ராகவேந்திரர்
மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்
"ஸ்ரீராகவேந்திரர்'' படம் சரியாக ஓடாததால், ரஜினிகாந்த் கோபம்
அடைந்தார். "உன்னைக் கும்பிடமாட்டேன்'' என்று கூறி, ராகவேந்திரர்
கோவிலுக்குப் போகாமல் இருந்தார்.
இந்தத் தகவலை, விழா ஒன்றில் பேசுகையில் ரஜினியே வெளியிட்டார்.
ரஜினி கூறியதாவது:-
"சின்ன வயசிலே ராமகிருஷ்ண ஆசிரமத்தில் வேதம் உபநிஷத் எல்லாம் நான்
படித்ததினால் `அஹம்ப்ரும்மாஸ்மி' அதாவது `ஆண்டவன் நமக்குள்
இருக்கிறான்' என்பதை நான் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அதனுடைய
அர்த்தம், விளக்கம் எல்லாம் அப்போ எனக்குத் தெரியாது. ஸோ,
ராகவேந்திர சுவாமியை வீட்ல கும்பிடறாங்க. நானும் கும்பிட்டேன்.
கனவில் வந்தார்
ஒரு சமயம் ஸ்ரீராகவேந்திரர் என் கனவிலே வந்து அது தொடர்பாக நடந்த
அதிசயங்களைப் பற்றி முன்னரே ஒருமுறை சொல்லியிருக்கிறேன். அதற்குப்
பிறகு நான் ராகவேந்திரர் சுவாமி மடத்திற்கெல்லாம் போவேன். வருஷா
வருஷம் மந்த்ராலயம் போய் வந்தேன்.
அங்கே போனால் அந்தக்கூட்டம், டிஸ்டபன்ஸ் எல்லாம் எனக்கே என்னவோ போல்
தோன்றியது.
எனவே, "மந்த்ராலயம் போவானேன். இங்கேயே திருவல்லிக்கேணியில்
ராகவேந்திரர் மடம் இருக்கிறதே, அங்குதான் போய் வருவோமே'' என்று
ஒவ்வொரு வியாழக்கிழமையும் போக ஆரம்பித்தேன். நான் ரெகுலராக
வருகிறேன் என்றதால், அங்கேயும் கூட்டம் ஜாஸ்தியாகிவிட்டது.
அதற்கு பிறகு இன்னமும் சுருக்கிக்கொண்டு, `திருவல்லிக்கேணிக்குப்
போனால்தான் ராகவேந்திர சுவாமியைக் கும்பிடமுடியுமா, நம்ம பூஜை
அறையிலேயே ராகவேந்திர சுவாமியை வைத்திருக்கிறோமே, இவர் வேறு, அவர்
வேறா' என்று நினைத்து, வீட்டிலேயே கும்பிடலாம் என்று தீர்மானித்தேன்.
அப்போதிலிருந்து நான் கோவிலுக்குப் போறதில்லை.
100-வது படம்
முதலில் இருந்தே எனக்கு ஒரு ஆசை. நான் இருபத்தைந்து படம் நடித்துக்
கொண்டிருந்தபோது அந்த எண்ணம் எனக்குள் நன்றாக தோன்றிவிட்டது.
என்னுடைய நூறாவது படத்தில் நான் ஸ்ரீராகவேந்திரராகத் தோன்ற வேண்டும்
என்ற ஆசை வளர்ந்து கொண்டேயிருந்தது.
கன்னட நடிகர் ராஜ்குமார் ஏற்கனவே ராகவேந்திரர் படம் பண்ணியிருந்தார்.
பாலசந்தர் சார்கிட்டே, "நான் ராகவேந்திரர் படம் பண்ண ஆசைப்படுகிறேன்''
என்று சொன்னபோது அவருக்கு ஆச்சரியம்!
"சரிப்பா, உன் இஷ்டம், அப்படியே செய்'' என்று பாலசந்தர் சார்
சொன்னார்.
அதன்படி, "ஸ்ரீராகவேந்திரர்'' படத்தில் நான் நடித்தேன்.
மனக்கஷ்டம்
படம் வெளியாகி, அந்தப் படம் சரியாக ஓடவில்லை என்ற நிலை ஏற்பட்டபோது
என் மனசுக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது. ஸ்ரீராகவேந்திர சுவாமியிடம்
மனமுருகிப் பிரார்த்தித்தேன்.
"நான் பிஸினசுக்காக இந்தப் படத்தில் நடிக்கவில்லை. நீங்கள் எவ்வளவு
பெரிய மகான். உங்களுடைய அபாரமான சக்தியைப் பரப்புவதற்காகத்தான்
இந்தப்படம் எடுத்தோம். இந்தப் படம் சரியாகப் போகவில்லை என்றால்
நீங்கள் என்ன பெரிய மகான்! - ஆண்டவன்கிட்டே நான் எப்போதுமே
டைரக்டாதான் பேசுவேன் - "இல்லை, இல்லை ஸாரி! கொஞ்ச நாட்களுக்கு நான்
உன்னைக் கும்பிடமாட்டேன்'' என்று வைராக்கியத்தோடு சொல்லிவிட்டு
பத்துப் பதினைந்து நாட்கள் நான் ராகவேந்திரரைக் கூம்பிடவே இல்லை.
"உன் படத்தை நீயே ஓட்டிக்கொள்ள முடியவில்லை. மற்றதெல்லாம் பேசி
என்ன பயன்'' என்று விட்டுவிட்டேன்.
இந்த சமயத்தில் எதேச்சையாக ராஜ்குமார் சாரை சந்திக்க நேரிட்டது.
ராகவேந்திரர் படம் பார்க்க வேண்டுமென்று சொன்னார். அவருக்கு ஒரு
காஸெட் தயாரித்து அனுப்பி வைத்தேன்.
ராஜ்குமார் அளித்த நம்பிக்கை
அவர் படத்தைப் பார்த்துவிட்டு, "நான் கன்னடத்தில் நடித்த
ராகவேந்திரர் படம் கூட முதலில் சரியாகப் போகவில்லை. அதற்குப் பிறகு
அமோகமாக எப்படிப் போச்சு என்று எனக்கே புரியவில்லை. நீங்கள்
கவலைப்பட வேண்டாம். உங்கள் படம் போகப்போக எங்கே ரிலீஸ் ஆனாலும்
வெற்றி பெறும்'' என்று சொன்னார்.
அவர் படமும் சரி, என் படமும் சரி ஆரம்பத்தில் நன்றாக ஓடவில்லை
என்றாலும் ராஜ்குமார் சொன்னபடியே ராகவேந்திரர் படம் அதன்பின் எங்கே
போட்டாலும் பிரமாதமான வரவேற்பைப் பெற்றது.
ராஜ்குமார் மூலமாக, ஸ்ரீராகவேந்திர சுவாமிதான் இப்படி ஒரு
செய்தியைச் சொல்ல வைத்திருப்பார் என்று நானும் நம்பி "என்னை
மன்னிச்சுடு, அப்பா'' என்று மறுபடியும் ஸ்ரீராகவேந்திர சுவாமியைக்
கும்பிடத் தொடங்கினேன்.
பிறகுதான் தெரிந்தது, ஸ்ரீராகவேந்திரர் தமிழ்ப்படம் எங்கே
போட்டாலும் நல்ல ஆதரவைப் பெற்றது என்கிற விஷயம். ஒவ்வொருவரும்
இந்தப் படத்தை பக்தி பரவசத்துடன் பார்த்து ரசித்தார்கள்.
பாட்டியின் "அட்வைஸ்''
என் மனதைத் தொட்ட சம்பவம் ஒன்று இந்த சமயத்தில் நிகழ்ந்தது. அப்போது
`மாவீரன்' படம் வெளியான சமயம். கோயம்புத்தூரிலிருந்து விமானத்தில்
வந்து கொண்டிருந்தேன். எண்பது வயசுப் பாட்டி ஒருவர், என்னிடம் வந்து,
"தம்பி! சொன்னால் தப்பாக நினைக்கமாட்டாயே?'' என்று பீடிகையுடன்
பேச்சைத் துவக்கினார்.
"ஸ்ரீராகவேந்திரர் படம் பார்த்தேன். அந்தப் பட காஸெட்டையே நான்
வாங்கி வச்சிருக்கேன். தினம் தினம் ஒவ்வொரு தடவை அந்தப் படத்தை நான்
பார்க்கிறேன். உன்னைப் பார்த்தா ஸ்ரீராகவேந்திரர் மாதிரியே இருக்கு.
அவ்வளவு பக்தி பரவசமாக மகான் வேஷத்தில் தோன்றுகிற நீ மோசமான
வார்த்தைகளை மற்ற படங்களில் நடிக்கிறபோது பேசுகிறாயே? அப்படிப்பட்ட
வார்த்தைகள் உன் வாயிலிருந்து வரலாமா? எனக்கு அது அவ்வளவு சரியாகப்
படவில்லை'' என்று அந்தப் பாட்டி சொன்னார்.
அந்தப் பாட்டி சொன்ன அன்றைய தினத்திலிருந்து அப்படிப்பட்ட மோசமான
வார்த்தைகளை நான் பேசுவதில்லை.''
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
>>> Part 79
|