பழைய நண்பர்களை
மறக்காத ரஜினி!
"நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''
திரைப்படக் கல்லூரியில் தன்னுடன்
படித்த பழைய நண்பர்களை இன்னும் மறக்காமல், அவர்களுக்கு உதவி செய்து
வருகிறார், ரஜினிகாந்த்.
"நட்பு என்றால் மூன்றெழுத்து; ரஜினி என்றாலும் மூன்றெழுத்து.
நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்'' என்று ரஜினியின் பழைய
நண்பர்கள் கூறினார்கள்.
இத்தகைய நண்பர்களில் ஒருவரான விட்டல் பிரசாத், ரஜினி பற்றி
கூறியதாவது:-
கறுப்பு வைரம்
1973-ல் சென்னை அடையாறு பிலிம் இன்ஸ்டிடிட்டில் சேர்ந்தபோதுதான்
சிவாஜி (ரஜினியின் பெற்றோர் வைத்த பெயர் சிவாஜிராவ்) என்ற அந்த
கறுப்பு வைரத்தை பார்த்தேன்.
இன்ஸ்டிடிட்டுக்கு படிக்க வந்த புதிதில் முதலில் இரண்டொரு வாரம்,
எங்களிடம் இருந்து கொஞ்சம் விலகியே இருந்தார். பார்த்தால் ஒரு
முரட்டுத்தனம் தெரியும்.
ஆனால் ஒரு மாதத்தில் பழகிவிட்டார். பழகியபிறகுதான் தோற்றத்தில்
முரடாகத் தெரிந்த அவர், உள்ளத்தில் குழந்தை என்பதை தெரிந்து
கொண்டோம்.
இன்ஸ்டிடிட்டில் சில பேரை `வாடா போடா' என்று அழைப்பார். இப்போது
சூப்பர் ஸ்டாராகி புகழேணியின் உச்சியில் இருக்கும் நிலையிலும்
நண்பர்கள் விஷயத்தில் அதே `வாடா போடா'தான். அவருடன் படித்த சதீஷ்,
இப்போதும் ரஜினியைப் பார்த்தால் அவரது பழைய பெயரில் "என்னடா சிவாஜி?''
என்றுதான் அழைப்பார். இது நட்புக்கு ரஜினி கொடுக்கிற மரியாதை
என்றுதான் சொல்லவேண்டும்.
செலவு
ரஜினி நடிக்க ஆரம்பித்த புதிதில் பொருளாதார நிலை அவ்வளவாக சொல்லிக்
கொள்ளும் நிலையில் இல்லை. ஆனாலும் தம்பிக்கு `பணம்' ஒரு
பிரச்சினையாக இருந்து விடக்கூடாது என்பதற்காக அவரது அண்ணன்
சத்யநாராயணன் மாதாமாதம் பணம் அனுப்பி வைப்பார். ரஜினியின் பஸ்
டிரைவர் ராஜ்பகதூரும் பணம் அனுப்பி வைப்பார். இரண்டு பேர்
அனுப்புகிற பணமும் ரஜினியின் சிகரெட் செலவுக்குப் போதாது.
இந்த ராஜ்பகதூர் இப்போது `டிரைவர்' பணியில் இருந்து ஓய்வு
பெற்றுவிட்டார். ரஜினி அழைத்தால் புறப்பட்டு சென்னை வந்துவிடுவார்.
"சந்திரமுகி'' படத்தில்கூட ராஜ்பகதூரை ஒரு சிறு வேடத்தில் நடிக்க
வைத்தவர், ரஜினி.
ஆரம்ப காலத்தில், புதுப்பேட்டையில் இருந்த எங்கள் வீட்டில் என்னோடு
ரஜினி தங்கியிருந்தார் என்பது, இன்றளவும் எனக்கு மகிழ்ச்சியான
விஷயம்.டைரக்ஷன் பயிற்சி
நடிப்புப் பயிற்சி முடிந்தபின், எனக்கு நடிப்புக்கான வாய்ப்புகள்
அத்தனை சரியாக அமையாததால், டைரக்டர் கே.பாலசந்தரிடம் "டைரக்ஷன்
பயிற்சி''யில் சேர்ந்தேன். சில மாத பயிற்சிக்குப்பிறகு விட்டல்
ஞானம் என்ற பெயரில் "சித்திரமே சித்திரமே'' என்ற படத்தை இயக்கினேன்.
நான் படம் இயக்குகிறேன் என்று தெரிந்ததும் ரஜினியே முன்வந்து `கெஸ்ட்
ரோலில்' நடித்துக் கொடுத்தார்.
ரஜினியின் பல படங்களில் எனக்கு சின்ன வேஷமாவது இருக்கும். தர்மதுரை,
மாவீரன் போன்ற படங்களில் நடிப்போடு தயாரிப்பு நிர்வாகப்
பொறுப்பையும் கொடுத்தார். இப்போது நடித்து வரும் `சிவாஜி' படத்தில்
நானோ, மற்ற நண்பர்களோ நடிக்கவில்லை. நானே ஒரு நாள் ரஜினியிடம்
இதுபற்றி கேட்டேன். ரஜினி சொன்ன பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது.
டைரக்டர் ஷங்கரின் படங்களில் யாராவது நடிக்க விரும்பினால் அவரிடம்
முழு பயோடேட்டாவையும் கொடுக்க வேண்டுமாம். அவர் அதை கம்ப்ட்டரில்
பதிவு செய்து கொண்டு, கதைக்கு நாம் சரியாக இருப்போம் என்று
தோன்றுகிற பட்சத்தில் நமக்கு அழைப்பு விடுப்பாராம்.
இதுபற்றி முன்பே தெரிந்திருந்தால் நானும் "பயோடேட்டா''
கொடுத்திருப்பேனே என்று நான் சொல்ல, ரஜினியிடம் இருந்து பதிலாக
வந்தது சிரிப்புதான்.
நாங்கள் ரஜினியின் திருமணம் திருப்பதியில் நடந்தபோதும், அவருடன்
இருந்திருக்கிறோம். அவரது மகள் திருமணத்தின்போதும் அவருடன்
இருந்தோம். சமீபத்தில் பேரன் பிறந்து `தாத்தா' ஆனபோது அவர்
எங்களுடன் அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட விதம் இருக்கிறதே, அதை
வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
நான்கூட அவரிடம், "படத்தில் சில வினாடிகளே இடம் பெறுகிற ஒரு
காட்சிக்காக உடம்பை இவ்வளவு தூரம் வருத்திக் கொள்ள வேண்டுமா?''
என்று கேட்டிருக்கிறேன். பதிலுக்கு ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?
"என் ரசிகர்களின் முழு திருப்திக்காக என்னை தயார் செய்கிறேன். அதில்
ஏற்படும் சிரமங்கள், உடல் அவஸ்தைகள் எனக்கு இரண்டாம் பட்சம்தான்''
என்றார்.
நண்பர்கள் வீட்டில் எந்த நல்லது கெட்டது நடந்தாலும், ரஜினி வராமல்
இருந்ததில்லை. பண்டிகைகள் தவறினாலும் அவர் அனுப்பி வைக்கிற
அன்பளிப்புகள் தவறாது. கடவுள் எங்கள் மீது வைத்த அன்புதான்
எங்களுக்கு ரஜினி நண்பராக கிடைத்திருக்கிறார்.''
இவ்வாறு விட்டல் பிரசாத் கூறினார்.
ராஜ்மதன்
ரஜினியின் மற்றொரு நண்பர் ராஜ்மதன். இவர், கே.பாலசந்தர் இயக்கிய `தண்ணீர்
தண்ணீர்' படத்தில் கதாநாயகனாக நடித்தவர்.
புதுச்சேரியை சேர்ந்த இவர் கூறியதாவது:-
எனக்கு உருது, தெலுங்கு தெரியும். நண்பர்களுடன் பேசும்போது
பெரும்பாலும் இந்த மொழிகளிலேயே பேசுவேன். ஆனால் ரஜினியோ என்னிடம்,
"நீ தமிழிலேயே பேசு. புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்'' என்பார்.
தமிழை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் ரஜினி அத்தனை ஆர்வமாக
இருந்தார். அதிலும் டைரக்டர் கே.பாலசந்தரின் பார்வை அவர் மீது பட்ட
பிறகு தமிழைக் கற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்பதில் `வெறி'யாகவே
இருந்தார் எனலாம்.
படிப்பை முடித்துவிட்டு வந்த பிறகு நடிக்க முயற்சித்தேன். சினிமா
வாய்ப்பு தள்ளிப் போனதால், கோமல் சுவாமிநாதன் நாடகக் குழுவில் இடம்
கிடைத்தது. அவரது குழுவில் நடித்த `தண்ணீர் தண்ணீர்' நாடகம் அப்போது
பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நாடகத்தை பார்க்க வந்த டைரக்டர்
கே.பாலசந்தர் இதை படமாக இயக்கினார். நாடகத்தில் நான் நடித்த அதே
ஹீரோ வேடத்தையே படத்திலும் எனக்கு
தந்தார்.தொடர்ந்து "ஒரு இந்தியக் கனவு'', "அனல் காற்று'', "யுத்தகாண்டம்''
போன்ற சமூக அக்கறை கலந்த படங்களே வந்தன. இதனால் `ஆக்ஷன் ஹீரோ' என்ற
பட்டியலுக்குள் என்னால் வரமுடியவில்லை. (இந்தப் படங்களில் `ஒரு
இந்தியக் கனவு' படம் சிறந்த படமாக மத்திய அரசின் விருது பெற்றது
குறிப்பிடத்தக்கது)
தொடர்ந்து ரஜினியே தயாரித்த `வள்ளி' படத்தில் வாத்தியார் வேடம், `வால்டர்
வெற்றிவேல்' படத்தில் நடிகர் சத்யராஜின் தங்கை கணவர் என சில
படங்களில் நடித்தேன். ரஜினியுடன் நான் நடித்த படங்களில் "சங்கர்
சலீம் சைமன்'', "பாண்டியன்'' ஆகியவை
முக்கியமானவை.தொடர்ந்து சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. "விழுதுகள்'',
"சித்தி'', "அண்ணாமலை'', "மனைவி'' போன்ற தொடர்களில் நல்ல
கேரக்டர்கள் அமைந்தது.
நண்பர்களிடன் சந்திப்பு
நண்பர்கள் என்ற முறையில் இப்போதும் மாதம் ஒரு தடவையாவது எங்களை
சந்தித்து விடுவார் ரஜினி. அப்படி அவர் சந்திக்கும் நாட்களில்
எங்களில் யாராவது ஒருவர் வரவில்லை என்றால், "எங்கே அவன்? அவ்வளவு
பிசியாயிட்டானா?'' என்று கேட்பார். நண்பர்களிடம் பேசும்போது தன்னை
மிகவும் ரிலாக்சாக உணருகிறார்.
அவர் குடும்ப நிகழ்ச்சிகள் பற்றி நாங்களாக கேட்கமாட்டோம். அவராக
சொல்வார். மகள் திருமண விஷயம் பற்றிக்கூட அவராகவே எங்களிடம்
சொன்னார்.
சில படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளும் முன்பு கதை அவருக்கு
வித்தியாசமாகவோ, பிரமிப்பாகவோ தெரிந்தால் அந்தக் கதையை எங்களிடம்
சொல்வார். காட்சிகளை சொல்லும்போது எங்கள் முகங்களில் வெளிப்படும்
ரியாக்ஷனை கவனிப்பார். அருணாச்சலம், வீரா, படையப்பா போன்ற படங்களின்
முழுக்கதையையும் சொல்லி, எங்கள் உணர்வுகளை பகிர்ந்து
கொண்டிருக்கிறார்.
எளிமை
ஒரு நண்பராக ரஜினியிடம் இப்போதும் எனக்குப் பிடித்த விஷயம், அவரது
எளிமை. இன்ஸ்டிடிட் மாணவராக சந்தித்த நாட்களில் எப்படிப் பழகினாரோ,
அதேதான் இப்போதும் `சூப்பர் ஸ்டார்' என்ற இமேஜ் அவரை எங்களிடம்
இருந்து கொஞ்சம் கூட தள்ளிவைக்கவில்லை.
நட்புக்கு இலக்கணம் ரஜினி.''
இவ்வாறு ராஜ்மதன் கூறினார்.
>>> Part
80
|