ரஜினியின்
பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை'
வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது
ரஜினியின் திரை உலகப் பயணத்தில் ஒரு முக்கிய மைல் கல்லாகவும்,
வசூலைக் குவித்த வெற்றிப்படமாகவும் திகழ்வது "அண்ணாமலை.''
இதில் ரஜினியும், குஷ்புவும் ஜோடியாக நடித்தனர். கவிதாலயா (கே.பாலசந்தர்)
தயாரித்த இப்படத்தை சுரேஷ்கிருஷ்ணா இயக்கினார்.
கதை
"எத்தனை தடைகள் வந்தாலும், தன்னம்பிக்கை உடையவன் போராடி வெற்றி
பெறுவான்'' என்பதை எடுத்துக்கூறும் கதை.
அண்ணாமலை என்ற பால்காரன் வேடத்தை தாங்கி நடித்தார், ரஜினி.
அண்ணாமலையும், அசோக்கும் (சரத்பாபு) நண்பர்கள். அசோக் பெரிய
பணக்காரன் என்றாலும், அந்தஸ்து பார்க்காமல், இருவரும் உயிருக்கு
உயிரான நண்பர்களாகப் பழகுகிறார்கள்.
அசோக்கின் அப்பா (ராதாரவி) நகரின் மத்தியில் ஒரு ஸ்டார் ஓட்டல்
கட்ட விரும்புகிறார். அதற்கான இடம் தேடியபோது, அண்ணாமலையின்
மாட்டுப் பண்ணையுடன் கூடிய வீடு, ஓட்டல் கட்ட பொருத்தமாக இருக்கும்
என்று நம்புகிறார். அதனால் மகன் அசோக்கை அனுப்பி, அந்த இடத்தை
கேட்க வைக்கிறார்.
அந்த இடத்தை பலர் கோடிக்கணக்கில் பணம் தருவதாகச் சொல்லியும்,
விற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிடிவாதம் காட்டி வந்தான்
அண்ணாமலை. ஆனால் நண்பன் கேட்டபோதோ, விலை கூட கேட்காமல், நண்பனின்
அப்பா நட்டிய வெற்றுப் பேப்பரில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து
விடுகிறான்.
அசோக்கின் அப்பா, தனது மகனுக்கும், அண்ணாமலைக்குமான நட்பை பிரிக்க
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறார். ஓட்டல் திறப்பு
விழாவுக்கு வந்த அண்ணாமலையை அவமானப்படுத்துகிறார். ஆத்திரம் அடைந்த
அண்ணாமலை அசோக்கின் அப்பாவை அடித்துவிட, தனது தந்தையை அடித்த
அண்ணாமலையை திருப்பி அடித்து விடுகிறான், அசோக்.
அண்ணாமலையின் வீடு அசோக்கின் ஆட்களால் புல்டோசர் மூலம்
இடிக்கப்படுகிறது. நண்பனை நம்பி கையெழுத்துப்போட்ட அண்ணாமலை இப்போது
தனது தாயார், தங்கையுடன் நடுத்தெருவுக்கு வந்துவிடுகிறான்.
நட்புத் துரோகம், வீட்டோடு நிலத்தை பறிகொடுத்த கோபம் எல்லாம்
சேர்ந்து அண்ணாமலையை ஆவேசமாக்குகிறது. நண்பன் அசோக்கை சந்திப்பவன்,
"உன்னைவிட பணம் படைத்தவனாக உயர்ந்து காட்டுகிறேன்'' என்று சவால்
விடுகிறான். சவாலை நிஜமாக்க அண்ணாமலையுடன் அவன் குடும்பமும்
சேர்ந்து உழைக்கிறது.
அசோக்கிடம் இருந்த ரவி (நிழல்கள்ரவி) அவனை ஏமாற்றி கையாடல்
செய்ததால் துரத்தப்படுகிறான். அவன் அண்ணாமலையிடம் வேலைக்கு
சேருகிறான். அவன் மீது ரஜினியின் தங்கை காதல் கொள்ள, ரவியை தனது
வீட்டு மாப்பிள்ளையாக்கிக் கொள்கிறான். அண்ணாமலை.
திருமணத்துக்குப்பிறகு தனது சுயரூபத்தைக் காட்டும் ரவி, பணம் கேட்டு
மனைவியை கொடுமைப்படுத்துகிறான். ஒருநாள் இது அண்ணாமலைக்குத்
தெரியவர, அவனை அடித்து துரத்துகிறான்.
இப்போது அண்ணாமலை, அசோக் இருவருக்கும் பொது எதிரியாகிவிட்ட ரவி,
அவர்களை பழிவாங்க சரியான தருணம் நோக்கி
காத்திருக்கிறான்.சவாலில் வெற்றி
இதற்கிடையே நண்பன் அசோக்கிடம் விட்ட சவாலில் ஜெயிக்கிறான் அண்ணாமலை.
அசோக்கை விடவும் அந்தஸ்தில் உயர்ந்த அண்ணாமலை, தனது சாதுரியம் மூலம்
அசோக்கின் செல்வத்தையும், செல்வாக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக
சிதறடிக்கிறான். ஒரு கட்டத்தில் அசோக்கின் வீடும் அண்ணாமலையின்
கைக்கு வந்து விடுகிறது.
காலம் விரைகிறது. இப்போது அண்ணாமலையின் மகளும், அசோக்கின் மகனும்
கல்லூரியில் படிக்கிறார்கள். நட்புடன் பழகி வந்த இவர்களுக்குள்
காதல் அரும்ப, மகளின் காதலன் யாரென்று தெரிந்த அண்ணாமலை நொறுங்கிப்
போகிறார். மகளின் காதலுக்கு தடை போடுகிறார்.
ரஜினியின் தங்கை கணவன் இப்போது தனது பழிவாங்கும் படலத்தை
தொடங்குகிறான். அசோக்கை அடியாட்கள் மூலம் கடத்தி கொல்லத் துணிகிறான்.
இந்த தகவல் அண்ணாமலைக்குத் தெரியவர, அதுவரை இருந்த பிடிவாதம், கோபம்
விலகி, நண்பனை காப்பாற்ற ஓடி வருகிறார். எதிரிகளை துரத்தியடித்து
நண்பனை மீட்கிறார். பழைய நட்பு மீண்டும் கைகோர்க்கிறது. நண்பனின்
வீட்டை அவனுக்கே திருப்பிக் கொடுத்த அண்ணாமலை, மகளை நண்பன்
வீட்டுக்கு மருமகளாக அனுப்பி வைக்கிறார்.
காமெடி காட்சிகள்
நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்த இந்தக் கதை யில், ரஜினி -
குஷ்புவின் ஆரம்ப சந்திப்புகளும், காமெடிக் கலாட்டாக்களும்
ரசனையானவை. லேடீஸ் ஹாஸ்டலில் குளிக்கும்போது குஷ்புவை
பார்த்துவிடும் ரஜினி, `கடவுளே கடவுளே' என புலம்புவதும், அதன் பிறகு
குஷ்புவை பார்க்கும் போதெல்லாம் "கடவுளே கடவுளே'' என சொல்வதும் திரை
அரங்குகளை குலுங்கச்செய்த காமெடி.
சரத்பாபுவின் ஜோடியாக அந்நாளைய கதாநாயகி ரேகா நடித்திருந்தார்.
சரத்பாபுவின் மகனாக வந்தவர் நடிகர் கரண்.
அண்ணாமலை கதையின் மூலம் "குதா காகர்ஸ்'' என்ற இந்திப்படமாகும்.
அதைத்தழுவி வசனம் எழுதியவர் சண்முகசுந்தரம்.
படத்தின் வெற்றிக்கு, கவிஞர் வைரமுத்து எழுதி தேவா இசை அமைத்த
பாடல்களும் முக்கிய காரணம்.
"வந்தேண்டா பால்காரன்'', "அண்ணாமலை அண்ணாமலை! ஆசை வெச்சேன் உண்ணாமலே'',
"கொண்டையில் தாழம்பூ'', "வெற்றி நிச்சயம் - இது வேத சத்தியம்'', "ரெக்கை
கட்டிப் பறக்குதம்மா அண்ணாமலை சைக்கிள்'' போன்ற பாடல்கள் மூலை
முடுக்கில் எல்லாம்
எதிரொலித்தன.முதலில் இந்தப்படத்தை வசந்த் டைரக்ட் செய்வார் என்று
கூறப்பட்டது. பிறகு அந்த வாய்ப்பு சுரேஷ் கிருஷ்ணாவுக்கு கிடைத்தது.
அவர் "நட்சத்திர இயக்குனர்'' அந்தஸ்தைப் பெற்றார்.
27-6-1992-ல் வெளியான இப்படம், 175 நாட்கள் ஓடி வெள்ளி விழா
கொண்டாடியது.
>>> Part 77
|