"படப்பிடிப்பின்போது
ரஜினி கடலில் மூழ்கினார்"
நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்
ரஜினிகாந்த் கடலில் மூழ்கி அதிசயமாக உயிர் தப்பிய சம்பவம் பற்றிய
தகவலை, நடிகை சுமித்ரா வெளியிட்டார்.
எஸ்.பி.முத்துராமன் டைரக்ஷனில் உருவான படம் "புவனா ஒரு கேள்விக்குறி.''
இதன் கதாநாயகி சுமித்ரா.
வழக்கமாக நல்லவராகவே நடித்து வந்த சிவகுமார், இதில் கெட்டவராக
நடித்தார். கெட்டவராக நடித்து வந்த ரஜினி, நல்லவராக நடித்தார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு, பெரும்பாலும் கன்னியாகுமரியில்
நடந்தது.
சுமித்ரா பேட்டி
படப்பிடிப்பின்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங் களை, ஒரு பேட்டியில்
சுமித்ரா விவரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
"நான் ரஜினி சாருக்கு ஜோடியாக நடித்த `புவனா ஒரு கேள்விக்குறி'
படத்தோட ஷூட்டிங் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்குப்
பக்கத்தில் நடந்தது. ரஜினியும், சிவகுமாரும் ஒரு பாறையில் நின்று
வசனம் பேசுற மாதிரி சீன் அது.
அன்னிக்கு எனக்கு சீன் இல்லை. சும்மா வேடிக்கை பார்க்க
வந்திருந்தேன்.
ஷூட்டிங் நடந்துக்கிட்டிருக்கும்போது யாரோ ஒருத்தர் வந்து, "அந்தப்
பாறையில் அதிக நேரம் நிக்காதீங்க. தண்ணி திடீர்னு அதிகமாயிடும்.
அந்தப் பகுதி ஆபத்தானது''ன்னு சொல்லிப்போனதை மறந்து, எல்லோரும்
ஷூட்டிங் பரபரப்புல இருந்துட்டாங்க. "பாறை மேல நின்னா எப்படிங்க
தண்ணி அதிகமாக மேலே வரும்? சும்மா பயமுறுத்துறாங்க''ன்னு னிட்ல
இருந்தவங்க சொல்ல... யாரும் அதை சீரியசா எடுத்துக்கலை.
பயங்கர அலை
மத்தியானம் இரண்டு மணி இருக்கும். ரஜினியும், சிவகுமாரும் வசனம்
பேசி நடிச்சிட்டிருக்காங்க. அப்போ திடீர்னு பாறைக்கு மேலே தண்ணி
வந்துவிட்டது. வேகமாக ஒரு பெரிய அலை பாய்ந்து வந்து ரஜினி,
சிவகுமார் இரண்டு பேரையும் இழுத்துக்கிட்டுப் போனது. தண்ணியில்
ரஜினியும், சிவகுமாரும் அடிச்சுட்டுப் போறதைப் பார்த்து மொத்த
னிட்டே கத்திக் கூச்சல் போட்டது.
டைரக்டர் எஸ்.பி.முத்துராமனும், னிட் ஆட்களும், என்ன செய்வது என்று
அறியாமல் துடிச்சிட்டிருந்தாங்க. பதட்டமான சூழ்நிலை. தண்ணீரில்
அடிச்சுட்டுப்போன ரஜினி, சிவகுமாரை எப்படி காப்பாத்துறது, என்ன
செய்றதுன்னு தெரியாம இருக்காங்க.
இதுல கவலைப்பட வேண்டிய ஒரு விஷயம், ரஜினிக்கு நீச்சல்
தெரியாதுங்கறதுதான். "ஐயையோ என்ன நடக்கப்போகுது தெரியலையே''ன்னு
எல்லோரும் பதறி அடிச்சுக்கிட்டாங்க.
உயிர் தப்பினார்
அப்போ, கடவுள் மாதிரி சில மீனவர்கள் அந்தப் பாறைக்குப் பக்கத்துல
பாய்ந்து தண்ணீரில் தேடுறாங்க. மொத்த னிட்டே பதறிட்டு நிக்குது.
மீனவர்கள் தண்ணிக்குள்ளப் போய்த் தேடி சிவகுமாரை முதல்ல மேலே
இழுத்துக்கிட்டு வந்தாங்க. ஐயோ ரஜினி என்ன ஆனார்? எல்லோரும்
கத்துறாங்க.
அடுத்து இரண்டு பேர் ரஜினியை மேலே இழுத்து வந்து போட்டாங்க. ரஜினி
நிறைய தண்ணி குடிச்சிட்டு மயக்கமா கிடந்தார்.
எல்லோரும் அழுதுகிட்டே இரண்டு பேருக்கும் முதலுதவி செய்தோம். அவங்க
கண் விழிச்சுப் பார்த்தாங்க. அப்போதுதான் எங்களுக்கு உயிரே வந்தது.''
இவ்வாறு சுமித்ரா கூறினார்.
நீச்சல் வீரர்
ஆரம்பத்தில் நீச்சல் தெரியாத ரஜினி, இப்போது நீச்சலில் நிபுணர்
ஆகிவிட்டார்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள ரஜினியின் பண்ணை வீட்டில்,
அவருக்கு பெரிய நீச்சல் குளம் இருக்கிறது. அதில் அவர் நீந்திக்
குளிப்பது வழக்கம்.
"நீந்துவது வெறும் தேகப்பயிற்சி மட்டும் அல்ல; அது மனதுக்கும் அமைதி
தருகிறது'' என்கிறார்.
"அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு, அகம், புறம்,
தூய்மையோடு தனி அறையில் அமர்ந்து தியானம் செய்து பாருங்கள். உடல்
பொலிவும், அழகும் பெறுவதை கண்கூடாகக் காணலாம்'' என்பது
எல்லோருக்கும் ரஜினி கூறும் `அட்வைஸ்'
ரஜினியின் கனவு
ரஜினிகாந்துக்கு, சினிமா உலகில் நுழையும்போது, ஒரு சின்ன ஆசை
இருந்தது.
"காலை நீட்டிப்படுக்க ஒரு சின்ன பிளாட். ஊரைச் சுற்ற ஒரு ஸ்கூட்டர்.
இது கிடைத்தாலே போதும் என்றுதான் அப்போது நினைத்தேன். அதைவிட நூறு
மடங்கு சம்பாதிச்சாச்சு. அதைக் கொடுத்தது தமிழ் மண்தான்'' என்கிறார்,
ரஜினி.
>>> Part
71
|