ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்'
200 நாட்கள் ஓடிய படம்
சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்த `மன்னன்' படத்தில் ரஜினியும், லேடி
ஜேம்ஸ்பாண்ட் என்று புகழ் பெற்ற விஜயசாந்தியும் இணைந்து நடித்தனர்.
படம் 200 நாட்கள் ஓடியது.
திமிர் பிடித்த பணக்கார மனைவியை, திருத்தி வழிக்குக் கொண்டு
வருவதுதான் கதை.
முதலாளி - தொழிலாளி
தொழிற்சாலை அதிபர் விசு, தனது நிர்வாகத்தை திறம்பட நிர்வகித்து,
தொழிலாளர்களின் அன்புக்குரியவராக இருக்கிறார். இந்த அன்புப்
பிணைப்பு, தொழில் அதிபரின் மகள் விஜயசாந்தியினால் உடைபடுகிறது.
தொழிலாளர்கள் என்றாலே `தீண்டத்தகாதவர்கள்' என்று நினைக்கிறார்
விஜயசாந்தி. நிர்வாகப் பொறுப்பை அவர் ஏற்ற பிறகு, தொழிலாளர்களின்
உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மனதுக்குள் குமுறலோடு, தொழிலாளர்கள்
வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த தொழிற்சாலையில் தொழிலாளராக வேலையில் சேருகிறார், ரஜினி.
வேலையில் சேர்ந்த சில நாட்களுக்குள் சக தொழிலாளர்களின் அன்பைப்
பெற்று விடுகிறார்.
ரஜினி ஏழை என்றாலும் கோழை இல்லை. அநீதிக்கு பொங்குவார். பாசத்திலும்
மன்னன். பக்கவாதத்தால் கை, கால்கள் விழுந்து போன தன் தாயாரை அன்பாக
கவனித்துக் கொள்கிறார்.
ஒருநாள், தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் காயம் அடையும் ஒரு
தொழிலாளியை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல கார் கிடைக்கவில்லை.
முதலாளியின் கார் மட்டுமே இருந்த நிலையில், காயம் அடைந்தவரை காரின்
பின்சீட்டில் படுக்க வைத்து ஆஸ்பத்திரிக்கு செல்கிறார், ரஜினி.
இந்த விஷயம் `முதலாளி' விஜயசாந்திக்கு தெரியவர, "தொழிலாளியின்
ரத்தம் தனது புத்தம் புதிய காரை வீணாக்கிவிட்டதே'' என்று ஆத்திரம்
கொண்டு, தனது காரை பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுகிறார்.
முதலாளியம்மாவின் இந்த ஆணவ போக்கை ரஜினி தட்டிக்கேட்கிறார்.
பழி வாங்கும் படலம்
பதிலுக்கு ரஜினி மீது ஆத்திரமான விஜயசாந்தி, தனது அதிகாரத்தை
பயன்படுத்தி சில நெருக்கடிகளை கொடுக்கிறார். ஆனால் அவை எதற்கும்
ரஜினி அசருகிற ஆளில்லை என்பது புரிந்து போகிறது. "முள்ளை
முள்ளால்தான் எடுக்க வேண்டும்'' என்ற முடிவுக்கு வரும் விஜயசாந்தி,
ரஜினியை திருமணம் செய்து கொண்டு பழிவாங்க எண்ணுகிறார். இதற்காக
ரஜினியின் தாயார் பண்டரிபாயை சந்தித்து, அவரின் அன்பை பெறுகிறார்.
விஜயசாந்தி தன் தாயாரிடம் காட்டிய அன்புக்குப் பின்னணியில் தன்னை
மாட்ட வைக்கும் சதிவலை பின்னப்பட்டு இருப்பதை ரஜினி உணர்கிறார்.
விஜயசாந்தி தன்னை மணக்க விரும்புவதாக தாயார் மூலம் அறிந்ததும்
அதிர்ந்து போகிறார். ஆனால் தாயாரின் விருப்பமும் அதுவே என்பதை
தெரிந்து கொண்டதும் திருமணத்துக்கு தலையசைக்கிறார்.
சவால்
திருமணம் முடிகிறது. முதல் இரவிலேயே `அடக்குவது யார்? அடங்குவது
யார்?' என்ற போட்டி ஆரம்பமாகி விடுகிறது. "உன் அதிகாரம் என்னை
எதுவும் செய்துவிட முடியாது. முடிந்தால் எனக்கெதிரான உன்
அஸ்திரங்களை ஏவிப்பார்'' என்று சவால் விடுகிறார் ரஜினி.
`முதலாளியம்மா' விஜயசாந்தியை ரஜினி மணந்து கொண்டாலும், வழக்கம் போல
தொழிலாளருக்கான சீருடை அணிந்து, வேலையை தொடருகிறார். இதனால்
தொழிலாளர்களின் ஆதரவு அவருக்கு கூடுகிறது.
இதை உணர்ந்து கொண்ட விஜயசாந்தி, ரஜினியின் செல்வாக்கை தகர்க்கும்
நோக்கத்தில் தொழிற்சாலையின் பழைய பொறுப்பாளர்களை நீக்கிவிட்டு
தனக்கு விசுவாசமான புதியவர்களை நியமிக்கிறார்.
இதனால் தொழிற்சாலையில் போராட்டம் வெடிக்கிறது. காலவரையற்ற வேலை
நிறுத்தம் தொடங்குகிறது. இந்த வேலை நிறுத்தத்தை பொறுப்பேற்று
நடத்துபவர் ரஜினி என்பதை அறியும் விஜயசாந்தி, ஆத்திரம் மேலிட
தொழிற்சாலையை மூடுகிறார். தனது தந்தையின் புத்திமதியையும் ஏற்க
மறுக்கிறார்.
நீண்டநாள் ஸ்டிரைக்கில் இருக்கும் இந்த தொழிற்சாலையை அரசாங்கம் தனது
பொறுப்பில் எடுக்க முடிவு செய்கிறது. இது தெரிந்த விசு, தொழிலாளர்
பிரச்சினையை சரிசெய்து தொழிற்சாலையைத் திறக்க முடிவு செய்கிறார்.
இந்த முடிவு தொழிலாளர்களுக்கு வெற்றியாக அமைநது விடவே,
எரிமலையாகிறார், விஜயசாந்தி. தனது கணவரின் வெற்றியை தனக்கு நேர்ந்த
அவமானமாக கருதியவர், தனது பங்களாவில் இருக்கும் அத்தனை
பொருட்களையும் அடித்து நொறுக்குகிறார். இப்போது தனது மனைவியை
சந்திக்கும் ரஜினி, புத்திமதி சொல்கிறார். `வீண் பிடிவாதம்
வாழ்க்கையின் சந்தோஷ ஆணிவேரை தகர்த்து விடும்' என்பதை புரிய
வைக்கிறார்.
விஜயசாந்தியின் அறிவுக்கண் திறக்க, கணவரின் `உயர்ந்த உள்ளம்'
பிடிபடுகிறது. தன்னை மாற்றிக்கொண்டு மன்னனுக்கேற்ற மகாராணியாகிறார்.
பி.வாசு
கன்னடத்தில் வெற்றி கண்ட "அனுராக அரளிது'' என்ற படத்தின் `ரீமேக்'தான்
"மன்னன்.'' வசனம் எழுதி இயக்கியவர் பி.வாசு.
1992 பொங்கலுக்கு வெளிவந்த இப்படம் 200 நாட்கள் ஓடி வெற்றி கண்டது.
இந்தப்படத்தில், ரஜினியை ஒரு தலையாக காதலிக்கும் பாத்திரத்தில்
குஷ்பு நடித்தார்.
வாலி, கங்கை அமரன் எழுதிய பாடல்களுக்கு இசை: இளையராஜா.
"அம்மா என்றழைக்காத உயிரில்லையே'' என்ற பாடலை ரஜனிக்காக உருக்கமாகப்
பாடியிருந்தார் கே.ஜே.ஜேசுதாஸ்.
ரஜினி - விஜயசாந்தியின் முதலிரவுப் பாடலாக இடம் பெற்ற "அடிக்குது
குளிரு'' பாடலில் வசனப் பகுதியை மட்டும் ரஜினி பேசியிருந்தார்.
மற்றும் `கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு', `சண்டிராணியே நீ எனக்கு
கப்பம் கட்டு', `ராஜாதி ராஜா உன் மந்திரங்கள்' போன்ற பாடல்களிலும்
இளையராஜாவின் கொடி பறந்தது.
படத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்து போவார், பிரபு. படத்தின்
தயாரிப்பாளர் இவரே.
படம் முழுக்க கலகலப்பாக வந்த ரஜினி, கவுண்டமணியுடன் சேர்ந்து
காமெடியிலும் தூள் கிளப்பினார்.
இந்தப்படம் பிறகு "கரானமொகுடு'' என்ற பெயரில் தெலுங்கிலும், "வாட்லா''
என்ற பெயரில் இந்தியிலும் தயாரிக்கப்பட்டது.
(ரஜினியிடம் சிவகுமார் கேள்வி - நாளை)
ரஜினி `சுயதரிசனம்'
"பணம், புகழ், இமேஜ் இவைகளுக்கெல்லாம் நான் அப்பாற்பட்டு நிற்கிறேன்.
ஆசாபாசம் அதிகம் உள்ள இந்த உலகத்தில் உழன்று கொண்டிருப்பதை விடுத்து,
அமைதியாக என் கடமைகளைச் செய்ய விரும்புகிறேன். பணத்தால் என்னை
யாரும், எப்போதுமே வாங்க முடியாது. நான் விரும்பினால்தான் எதையும்
செய்வேன். விருப்பம் இல்லாவிட்டால், யார் சொன்னாலும் கேட்கமாட்டேன்.
அமைதியான சூழ்நிலையில், மனம் ஆழமாக பக்தி மார்க்கத்தில்
ஆழ்ந்திருந்தால், அடையப்போகும் இன்பத்திற்கு ஈடு இணையே இல்லை.
- ரஜினிகாந்த் (1985)
>>> Part
73
|