்ஸ்' வண்டியில் விடப்படுகிறது. காலம் காயம்
ஆற்றிய வேளையில் ஸ்ரீவித்யா, ஜெய்சங்கருக்கு
வாழ்க்கைப்படுகிறார்.தாதா
அனாதை முத்திரையுடன் அந்தப் பகுதி மக்களால் அன்புடன்
வளர்க்கப்படுகிறார், ரஜினி. வளர்ந்து வாலிபனான நேரத்தில் அடிதடி
தாதா ரேஞ்சுக்கு வந்துவிடுகிறார். இவரது வளர்ச்சி பக்கத்து
ஏரியாவில் உள்ள தாதாக்களை கலவரம் அடையச் செய்கிறது.
பக்கத்து ஏரியாவில் பிரபல தாதாவாக கோலோச்சிக் கொண்டிருக்கிறார்
மம்முட்டி. அவரது அடியாட்களில் ஒருவன் திடுமென கொல்லப்பட,
சந்தர்ப்பம் ரஜினியை குற்றவாளியாக்குகிறது. ரஜினியே கொலை குற்றவாளி
என மம்முட்டி முடிவுசெய்து ரஜினியை போலீசில் மாட்ட வைக்கிறார்.
ரஜினி ஜெயிலுக்கு கொண்டு செல்லப்படுகிறார்.
சில நாட்களிலேயே, தனது அடியாளின் மரணத்துக்கும் ரஜினிக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை என்பது மம்முட்டிக்கு தெரியவருகிறது. அதனால்
ரஜினியை ஜெயிலில் இருந்து விடுவிக்கிறார்.
ரஜினி பற்றி ஏற்கனவே அரசல்புரசலாக தெரிந்து வைத்திருந்த பிரபல ரவுடி
அம்ரிஷ்பூரி, அவரை தன்னுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறார். `ராஜா
மாதிரி வாழவைக்கிறேன்' என்று நம்பிக்கை கொடுக்கிறார். ஆனால், அவர்
தனது நண்பன் மம்முட்டியின் பரம எதிரி என்பதை புரிந்து கொண்ட ரஜினி,
அம்ரிஷ்பூரியின் விருப்பத்தை நிராகரிக்கிறார். `என் நண்பனின்
எதிரியுடன் ஒருநாளும் கைகோர்க்க மாட்டேன்' என்று மறுத்துவிடுகிறார்.
இந்த தகவல் மம்முட்டிக்குத் தெரிய வந்ததும் நெகிழ்ந்து போகிறார்.
`நீ என்னுடன் இருக்க வேண்டியவன். இனி நீதான் என் தளபதி' என்று
உணர்ச்சிவசப்படுகிறார். இப்போது மம்முட்டி அணியில் மிகப்பெரும்
சக்தியாக ரஜினி விளங்குகிறார்.
காதல்
அடிதடி, ரகளை மட்டுமே வாழ்க்கை என்றிருந்த ரஜினிக்குள் காதல்
எட்டிப் பார்க்கிறது. பணக்கார குடும்பத்தின் ஷோபனா, அவரைக்
கவர்கிறார். ரஜினியின் தயாள குணம், கம்பீரம் ஷோபனாவைக் கவர, அவரும்
காதல் வசப்படுகிறார்.
ஆனால் இந்தக் காதலுக்கு ஆயுள் குறைச்சல். ரஜினி மீதிருந்த `தாதா'
முத்திரையும், `அனாதை' என்ற அடைமொழியும் காதலியை அடைய தடையாக
இருக்கின்றன.
மாவட்டத்துக்கு புதிய கலெக்டராக பொறுப்பேற்கும் அரவிந்த்சாமி, தனது
எல்லைக்குள் தலைவலியாக இருக்கும் தாதாக்களை களையெடுக்க
விரும்புகிறார். கலெக்டரின் பதவி ஏற்பு விழாவின்போதே தாதாக்கள்
தங்கள் கோஷ்டி சண்டையை ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அது திட்டமிட்டு
நடந்த சண்டை என்பதும், தனது நண்பன் மம்முட்டியை கொல்ல அம்ரிஷ்பூரி
ஏற்பாடு செய்தது என்பதும் ரஜினிக்கு தெரியவர, மம்முட்டியை கொல்ல
முயன்றவனை தீர்த்துக்கட்டி விடுகிறார்.
இந்த வழக்கில் சாட்சி சொல்ல வருகிறார் ஜெய்சங்கர். அவர் மூலமாக,
தான் அனாதையல்ல, தனது தாயார் ஸ்ரீவித்யா, தனது தம்பிதான் மாவட்ட
கலெக்டராக இருக்கும் அரவிந்த்சாமி என்ற உண்மையை தெரிந்து கொள்கிறார்,
ரஜினி.
பெற்ற தாயையே தன் தாய் என்று சொல்ல முடியாத வேளையில், மனதுக்குள்
ரத்தக் கண்ணீர் வடிக்கிறார், ரஜினி. தனது தாயாரை அவளறியாமல்
தூரத்தில் நின்றபடி பார்த்து உருகுகிறார்.
இந்த நேரத்தில் தாதாக்கள் களையெடுப்பு தொடங்குகிறது. இதில்
மம்முட்டி கைது செய்யப்படுகிறார். தகவல் தெரிந்து துடித்த ரஜினிக்கு,
இன்னொரு அதிர்ச்சியான செய்தி கிடைக்கிறது. தனக்கும் மம்முட்டிக்கும்
எதிரியான அம்ரிஷ்பூரி மூலம் போலீஸ் தங்களை தீர்த்துக்கட்ட முடிவு
செய்திருப்பதை தெரிந்து கொள்கிறார்.
ரஜினி தன் மகன் என்ற உண்மை, தாயார் ஸ்ரீவித்யாவுக்கு தெரிகிறது.
மகனைக் காப்பாற்றும் ஆசையில் கலெக்டரான தன் மகன் அரவிந்த்சாமியிடம்,
உண்மையை சொல்லி ரஜினியின் உயிருக்கு உத்தரவாதம் தரும்படி
மடிப்பிச்சை கேட்கிறார்.
உறவுகள் ஒருங்கிணைய இருக்கும் நேரத்தில் மம்முட்டி ஜெயிலில் இருந்து
விடுதலையாகி வருகிறார். கலெக்டர் மீதான கோபத்தில் அவரை `போட்டுத்
தள்ளும்'படி நண்பன் ரஜினியிடம் கேட்டுக்கொள்கிறார்.
தம்பியா? நண்பனா? யார் முக்கியம்? பாச ஊசலாட்டத்தில் தடுமாறுகிறார்
ரஜினி. நண்பனை சமாதானப்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையில்,
தம்பியைக் கொல்ல மறுத்துவிடுகிறார்.
ஆனால் அதற்குள் காரியம் மிஞ்சி விடுகிறது. அம்ரிஷ்பூரியின் ஆட்கள்
மம்முட்டியை கொன்று விடுகிறார்கள். ஆவேசமான ரஜினி, தனக்கு கிடைத்த
புதிய உறவைக்கூட துச்சமாக எண்ணி, நண்பனைக் கொன்ற கூட்டத்தை ஓடஓட
விரட்டிக் கொல்கிறார்.
கோர்ட்டில் ரஜினி செய்த கொலைகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாததால்,
அவர் விடுதலையாகிறார். தனது மகனை அன்புடன் கட்டித்தழுவி, பாவக்கறையை
கண்ணீரால் கழுவுகிறார், தாய்.
"சுந்தரி கண்ணால் ஒரு சேதி'', "அடி ராக்கம்மா கையைத்தட்டு'', "சின்னத்தாயவள்
தந்த ராசாவே'', "காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கொன்றும்
பஞ்சமில்லே'' போன்ற பாடல்கள் இளையராஜாவின் இசையில் இனிமை வாய்ந்தவை.
அரவிந்த்சாமி அறிமுகமான படம் இது. ரஜினி விரும்பிய ஷோபனாவை
அரவிந்த்சாமி திருமணம் செய்து கொள்வார்.
பானுப்பிரியா கவுரவ வேடத்தில் தோன்றினார். மம்முட்டிக்கு ஜோடி கீதா.
கால்ஷீட்
ரஜினி வழக்கமாக ஒரு படத்துக்கு அதிகபட்சம் 35 நாள் கால்ஷீட்
கொடுப்பார். தளபதிக்காக இந்த எல்லையை தாண்டி நூறு நாட்களுக்கு மேல்
கால்ஷீட் கொடுத்திருந்தார்.
தளபதி 192 நாட்கள் ஓடி வெற்றிவாகை சூடியது.
நாட்டுக்கு ஒரு நல்லவன்
ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்க, கன்னடப் பட உலகின் பிரபல ஹீரோ
வி.ரவிச்சந்திரன் தயாரித்த படம். இந்தப்படத்தில் அவரும்
நடித்திருந்தார்.
சிறுவர்கள் படிக்கும் பள்ளியொன்று கொலைக்கூடமாக மாறுகிறது.
சிறுவர்கள் காணாமல் போகிறார்கள். பள்ளியில் ஏதோ சமூக விரோத செயல்கள்
நடப்பதை புரிந்து கொள்ளும் ரஜினி, உண்மை நிலையை கண்டறிய தன் காதலி
ஜகிசாவ்லாவை அந்தப் பள்ளியில் ஆசிரியை வேலைக்கு அனுப்பி வைக்கிறார்.
பள்ளி மாணவர்கள் கொலை செய்யப்பட்டு அவர்களது கிட்னி உள்ளிட்ட உடல்
உறுப்புகள் விற்பனை செய்யப்படுவதை ஜகிசாவ்லா அறிகிறார். ஆனால்
இந்த ரகசியம் தெரிந்து கொண்ட அவரை வில்லனின் ஆட்கள் தீர்த்துக்கட்டி
விடுகிறார்கள்.
இதனால் தனது நண்பன் ரவிச்சந்திரன் மற்றும் ரகசிய போலீஸ் அதிகாரிகள்
சிலருடன் சுரங்கப்பாதை அமைத்து பள்ளிக்குள் நுழைகிறார், ரஜினி.
கொலைக்கும்பலை பூண்டோடு அழித்து, சிறுவர்களையும் மீட்கிறார்.
பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு 2-10-1991-ல் வெளியான
இந்தப்படம், ரசிகர்களை அதிக அளவில் கவரவில்லை.
இந்தப் படத்தின் சிறப்பு அம்சம், ரஜினி ஜோடியாக பிரபல இந்தி நடிகை
ஜகி சாவ்லா நடித்ததுதான்.
>>> Part
70
|