ரஜினி கட்டிய
திருமண மண்டபம்
கருணாநிதி திறந்து வைத்தார்
14-12-1989
நடிகர் ரஜினிகாந்த், தனது தெய்வமாக வழிபடும் ராகவேந்திரா
சுவாமிகளின் பெயரால், சென்னையில் திருமண மண்டபம் கட்டியுள்ளார். அதை
முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.
"ராகவேந்திரா மண்டபம்'' என்று பெயரிடப்பட்டுள்ள இத் திருமண மண்டபம்,
சென்னை கோடம்பாக்கத்தில் லிபர்டி தியேட்டர் அருகே நவீன வசதிகளுடன்
கட்டப்பட்டுள்ளது. சுமார் 3 ஆயிரம் பேர் உட்கார்ந்து, நிகழ்ச்சிகளை
காணலாம்.
கருணாநிதி
இந்தத் திருமண மண்டபத்தின் திறப்பு விழா 1989 டிசம்பர் 14-ந்தேதி
நடைபெற்றது. விழாவுக்கு, முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கி,
மண்டபத்தைத் திறந்து வைத்தார்.
அவர் ஒரு பொத்தானை அழுத்தியதும் மண்டபத்தின் திருமண முகூர்த்த
மேடையை மூடி இருந்த பட்டுத்திரை விலகியது.
கருணாநிதி வாழ்த்துரை வழங்கி பேசும்போது கூறியதாவது:-
அன்புத்தம்பி
"இங்கே அனைவரையும் அழைத்து அன்பினை பொழிந்து வரவேற்ற அன்பிற்குரிய
தம்பி ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபத்தை திறந்து வைத்து
வாழ்த்துரை வழங்குவதில் பெருமைப்படுகிறேன். பெரும் மகிழ்ச்சி
அடைகிறேன்.
ஏதோ நான் ஆட்சிப் பொறுப்பில் உள்ள இப்போதுதான் அன்புத்தம்பி
ரஜினிகாந்த் என்னிடத்தில் அன்பு கொண்டவர் அல்ல. ஆட்சிப் பொறுப்பில்
இல்லாது பல்வேறு அல்லல்களை நான் அனுபவித்துக் கொண்டிருந்தபோதே
என்னிடம் அன்பு கொண்டிருந்தவர். அதை அவர் வெளிப்படையாக காட்டிக்
கொள்ளாவிட்டாலும் ரகசியமாக என்னிடத்தில் பாசத்துடன் பழக்கம்
கொண்டிருந்தவர். அவருடைய விழாவில் நான் கலந்து கொண்டதை
நன்றிப்பெருக்குடன் ஆற்றும் கடமையாக கருதுகிறேன்.
மண்ணின் மைந்தர்
தொடக்கத்தில் ரஜினிகாந்த் பேசும்போது தனது தந்தை தமிழகத்தில்
கிருஷ்ணகிரி அருகில் உள்ள நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர் என்று
கூறினார். அதைக் குறிப்பிட்டு அதற்கு பின்பு இங்கே பேசிய நண்பர்
வாழப்பாடி ராமமூர்த்தி, ரஜினிகாந்த் எனது கிருஷ்ணகிரி தொகுதியைச்
சேர்ந்தவர். அதனால் எங்களுடைய "மண்ணின் மைந்தர்'' என்று
குறிப்பிட்டு பேசினார்.
மண்ணின் மைந்தர் என்ற கொள்கையை அகில இந்திய காங்கிரஸ் கட்சி
ஒப்புக்கொள்வதில்லை. ஆனாலும் வாழப்பாடி ராமமூர்த்தி மண்ணின் மைந்தர்
என்று சொன்னதை கேட்டதும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு "யாதும் ஊரே
யாவரும் கேளிர்'' என்று பாடிய கணியன் பூங்குன்றனார் நினைவுக்கு
வருகிறார். அவரும் தான் பிறந்த ஊரை தனது பெயருடன் சேர்க்க
தவறியதில்லை. அதனால் மண்ணின் மைந்தர்கள் என்று சொல்வதில் நியாயம்
உள்ளது.
ஏழைகள் திருமணம்
ஏழை, எளியோருக்கும் திருமணம் நடத்த இங்கே இடம் அளிக்கப்படும் என்று
ரஜினிகாந்த் கூறியது மகிழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் உரியது.
இது எனது குடும்ப விழா. இதில் கலந்து கொள்வதில் மீண்டும் எனது
மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.''
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
ரஜினிகாந்த் பேச்சு
தொடக்கத்தில் ரஜினிகாந்த் பேசுகையில் கூறியதாவது:-
"என்னைப் பற்றிச் சொல்வார்கள் `கன்னடக்காரன், தமிழ்நாட்டுக்கு
வந்திருக்கிறான்' என்று. உண்மைதான். ஆனால் ஆராய்ந்து பார்த்தால்,
அதில் இன்னும் சில விஷயங்கள் தெரியவரும்.
எங்களுடைய பூர்வீகம் கிருஷ்ணகிரி. என் தந்தை கிருஷ்ணகிரியிலுள்ள
நாச்சிக்குப்பம் கிராமத்தில் பிறந்தவர், வாழ்ந்தவர். கிருஷ்ணகிரி
தமிழ்நாட்டில் உள்ளது.
நான் தெய்வமாக வழிபடும் ஸ்ரீராகவேந்திரா சுவாமி, ஒரு தமிழர்.
ஆன்மீகத்தில் நான் குருவாக வழிபடும் ரமணமகரிஷி ஒரு தமிழர்.
சிவாஜிராவாக இருந்த எனக்குப் பெயர் சூட்டி, தமிழ் கற்றுத்தந்து,
எனக்கு மறுவாழ்வு கொடுத்து, என்னைத் தத்தெடுத்து அறிமுகப்படுத்திய
கே.பாலசந்தர் அவர்கள் தமிழர்.
ஆரம்பத்திலிருந்தே என்னைச் சினிமாவில் சேரச்சொல்லி ஊக்கப்படுத்திய
என் ஆப்த நண்பர் ராஜ்பகதூர் தமிழன்.
வாழ்நாள் முழுவதும் துணைவருவதாகக் கூறி, என் வீட்டில் விளக்கேற்றிய
என் மனைவி லதா ஒரு தமிழச்சி.
என் குழந்தைகள் வாய் திறந்தவுடன் பேசிய முதல் வார்த்தை, தமிழ்.
உயிரினும் மேலான தமிழ் ரசிகர்கள்
எனக்கு அன்பையும், ஆதரவையும் அள்ளிக்கொடுத்து, என்னை இந்த நிலைக்கு
உயர்த்தியிருக்கும் என் உயிரினும் மேலான ரசிகப்பெருமக்கள் தமிழர்கள்.
அப்படியென்றால் நான் யார்? நீங்களே சொல்லுங்கள்.''
இவ்வாறு ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.
பாலசந்தர்
ரஜினியின் குருவான டைரக்டர் பாலசந்தர், குத்துவிளக்கேற்றி வைத்துப்
பேசினார்.
விழாவில் சிவாஜிகணேசன், ஆர்.எம்.வீரப்பன், தமிழ்நாடு இ.காங்கிரஸ்
கட்சி தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி, பட அதிபர் ஏவி.எம்.சரவணன், பட
அதிபரும் கதை வசனம் பாடல் ஆசிரியருமான பஞ்சு அருணாசலம், இசை
அமைப்பாளர் இளையராஜா, எழுத்தாளரும், நடிகருமான சோ, ரஜினிகாந்தின்
அண்ணன் சத்தியநாராயணராவ் கெய்க்வாட், ரஜினிகாந்த் பெங்களூரில் பஸ்
கண்டக்டராக இருந்தபோது அவருடன் 5 ஆண்டுகள் பஸ் டிரைவராக இருந்து
பணியாற்றியவரும், ரஜினிகாந்த் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து
படித்து முன்னேற உதவி செய்தவருமான ராஜ்பகதூர் ஆகியோர் பாராட்டிப்
பேசினார்கள்.
முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் விழாவில் பாராட்டுரை நிகழ்த்திய
அனைவருக்கும் ரஜினிகாந்தின் மனைவி லதா மலர்க்கொத்து வழங்கி
வரவேற்றார்.
விழாவுக்கு வந்தவர்களை டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், நடிகர்கள்
ஒய்.ஜி.மகேந்திரன், விஜயகுமார், அகில இந்திய ரஜினிகாந்த் நற்பணி
மன்ற தலைவர் சத்யநாராயணா ஆகியோர் வரவேற்றனர்.
>>> Part 76
|