ரஜினிக்கு
பிடித்தது எது? பிடிக்காதது எது?
ரஜினிகாந்த்,
வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு, சூப்பர் ஸ்டாராக உயர்ந்தவர்.
யாருக்கும் அஞ்சாமல், தன் கருத்துக்களை வெளிப்படையாக பேசுபவர்.
அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேட்டிகளிலும், கட்டுரைகளிலும்
தன்னைப்பற்றியும், தன் விருப்பு - வெறுப்புகள் பற்றியும்
குறிப்பிடுள்ளார்.
இவர்தான் ரஜினி
எதையும் நேருக்கு நேர் பேசுவதுதான் ரஜினிக்குப் பிடிக்கும். "வெட்டு
ஒன்று துண்டு ரெண்டு'' என்று தன் கருத்தை கூறிவிடுவார். இல்லாத
ஒருவர் பற்றி பேசுவது, அவருக்குப் பிடிக்காது. இரண்டு பேர்
பேசும்போது, அங்கு இல்லாத மூன்றாவது நபர் பற்றி பேசினால், அவர்கள்
பேச்சில் கலந்து கொள்ளமாட்டார். மவுனமாக இருந்து விடுவார்.
தன்னைப் பார்க்க வருகிறவர் ஏழையானாலும், பணக்காரர் ஆனாலும் ரஜினி
எழுந்து நின்று வரவேற்பார். அதே போல, அவர்கள் புறப்படும்போதும்,
எழுந்து நின்று கை குலுக்கி விடை கொடுப்பார்.
"நீ சினிமாவில் நடி. வாழ்க்கையில் நடிக்காதே'' என்று ரஜினியிடம்
முன்பு ஒரு சமயம் கூறினார், டைரக்டர் கே.பாலசந்தர். அதை வேதவாக்காக
ரஜினி கடைபிடித்து வருகிறார். அதனால்தான், அவர் பொது நிகழ்ச்சிகளில்
எவ்வித மேக்கப்பும் செய்து கொள்ளாமல் வெள்ளை தாடி - மீசையுடன்,
வழுக்கைத் தலையுடன் கலந்து கொள்கிறார். இந்தியாவிலும் சரி,
வெளிநாடுகளிலும் சரி, "மேக்-அப்'' இன்றி விழாக்களுக்கு வருகிற
நடிகர் இவராகத்தான் இருக்கும்.
பிடித்த உணவு
அசைவ உணவுகளில், வஞ்சிரம் மீனும், பிரியாணியும் ரஜினிக்கு மிகவும்
பிடிக்கும்.
தரையில் அமர்ந்து வாழை இலையில் சாப்பிடுவதையே விரும்புவார். ஆனால்,
முடிவதில்லை.
நாயின் விசுவாசம்
நாய் வளர்ப்பது ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். போயஸ் தோட்டத்தில்
அவர் வீட்டில் வளரும் நாயின் பெயர் "நந்தா'' கேளம்பாக்கம் பண்ணை
வீட்டில் இருக்கும் நாயின் பெயர் "கங்கா.''
ரஜினி மீது அளவு கடந்த பாசம் கொண்டது இந்த நாய். இரவு எவ்வளவு
நேரமானாலும், ரஜினி வரும் வரை சாப்பிடாது; தூங்காது.
காலையில் ரஜினி வீட்டை விட்டு கிளம்பும்போது, இதனுடன் கொஞ்ச நேரம்
கொஞ்ச வேண்டும். இல்லாவிட்டால் "லொள்... லொள்'' என்று குரைத்து, ஏக
கலாட்டா செய்யும்.
தினசரி தியானம்
கேளம்பாக்கத்து வீடு, பசும்புல்வெளி, வளர்ந்த மரங்கள், செடி,
கொடிகள் என்று மிக அழகாகப் பராமரிக்கப்படுகிறது.
தினமும் காலையும், மாலையும் "ஓம்'' என்ற இசைப்பின்னணியில் ஒரு மணி
நேரம் தியானம் செய்கிறார், ரஜினி.
திருமண வாழ்த்து
ரஜினி தனக்கு வரும் ரசிகர்களின் திருமண அழைப்பிதழ், வாழ்த்து
அட்டைகளுக்கு நன்றி தெரிவித்து பதில் வாழ்த்து அனுப்புவதற்கு
தனியாக ஒரு அலுவலரை வைத்து இருக்கிறார்.
நேரில் கலந்து கொள்ளும் திருமணங்களில், மணமக்களுக்கு இவர் அளிக்கும்
பரிசு - வீணை வாசிக்கும் ஸ்ரீராகவேந்திரர் உருவப்படம்.
தன் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகும் ஹீரோயின் வீட்டுக்கு தானே
போன் செய்து வாழ்த்து தெரிவிப்பது ரஜினியின் வழக்கம்.
பொதுவாக எல்லோரும் கார் எண்களை சுலபமாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும்
வகையில் தேர்வு செய்வார்கள். ஆனால் ரஜினி இதற்கு நேர் எதிர். யாரும்
எளிதில் ஞாபகம் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக, நெம்பர்களை மனம்
போன போக்கில் தேர்வு செய்வார்!
நகை வேண்டாம்!
ரஜினி மோதிரம், பிரெஸ்லெட் முதலான நகைகள் எதையும் அணிவதில்லை.
சச்சிதானந்த சுவாமிகள் பரிசளித்த கைக்கெடிகாரம் ஒன்றை மட்டுமே
அணிகிறார். இந்த கெடிகாரத்தின் நடுவே, சச்சிதானந்த சுவாமிகளின்
உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
பிடித்த நாவல்
ரஜினிக்கு மிகவும் பிடித்தமான நாவல்கள்: கல்கியின் "பொன்னியின்
செல்வன்'', தி.ஜானகிராமனின் "அம்மா வந்தாள்.''
பிடித்தமான எழுத்தாளர்: ஜெயகாந்தன்.
பிடித்தமான கவிஞர்: கண்ணதாசன்.
பிடித்தமான பாடல்கள்: சந்திரபாபு பாடிய பாடல்கள்.
மகாத்மா காந்தி
தேசத் தலைவர்களில், மகாத்மா காந்தி மீது மிகுந்த பற்று கொண்டவர்
ரஜினி. "காந்தியடிகள் மிகப்பெரிய யோகி. சத்தியத்தின் சொரூபம்''
என்று கூறியுள்ளார்.
கலைஞர் கருணாநிதியின் வசனத்தை பேசி நடிக்க வேண்டும் என்பது,
ரஜினியின் நீண்ட கால விருப்பம்.
கண் தானம்
போலியோ தடுப்பு பற்றிய 2 நிமிட குறும்படத்தில் தோன்றி பேசினார். அது
பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதுபோல், கண்தானம் பற்றிய படத்திலும் தோன்றினார். அத்துடன் தனது
குடும்பத்தினருடன் கண்தானம் செய்ய பதிவு செய்து கொண்டார்.
>>> Part 75
|