மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு
`பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்
தன்னால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று எண்ணி
டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், மனைவி இறந்த துயரத்தையெல்லாம்
இதயத்துக்குள் போட்டு பூட்டிவிட்டு, "பாண்டியன்'' படத்தின் இறுதிக்
காட்சிகளை எடுத்து, குறித்த நாளில் படத்தை ரிலீஸ் செய்தார்.
"பாண்டியன்'' படம் வெளிவர 10 நாட்கள் இருக்கும்போது, முத்துராமனின்
மனைவி கமலா திடீரென்று மாரடைப்பால் காலமானார். அப்போது அவருக்கு
வயது 56.
"படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கலாம்'' என்று ரஜினி உள்பட
எல்லோரும் கூறியும்கூட, எஸ்.பி.முத்துராமன் அதற்கு சம்மதிக்கவில்லை.
"படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்து விட்டோம்.
தியேட்டர்களிலும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இப்போது படத்தை தள்ளிப்போட்டால் சம்பந்தப்பட்ட அனைவரும்
பாதிக்கப்படுவார்கள். நான் இதுவரை என் கடமையைச் சரிவரச் செய்து
வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவள் என் மனைவி. அவள் ஆன்மா
சாந்தியடைவதற்காகவாவது, இந்தப் படத்தை நான் குறிப்பிட்ட நாளில்
ரிலீஸ் செய்ய வேண்டும்'' என்று கூறிய முத்துராமன், மனைவி இறந்த
3-வது நாளிலேயே படப்பிடிப்பில் ஈடுபட்டார். மீதி இருந்த காட்சிகளை
எடுத்து முடித்து, ஏற்கனவே அறிவித்தபடி 25-10-1992 தீபாவளி அன்று
ரிலீஸ் செய்தார்.
ஜெயசுதா
அக்கா-தம்பி பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் "பாண்டியன்.''
ரஜினி கதாநாயகனாக நடிக்க வந்த புதிதில் நடிகை ஜெயசுதாவும் நாயகியாக
அறிமுகமானார். திருமணத்துக்குப்பின் நடிக்காமல் இருந்த ஜெயசுதா
மறுபடியும் நடிக்க வந்த படம் "பாண்டியன்.'' இதில் ரஜினியின்
அக்காவாக நடித்திருந்தார்.
அவருடைய கணவராக - வில்லன் வேடத்தில் சரண்ராஜ் நடித்திருந்தார்.
கன்னடம்
"பாம்பே தாதா'' என்ற கன்னடப் படத்தைத் தழுவி (கதை: பிரபாகர்) "பாண்டியன்''
எடுக்கப்பட்டது. வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுதினார்.
படத்தில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு நடித்திருந்தார். ரஜினிக்கும்
குஷ்புவுக்கும் ஒரு போட்டி பாடல் நடனக்காட்சி படத்தில் பிரபலம்.
இளையராஜா இசையில் `உலகத்துக்காக பிறந்தவன் நானே! வளர்ந்தது என்னை
தமிழன்னைதானே', `அன்பே நீ என்ன கண்ணனோ மன்னனோ', `பாண்டியனா கொக்கா
கொக்கா', `அடி ஜிம்பா ஜெயிப்பது இந்த பாண்டியனா' ஆகிய பாடல்கள்
ரசனைக்குரியவை.
இளையராஜாவின் மகனும் இசை அமைப்பாளருமான கார்த்திக்ராஜா இசையில் `பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா' என்ற பாடலும் படத்தில் இடம் பெற்றிருந்தது.
லாபத்தில் பங்கு
படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் கணிசமான பகுதியை முத்துராமன்
எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், மீதியை னிட்டில் உள்ள 14
பேருக்கும் பிரித்துக் கொடுக்கும்படியும் னிட்டைச் சேர்ந்தவர்கள்
கூறினார்கள்.
அதற்கு முத்துராமன் மறுத்துவிட்டார். "நானும் இந்த னிட்டில்
ஒருவன்தான். எல்லோருக்கும் சம பங்கு கிடைப்பதே நியாயம்'' என்று கூறி,
15 பங்குகளாகப் பிரித்து, தனக்கு ஒரு பங்கை மட்டும்
எடுத்துக்கொண்டார்.
"பாண்டியன்'' தயாரிப்பு அனுபவங்கள் பற்றி முத்துராமன் கூறியதாவது:-
"படம் முடிந்ததும், மனைவியை அழைத்துக்கொண்டு மலேசியா, சிங்கப்பூர்
முதலிய வெளிநாடுகளுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தேன். எதிர்பாராத
வகையில், அவள் மறைந்துவிட்டாள்.
டைரக்டராகப் பணியாற்றத் தொடங்கியது முதல், அதிகாலை
படப்பிடிப்புக்குச் சென்றால், வீடு திரும்ப இரவு வெகு நேரம் ஆகும்.
குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனித்துக் கொண்டதும் என்
மனைவிதான். குழந்தைகள் எந்த வகுப்பில் படிக்கிறார்கள் என்பது கூட
எனக்குத் தெரியாது.
முன்னோடி
அப்படிப்பட்ட மனைவியை இழந்த நான், துயரத்தை மறைத்துக்கொண்டு, யாரும்
பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக படத்தை முடித்து குறிப்பிட்டபடி
வெளியிட்டேன்.
இதற்கு எனக்கு வழிகாட்டி என் பள்ளி ஆசிரியர் நல்லமுத்து அவர்கள்.
ஒரு நாள்கூட விடுமுறை எடுக்காமல் பணியாற்றியவர். அவர் மனைவி
இறந்தபோதுகூட மறுநாள் வேலைக்கு வந்துவிட்டார். "நடக்கக்கூடாதது
நடந்து விட்டது. அந்த கவலையில் சும்மா இருப்பதில் பயன் என்ன?
கடமையைச் செய்வதே, இறந்தவருக்கு செய்யும் அஞ்சலி'' என்று கூறினார்.
என் மனைவி இறந்தபோது, என் ஆசிரியர்தான் நினைவுக்கு வந்தார். அவரைப்
பின்பற்றி, என் கடமையைச் செய்தேன்.
நான் எப்போதும் வேலையில் மூழ்கியிருந்ததால், என் மனைவி இருந்தபோது
நான் அவளுக்கு உதவ முடியவில்லை. நான் ஓய்வு பெறும் காலத்தில் எனக்கு
மனைவி இல்லாமல் போய்விட்டாள்.
கடமை முக்கியம் என்றாலும், ஒவ்வொருவரும் மாதத்தில் சில நாட்களையாவது
குடும்பத்திற்கென்று ஒதுக்கவேண்டும் என்ற உண்மையைப் புரிந்து
கொண்டேன். என் அனுபவத்தின் வாயிலாக இந்த உண்மையை அனைவருக்கும்
கூறுகிறேன்.
உயர்ந்த மனிதர்
ரஜினிகாந்த் மிக உயர்ந்த மனிதர். என்னிடமும், என் னிட்டைச்
சேர்ந்தவர்களிடமும் கொண்ட அன்பினால் ஒரு படத்தையே எடுத்துக்
கொடுத்தார். அவருக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளோம்.
"பாண்டியன்'' படத்தை எடுத்து முடிப்பதில் சரவணன் செய்த உதவிகள்
மறக்க முடியாதவை. டைரக்ஷனில் நான் முழுக்கவனம் செலுத்தவேண்டும்
என்பதற்காக, படத்தயாரிப்பு என்ற பளுவை அவர்தான் சுமந்தார்.
அவருக்கும் நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.''
இவ்வாறு எஸ்.பி.முத்துராமன் கூறினார்.
சென்னையில் 116 நாட்கள் ஓடிய "பாண்டியன்'' மற்ற ஊர்களில் நூறு
நாட்களை எட்டிப்பிடித்தது.
>>> Part
83
|