`நான் நடிகனாக
காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்'
ரஜினி நெகிழ்ச்சி பேட்டி
"நான் நடிகனாவதற்குக் காரணமே என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்தான். அவனை
என்றென்றும் மறக்கமாட்டேன்'' என்று ரஜினிகாந்த் கூறினார்.
ஆரம்ப காலத்தில் தனக்கு உதவி செய்தவர்களை மறக்காதவர் ரஜினி.
ராஜ்பகதூர் பற்றி, மனம் நெகிழ்ந்து அவர் கூறியதாவது:-
"நானும், ராஜ்பகதூரும் பெங்களூரில் ஒன்றாக வேலை பார்த்தோம். நான்
கண்டக்டர். அவன் டிரைவர்.
ராஜ்பகதூரிடம் எனக்குப் பிடித்த குணம், அவன் யதார்த்த மனிதன்.
வாழ்க்கையில் பெரிய ஆசைகளோ, `இதைச் சாதிக்க வேண்டும், அதைச்
சாதிக்க வேண்டும்' என்ற விருப்பமோ இல்லாதவன்.
எனக்கு சாராயம் பிடிக்கும். அவன் பிராந்தி போன்ற மது வகைகளைத்தான்
குடிப்பான்.
நான் சாராயம் குடிக்கப்போனால், நான் திரும்பி வரும்வரை வாசலில்
காத்திருப்பான். அவன் பாருக்குப்போனால், அவன் திரும்பி வரும்வரை
நான் பிளாட்பாரத்தில் நின்று கொண்டு இருப்பேன்.
சிவாஜி ரசிகர்கள்
இவ்வளவு வேறுபாடுகள் இருந்தும் எங்களுக்குள் ஒற்றுமை ஏற்படுத்தியவர்
ஒருவர். அவர்தான் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்!
நாங்கள் இருவருமே சிவாஜியின் ரசிகர்கள். எங்களிடையே நட்பு
நெருங்குவதற்கு அதுவும் ஒரு காரணம். இருவரும் சிவாஜி நடித்த
படங்களுக்கு செல்வோம். ஒவ்வொரு காட்சியிலும், சிவாஜியின் நடிப்பைப்
பார்த்து பாராட்டி மகிழ்வோம்.
ராஜ்பகதூருக்கு நடிப்பில் ஆர்வம் இருந்தது. எனக்கு விருப்பம் இல்லை.
"குருசேத்திரம்'' என்ற நாடகத்தை ராஜ்பகதூர் போட்டான். அதில்
அவனுக்கு கிருஷ்ண பகவான் வேடம். உருவத்துக்கும், அழகுக்கும்
பொருத்தமான வேடம்.
அப்போது நான் குண்டாக இருந்தேன். என்னை துரியோதனனாக நடிக்கச்
சொன்னான்.
"இதோ பாரப்பா! நமக்கு நடிப்பெல்லாம் வராது'' என்றேன்.
"நல்ல உடம்பு இருக்கு. கவர்ச்சியான கண் இருக்கு. மீசையும்,
கிரீடமும் வச்சு சும்மா வந்து நில்லு. கை தட்டல் விழும்.
கவலைப்படாதே!'' என்றான், ராஜ்பகதூர்.
"சரிப்பா. உனக்காகப் பண்றேன். நல்லா வரலேன்னா என்னைத் திட்டக்கூடாது''
என்றேன்.
முதல் அனுபவம்
முதன் முதலாக என்னை நாடக மேடைக்கு அழைத்துச்சென்ற பெருமை
ராஜ்பகதூரையே சேரும்.
முதல் நாள் ஒத்திகைக்குச் சென்றேன். பாடி நடிக்க வேண்டிய நாடகம் அது.
"எனக்குப் பாட வராது. மாஸ்டர் பாடட்டும். நான் வாயசைக்கிறேன்''
என்று கூறிவிட்டு, வசனத்தை மட்டும் ராஜ்பகதூரிடம் இருந்து
பெற்றுக்கொண்டேன். நன்றாக மனப்பாடம் செய்தேன்.
சிவாஜி ஸ்டைல், என்.டி.ராமராவ் ஸ்டைல் இரண்டையும் கலந்து,
ஒத்திகையில் நடித்தேன். அது புதுமையாக இருந்ததால்,
கூடியிருந்தவர்கள் பெரிதும் ரசித்தார்கள்.
அன்று ஒத்திகை முடிந்தவுடன் ஒரு ஆச்சரியமான, அதிசயமான நிகழ்ச்சி
நடந்தது. "இன்று இவனோடு சேர்ந்து நான் சாராயம் சாப்பிடப்போகிறேன்''
என்றான், ராஜ்பகதூர். சொன்னது போலவே, வாழ்க்கையில் முதல் தடவையாக
என்னுடன் சேர்ந்து சாராயம் குடித்தான்.
"சாராயக்கடைக்கே வராதவன், இன்று வந்திருக்கிறேன் என்றால், அது
உனக்காக - உன் நடிப்புக்காக! என்னம்மா நடிச்சே நீ! உள்ளே
நுழைந்தவுடனே ஒரு சிரிப்பு சிரிச்சே பாரு! அருமை. இவ்வளவு திறமையை
வச்சிக்கிட்டு நடிக்கமாட்டேன்னு சொன்னியே! நீ தொடர்ந்து நடிக்கணும்''
என்றான், ராஜ்பகதூர்.
அடுத்த நாளும் என்னுடைய நடிப்புத் திறமையை மற்றவர்களிடம் சொல்லிப்
பாராட்டினான். என் உள்ளே இருந்த நடிப்புக் கலையை வெளியே கொண்டு
வந்தவன் அவன்.
நாடகம் அரங்கேறியது. முடிந்ததும் `துரியோதனனாக நடித்தவரைப் பார்க்க
வேண்டும்' என்று சுமார் 50 பேர் காத்திருந்தனர். இதனால்
ராஜ்பகதூருக்கு ரொம்ப சந்தோஷம்.
"டேய் நான் நிச்சயமா சொல்றேன். படத்துல நடிக்க முயற்சி பண்ணு''
என்று அன்று ஆரம்பித்தவன், நான் நடிகனாக ஆகும்வரை ஓயவில்லை.
நடிப்புப் பயிற்சி
பிலிம் இன்ஸ்டிடிட்டில் இருந்து நடிப்புப் பயிற்சிக்கு விளம்பரம்
வந்தவுடன், வேறொரு நாடகத்தில் இருந்த என்னை அவசர அவசரமாக நடராஜ்
ஸ்டூடியோவுக்கு அழைத்துப்போய் போட்டோ எடுத்தான். முதல் தடவையாக என்
உருவத்தை அவ்வளவு பெரிய சைசில் பார்த்தேன். மூன்றுவிதமான போஸ்களை
அவனே சொல்லி புகைப்படம் வந்ததும் என்னைப் பாராட்டி பிலிம்
இன்ஸ்டிடிட்டில் எப்படியாவது சேர்ந்துதான் ஆகவேண்டும் என்று
சென்னைக்கு அனுப்பி வைத்தான்.
"பிலிம் இன்ஸ்டிடிட்டில் படிக்கணும்னா பணம் வேண்டுமே என்ன செய்யறது?''
என்றேன்.
"என்னால் முடிந்த உதவியை உனக்குச் செய்கிறேன். நீ இப்படியே
இருந்தால் டிரைவரா, கண்டக்டரா மட்டும்தான் இருப்பாய். வருஷத்துக்கு
ஒரு தடவை இன்கிரிமென்ட், டி.சி., செக்கிங் இன்ஸ்பெக்டர் அவ்வளவுதான்.
நமக்குள் யாராவது ஒருவன் முன்னுக்கு வந்தால் நமக்குப் பெருமை.
நம்மகூட இருந்தவன் இவ்வளவு நல்லா இருக்கான்னு சொல்லிக்கலாம்''
என்றான்.
நான் பிலிம் இன்ஸ்டிடிட்டில் சேர்ந்த பிறகு, மாதத்துக்கு 120
ரூபாய் அனுப்பி விடுவான். அதாவது அவன் வாங்கிய 320 ரூபாய் மாதச்
சம்பளத்திலிருந்து! நான் பெங்களூரில் இருந்து சென்னைக்கு
இன்ஸ்டிடிட்டில் படிக்க வரும்போது அவன் கழுத்தில் போட்டிருந்த
செயினைக் கழற்றி என் கழுத்தில் அணிவித்து, "போட்டுக்கோ! உனக்கு
உபயோகமாக இருக்கும்''னு சொன்னான்.
"இது என்ன தாயத்தா உபயோகம் ஆகும்னு சொல்றே!'' கிண்டலாகக் கேட்டேன்.
செயின் போட்டா நல்லா இருக்கும்னு போட்டுவிட்டான்.
நான் இன்ஸ்டிடிட்டில்படிக்கிறபோது ராஜ்பகதூர் அனுப்புகிற பணம்,
அப்பப்ப அண்ணன் அனுப்புகிற பணமெல்லாம் இருபதாம் தேதிக்குள் தீர்ந்து
விடும். அப்புறமென்ன! தெரியாதஊரில், தெரி யாத மக்களிடம் கடன் கேட்க
முடியுமா? அத னால் செயினை இருநூறு ரூபாய்க்கு அடகு வைத்துவிடுவேன்.
பணம் வந்தவுடன் செயினை மீட்பேன். இப்படியே ஒவ்வொரு மாதமும் நண்பன்
சொன்னதுபோல் செயின் உபயோகமாக இருந்தது.
அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு படங்களில் அந்த செயின் போட்டு
நடித்தேன். பிறகு ஒரு படத்தின் சண்டைக் காட்சியின்போது, நட்புக்கு
அடையாளமான அந்த செயின் தொலைந்து போய்விட்டது.
"மூன்று முடிச்சு'' படத்தைப் பார்த்துவிட்டு மிகவும் பாராட்டினான்
ராஜ்பகதூர். அவனே நடித்த மாதிரி அவன் முகத்தில், பேச்சில் ஒரு
சந்தோஷம் இருந்தது. அதன்பிறகு நான் பிசியாகிவிட்டேன். நேரம்
கிடைக்கும்போது பெங்களூருக்கு செல்வேன். ராஜ் வீட்டுக்குப்போவேன்.
நான் கண்டக்டராக இருந்தபோது அவன் வீட்டில் அவனுக்கென்று இருக்கும்
அறையில்தான் நான் தூங்குவேன். சென்னையிலிருந்து எப்போது போனாலும்
அவன் வீட்டில் அந்த அறையில் உட்கார்ந்து பேசுவோம்.
என்னைப் பற்றியும், என் உடல்நிலைப் பற்றியும் அதிகம் விசாரிப்பான்.
நான் வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்பதற்காக பல விதங்களில் உதவி
செய்து ஊக்கமூட்டிய ராஜ்பகதூருக்கு உதவி செய்ய நான் எவ்வளவோ
கடமைப்பட்டிருக்கிறேன். அவனிடம் கேட்டபோதெல்லாம், "இல்லேப்பா.
எனக்கு என்ன தேவையோ அதை ஆண்டவன் கொடுத்திருக்கிறார். அப்படித்
தேவைப்படும்போது உன்னிடம் வருகிறேன், செய்'' என்று கடந்த பல
வருடங்களாக என்னிடம் எந்த உதவியும் கேட்கவில்லை.
ராஜ்பகதூருக்குத் திரு மணம் நடந்தபோது நானே அவனை வற்புறுத்தி ஒரு
வீடு வாங்க உதவினேன். இப் போது ரொம்ப நிம்மதியாக இருக்கிறான்.
முன்பெல்லாம் அடிக்கடி சென்னைக்கு வந்து என் னைப் பார்க்க வருவான்.
நான் ஷூட்டிங் போய்விடுவதால் வருவதைக் குறைத்துக்கொண்டான். எனக்கு
உடல் நலம் பாதிக்கப்பட் டபோது பார்க்க வந்திருந்தான்.
"உன் உடலை மூலதனமாக்கி இவ்வளவு பணம் சம்பாதிச்சு, அதுக்கப்புறம்
வாழ்க்கையை அனுபவிக்க உடம்பு சவுகரியமாக இல்லாவிட்டால் என்ன
பிரயோஜனம்? வேலையோடு உன் உடம்பையும் நல்லா பார்த்துக்கோ. நீ
எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும். பேரும் புகழும் இருக்க வேண்டும்.
நீ ஆர்ட்டிஸ்ட்டாக மட்டும் இருக்காமல் மனிதாபிமானமிக்க மனிதனாக
எப்போதும் இருக்க வேண்டும். அதற்காக நான் சந்தோஷப்படுவேன். உடம்பைப்
பார்த்துக்கொள்'' என்று ஆறுதல் சொன்னான்.
"என்னுடன் இரு''
"நீ எனக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறாய். இன்னும் அதே வேலையில்
இருப்பதைப் பார்த்தால் மனதுக்கு கஷ்டமா இருக்கு. நீ என்கூட இருந்தா
எனக்கு ஒரு பரஸ்பர உதவியாக இருக்கும்'' என்றேன்.
அப்போது அவனுக்கு கல்யாணம் ஆகவில்லை. அவன் என்னுடனேயே இருந்தால்,
எனக்கு மன அமைதி அதிகம் கிடைக்கும் என்று எண்ணினேன்.
"நான் உனக்கு டிரைவராக வருகிறேன். பரவாயில்லையா?'' என்று கேட்டான்.
"டிரைவராக, மானேஜராக, செகரட்டரியாக - இல்லை எனக்கு முதலாளியாகக்
கூட வரலாம்!'' என்றேன்.
அவன், "டிரைவராக வருகிறேன். ஜாலியாக இருக்கலாம்'' என்றான். எனக்கு
ரொம்ப சந்தோஷம்.
பத்து நாள் கழித்து ராஜ்பகதூர் வந்தான். "இல்லேப்பா. டிரைவராக
வர்றது எனக்குப் பிடிக்கலே''ன்னு சொன்னான்.
நான் இப்போதும் அவனுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். என்
வாழ்க்கையின் முன்னேற்றத்தைக் கண்டு, மகிழ்ந்து கொண்டிருக்கும்
ஆத்மார்த்தமான நண்பன் ராஜ்பகதூர்.''
இவ்வாறு ரஜினி குறிப்பிட்டார்.
வள்ளி
தன்னை நடிகனாக்கிய ராஜ்பகதூரை நடிகனாக்கி அழகு பார்க்க ரஜினி
விரும்பினார்.
தான் தயாரித்த "வள்ளி'' படத்தில் ஒரு வேடம் கொடுத்தார். அந்தப்
படத்தில் பால்காரியாக வரும் பல்லவி, "என் கணவர் ராணுவத்தில்
இருக்கிறார்'' என்று சொல்லி, தன்னைச் சுற்றி வரும் ஆண்களிடம்
இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வார்.
திடீரென்று ஒரு நாள் அந்த ராணுவ வீரர் தன் மனைவி பல்லவியைத் தேடி
வருவார்.
அந்த ராணுவ வீரராக நடித்தவர்தான் ராஜ்பகதூர்!
>>> Part
81
|