ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில்
ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது
முற்றிலும் கிராமிய சூழ்நிலையில் ரஜினி நடித்த "எஜமான்'' படம், 175
நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.
இதுவரை, ஏவி.எம். தயாரித்த ரஜினி படங்கள் அனைத்தையும்
எஸ்.பி.முத்துராமன்தான் டைரக்ட் செய்தார். முதன் முதலாக இப்படத்தை
ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார்.
திரைப்படக் கல்லூரியில் பயின்று டைரக்டர் ஆனவர், ஆர்.வி.உதயகுமார்.
சிவாஜியை "புதிய வானம்'' படத்திலும், விஜயகாந்தை "சின்னக்கவுண்டர்''
படத்திலும், கார்த்திக்கை "பொன்னுமணி'', "கிழக்கு வாசல்'' ஆகிய
படங்களிலும் இயக்கி புகழ் பெற்றவர்.
இந்தப் புகழ் இவருக்கு ரஜினியின் "எஜமான்'' படத்தை இயக்கும்
வாய்ப்பையும் பெற்றுத் தந்தது.
80 நாள் படப்பிடிப்பு
படத்தில் ரஜினியுடன் மீனா, ஐஸ்வர்யா (லட்சுமியின் மகள்) ஆகியோர்
நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார்.
பொள்ளாச்சியை அடுத்த சமத்தூரில், 80 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.
ஒரு கனவு காட்சி தவிர, படம் முழுவதும் வேட்டி-சட்டையில் நடித்தார்,
ரஜினி.
1993 பிப்ரவரி 18-ந்தேதி வெளிவந்த "எஜமான்'', 25 வாரங்கள் ஓடி
வெள்ளி விழா கொண்டாடியது.
இந்தப்படத்தை இயக்கிய அனுபவம் குறித்து, டைரக்டர் ஆர்.வி.உதயகுமார்
கூறியதாவது:-
"சின்னக்கவுண்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு புதிய படம்
இயக்கும்படி நிறைய பேர் என்னைக் கேட்டார்கள். விஜயகாந்த் கூட புதிய
படத்திலும் இணைந்து பணியாற்றலாமே என்று சொன்னார். `கலைப்புலி' தாணு
கேட்டார். இன்னும் சில தயாரிப்பாளர்களும் கேட்டார்கள். யாருக்கு
படம் பண்ணுவது என்கிற யோசனையில் இருந்தபோது, பளிச்சென எனக்குள்
ரஜினி வந்து போனார்.
"சான்ஸ் கொடுங்க!''
அதற்குக் காரணம் இருக்கிறது. கிழக்கு வாசல் படத்தின் வெற்றி விழா
கொண்டாட்டத்தின்போது, கேடயம் வழங்க ரஜினி வந்திருந்தார். விழாவில்
அவர் பேசும்போது, "உங்க படத்தில் எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க'' என்று
`மைக்'கிலேயே கேட்டார்.
டைரக்டர்கள் எல்லாருக்குமே, ரஜினி சாரின் படத்தை இயக்க வேண்டும்
என்ற கனவு இருக்கும். ஆனால், அவரே இப்படி வெளிப்படையாக அதுவும்
மேடையில் என்னிடம் கேட்டது எனக்கு நம்ப முடியாத ஆச்சரியத்தை
அளித்தது. நான் அவரிடம், "நாங்க சான்ஸ் கேட்டு, நீங்கதான் சார்
எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்'' என்றேன்.
ரஜினி சார் மீது ஏற்கனவே எனக்கு அதிக மரியாதை. என் முதல் படம் "உரிமை
கீதம்'' படத்தை இயக்கி முடித்த நேரத்தில், படத்துக்கான `டிரெய்லர்'
தயாரித்து தியேட்டர்களில் திரையிட்டோம். 10 நிமிடம் வரும் இந்த
டிரெய்லரை ரஜினியும் பார்த்திருக்கிறார். பார்த்ததோடு நின்றுவிடாமல்,
தனது கலை உலக நண்பர்களிடம், "ஒரு படத்தோட டிரெய்லர் எப்படி
இருக்கணும்ங்கறதுக்கு உதயகுமார் இயக்கிய `உரிமை கீதம்' பட
டிரெய்லர்தான் உதாரணம்'' என்று பாராட்டியிருக்கிறார்.
இது என் காதுக்கும் வந்தது. அப்போதே அவரது பெருந்தன்மைக்கு
தலைவணங்கினேன்.
விஜயகாந்த் நாயகனாக நடிக்க நான் இயக்கிய "சின்னக்கவுண்டர்'' படம்
ரிலீசானபோது ரஜினி படம் ஒன்றும் ரிலீசானது. படம் வெளிவந்து சில
நாட்களில், ரஜினி சாரிடம் இருந்து எனக்கு ஒரு போன். "வாழ்த்துக்கள்
உதயகுமார்! உங்க படம் (சின்னக்கவுண்டர்) நல்லா போகுதுன்னு
கேள்விப்பட்டேன்'' என்றார்.
பதிலுக்கு நான் அவரிடம், "சார் உங்க படமும் நல்லா போகுதுன்னு
சொன்னாங்க'' என்றேன்.
"இல்லே! முதல் இடத்துல உங்க படம்தான் இருக்குது'' என்றார், ரஜினி.
அவரது இந்த பெருந்தன்மைக்கு பதில் சொல்ல நான் யோசித்து வார்த்தைகளை
தேடிய நேரத்தில், ரஜினி சார் "நாம் சந்திக்கணுமே'' என்றார்.
"நீங்க சொல்லுங்கள். நீங்க சொல்ற இடத்துக்கு வந்துடறேன்'' என்றேன்.
இடம் சொன்னார். சந்தித்தோம். சுற்றி வளைக்காமல் மளமளவென
விஷயத்துக்கு வந்தார். "நீங்க என் படத்தை டைரக்ட் பண்ணணும்''
என்றார்.
ஏற்கனவே கிழக்கு வாசல் பட வெற்றி விழாவில் மைக்கிலேயே வெளிப்படையாக
கேட்டவர், இப்போது இரண்டாவது தடவையாகவும் கேட்டார்.
"பண்ணலாம் சார். நீங்களே இப்படி கூப்பிட்டு கேட்பது என் பாக்கியம''
என்றேன்.
"யார் தயாரிச்சா உங்களுக்கு சரியா இருக்கும்?'' இது ரஜினி சாரின்
அடுத்த கேள்வி.
"சார் நீங்க யாரை சொல்றீங்களோ அந்த கம்பெனிக்கு டைரக்ட் பண்றேன்''
என்றேன்.
"நான் நாலைந்து கம்பெனி சொல்றேன். அதுல உங்களுக்கு சரியா தோன்றும்
கம்பெனியை சொல்லுங்க'' என்றவர், ஏவி.எம். நிறுவனத்துடன் மேலும் 5
கம்பெனிகள் பெயரைச் சொன்னார்.
எனக்கு ஏவி.எம். நிறுவனத்தில் ஒரு படம் பண்ணவேண்டும் என்ற எண்ணம்
இருந்தது. ரஜினி சார் சொன்ன பட்டியலில் ஏவி.எம்.மும் இருந்ததால்
உடனே, "ஏவி.எம்.முக்கு பண்ணலாம்'' என்று சொல்லிவிட்டேன்.
உடனே ஏவி.எம். சரவணன் சாருக்கு போன் போட்டார். அடுத்த பத்தாவது
நிமிடத்தில் சரவணன் சாரும் நாங்கள் இருந்த இடத்துக்கு வந்துவிட்டார்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஏவி.எம். தயாரிப்பில் ரஜினி நடிக்க,
நான் இயக்குவது உறுதி செய்யப்பட்டது.
இளையராஜா
அப்போது ஏவி.எம். நிறுவனங்களின் படங்களுக்கு இளையராஜா இசையமைக்காமல்
இருந்தார். என் படங்களில் அவரது பங்களிப்பு மகத்தானது.
சின்னக்கவுண்டர் படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் பாடல்கள்
காரணமாக அமைந்திருந்ததை யாரும் மறுக்கமுடியாது. அதனால் இந்தப்
படத்திலும் இளையராஜா இருக்கவேண்டும் என்று விரும்பினேன்.
என் விருப்பத்தைச் சொன்னதும், "அவங்களுக்குள்ள `மிஸ்
அண்டர்ஸ்டாண்டிங்' இருக்கே!'' என்று ஒரு கணம் ரஜினி சார் தயங்க, "சார்!
நான் பேசிப்பார்க்கிறேன். ராஜா சார் மறுக்க மாட்டார்'' என்றேன்.
பேசினேன். இளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டார். இதனால் ஏவி.எம் -
இளையராஜா இசைப்பந்தம் மறுபடியும் தொடர்ந்தது. இதன் பிறகு
ஏவி.எம்.மில் இளையராஜாவுக்கென தனி அறை ஏற்படுத்தப்பட்டு, அங்கேயே
தனது இசையமைப்பைத் தொடர்ந்தது வரலாறு.
படம் பற்றி பேசும்போது "என்ன மாதிரி கதை?'' என்று கேட்டார் ரஜினி.
நான் "ஜில்லா கலெக்டர்'' என்ற பெயரில் ஒரு கதையை சொன்னேன். "பிரமாதம்''
என்றார். ஏவி.எம்.மில் பூஜையும் போட்டாயிற்று. பூஜை போட்ட அன்றே
படத்தின் எல்லா ஏரியாக்களும் விற்றுப்போனது.
தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் சாரிடமும் கதையை சொன்னேன். "கதை
நன்றாக இருக்கிறது. ஆனால் பெரிய அளவில் செலவு வைக்கும்'' என்றார்.
பிறகு ஒரு மாதம் உட்கார்ந்து வேறொரு கதை தயார் செய்தேன். அந்தக்
கதைதான் "எஜமான்.''
மீனா
ரஜினியுடன் மீனாவை ஜோடியாக நடிக்க வைக்கவும் தடையிருந்தது. ரஜினி
சாரே, "என்னை `அங்கிள்'னு கூப்பிட்ட பொண்ணு. இப்ப என் ஜோடியா
நடிச்சா ரசிகர்கள் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்களோ?'' என்று
யோசித்தார்.
மீனா அப்போதுதான் கதாநாயகியாக ராஜ்கிரண் ஜோடியாக ஒரு படத்தில்
நடித்திருந்தார். என்றாலும் மீனா தான் வைத்தீஸ்வரி கேரக்டருக்கு
சரியாக இருப்பார் என்று வற்புறுத்திய பிறகு ரஜினி சார்
ஒப்புக்கொண்டார்.
எஜமான் படத்தில் `நிலவே முகம் காட்டு' என்று ஒரு நெகிழ்ச்சியான
பாடல் உண்டு. அற்புதமாக இசையமைத்து கொடுத்திருந்தார் இசைஞானி.
சமத்தூர் வானவராயர் வீட்டில் படப்பிடிப்பு நடந்தது. பாடலைக்கேட்ட
ரஜினி, "பாட்டு நல்லா இருந்தாலும் `ஸ்லோ'வா இருக்கே. படத்துல இந்தப்
பாட்டு வரும்போது என் ரசிகர்கள் தியேட்டருக்கு உள்ளே இராமல் வெளியே
போய்விட்டால்...'' என்றார்.
நான் அவரிடம், "இந்தப் பாடலுக்கான காட்சிகள் மூலம் அவர்களை வெளியே
போகவிடாமல் நான் உட்கார வைப்பேன்'' என்றேன்.
படத்தின் முதல் பிரதி தயாரானதும் நானும், ரஜினி சாரும் சேர்ந்து
படத்தைப் பார்த்தோம். படம் முடிந்ததும் என்னைக் கட்டிப்பிடித்துக்
கொண்டவர், "உதய் சார்! அந்தப் பாட்டுதான் படத்தோட உயிர்'' என்றார்.
எஜமான் படம் ஏவி.எம். தயாரிப்பு என்றாலும், `ஒரு நாளும் உனை மறவாத'
என்ற பாடலை மட்டுமே ஏவி.எம். ஸ்டூடியோவில் படமாக்கினேன். மற்ற
காட்சிகள் எல்லாமே அவுட்டோரில்தான். "ஏவி.எம். எடுக்கிற படத்துக்கு
ஸ்டூடியோவில் ஒரு பாட்டு சீன் மட்டும்தானா?'' என்று சரவணன் சாரே
ஆச்சரியப்பட்டார்.''
இவ்வாறு ஆர்.வி.உதயகுமார் கூறினார்.
>>> Part 85
|