நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு
ரஜினி நடித்த `பெத்தராயுடு'
வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்
தமிழில் வெளிவந்த "நாட்டாமை'' படம், தெலுங்கில் "பெத்தராயுடு''
என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. 25 வாரங்கள் ஓடிய இப்படத்தின்
வெற்றி விழாவில் ரஜினிக்கு பெரிய தங்கக்காப்பை பழம்பெரும் நடிகர்
ஏ.நாகேசுவரராவ் அணிவித்தார்.
தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் "நாட்டாமை.'' இதில்
கதாநாயகனாக சரத்குமாரும், அவருடைய தந்தையாக விஜயகுமாரும் நடித்தனர்.
ரஜினி யோசனை
தெலுங்கு நடிகர் மோகன்பாபு, ரஜினியின் நண்பர். அவர் தெலுங்கில் ஒரு
படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டார்.
"நாட்டாமை படம் நன்றாக இருக்கிறது. அதை தெலுங்கில் எடுக்கலாம்''
என்று ரஜினி யோசனை தெரிவித்தார்.
அதுமட்டுமல்ல; பட அதிபர் ஆர்.பி.சவுத்திரிக்கு போன் செய்து,
நாட்டாமை கதை உரிமையை மோகன்பாபுவுக்கு வாங்கித்தந்தார்.
நண்பரின் கோரிக்கை
"தெலுங்குப் படத்தில் நீங்களும் நடிக்க வேண்டும்'' என்று ரஜினியிடம்
மோகன்பாபு கேட்டுக்கொண்டார்.
"சரி. தமிழில் விஜயகுமார் நடித்த வேடத்தில் நான் நடிக்கிறேன்''
என்று ரஜினி கூறினார்.
மோகன்பாபுவின் "ஸ்ரீலெட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ்'' பேனரில், "பெத்தராயுடு''
தயாராகியது. ரவிராஜா பின்னிரெட்டி டைரக்ட்செய்தார்.
பானுப்பிரியா, ஆனந்தராஜ் ஆகியோரும் நடித்தனர்.
வெள்ளி விழா
படம் 1995 ஜுன் 15-ந்தேதி திரையிடப்பட்டது.
25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.
வெற்றி விழா
இந்தப்படத்தின் வெற்றி விழா, திருப்பதியில் நடந்தது. வெங்கடேஸ்வரா
பல்கலைக்கழக மைதானத்தில், பிரமாண்டமாக நடந்த இந்த விழாவில், ஒரு
லட்சம் பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு, அப்போதைய ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமை
தாங்கினார்.
மேடைக்கு ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர். கடைசியாக அழைக்கப்பட்டவர்
ரஜினி. மேடையின் நடுவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அவரை
அமரச்செய்தார், சந்திரபாபு நாயுடு. அப்போது, கூடியிருந்தவர்கள்
பலமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
"பாட்ஷா பேசட்டும்''
ஒவ்வொரு பேச்சாளராக ஒலிபெருக்கி முன் வந்து பேசிக்கொண்டிருந்தனர்.
நாலைந்து பேர் பேசியதுமே, கூட்டத்தினர் பொறுமை இழந்து, "பாட்ஷாவைப்
பேசச் சொல்லுங்கள்'' என்று கூச்சல் போட்டனர்.
நடிகர் மோகன்பாபு எழுந்து, "இந்த விழாவின் பிரதம விருந்தினர்
ரஜினிதான். அவர் கடைசியாகத்தான் பேசுவார். எல்லோரும் அமைதியாக
இருங்கள்'' என்று கேட்டுக்கொண்டார்.
"நண்பரே...''
முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசும்போது, ரஜினியை "மித்ருடு'' (நண்பரே)
என்று குறிப்பிட்டார்.
அவர் பேசுகையில் கூறியதாவது:-
"பெத்தராயுடு படத்தில் உங்களுக்கு (ரஜினி) நல்ல கேரக்டர் அமைந்தது.
அதுமட்டுமல்ல. நிஜ வாழ்க்கையிலும் நல்ல கேரக்டர் உடையவர் நீங்கள்.
மேடைக்கு நீங்கள் வந்தபோது, பொதுமக்கள் எவ்வளவு ஆர்வத்தோடு
வாழ்த்தொலி எழுப்பினார்கள் பார்த்தீர்களா! தமிழ்நாட்டுக்கு வெளியே
ஆந்திராவில் கூட இவ்வளவு ஆதரவு உங்களுக்கு இருக்கிறது. எனவே, தமிழக
மக்களின் கோரிக்கையை ஏற்று நீங்கள் அரசியலுக்கு
வரவேண்டும்''இவ்வாறு கூறிய சந்திரபாபு நாயுடு, ரஜினி பக்கம்
திரும்பி, எப்போது அரசியலுக்கு வரப்போகிறீர்கள் என்று கேட்பதுபோல்,
கையினால் சைகை செய்தார்.
ஆனால் ரஜினியோ முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல், மவுனமாக
இருந்தார்.
தெலுங்கில் பேச்சு
சந்திரபாபு நாயுடு பேசி முடித்ததும், ஒலிபெருக்கி முன் வந்து
நின்றார், ரஜினி. அப்போது, கூடியிருந்தவர்கள் எழுப்பிய
வாழ்த்தொலியும், கைத்தட்டலும் அடங்க வெகு நேரம் ஆயிற்று.
ரஜினிகாந்த் தெலுங்கில் பேசினார். இவரும் சந்திரபாபு நாயுடுவை "மித்ருடு''
என்றே குறிப்பிட்டார்.
தன் பேச்சில் ரஜினிகாந்த் கூறியதாவது:-
"உங்கள் (சந்திரபாபு நாயுடு) ஆட்சி தொடர்ந்து நடக்கவும், வரப்போகும்
பாராளுமன்ற தேர்தலில் நிறைய இடங்களைப் பெறவும் பெரியவர் (என்.டி.ராமராவ்)
ஆசி உங்களுக்குத்தேவை. பெரிய பொறுப்பு கொடுத்து அவரை டெல்லியில்
உட்கார வைத்து விட்டு, மாநிலத்தின் முதல்-அமைச்சராக நீங்கள்
நீடிக்க வேண்டும். அதற்காக, நீங்கள் அவருடன் சமரசம் செய்து கொள்ள
வேண்டும்.''
இவ்வாறு ரஜினி கூறினார்.
தங்கக்காப்பு
"பெத்தராயுடு'' படத்தில் கலைநயம் மிக்க ஒரு பெரிய தங்கக்காப்பை
ரஜினி அணிந்திருப்பார்.
அதேமாதிரியான தங்கக்காப்பை, 30 பவுனில் செய்து ரஜினிக்கு நினைவுப்
பரிசாக வழங்கினார், மோகன்பாபு. மேடையில் இதை ரஜினியின் கையில்,
பழம்பெரும் நடிகர் ("தேவதாஸ்'' படப்புகழ்) ஏ.நாகேசுவரராவ்
அணிவித்தார்.
அப்போதும் ரசிகர்களின் மகிழ்ச்சி ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.
(ரஜினியின் வெற்றிப்படம் "வீரா'' - திங்கட்கிழமை)
***
ரஜினி `சுயதரிசனம்'
"அன்னை ஓர் ஆலயம்'' படத்தில் யானையுடனும், "பைரவி''யில் பாம்புடனும்
நடித்தபோது, மனிதர்களை விட அவை பாசம் கொண்டவையாகவே எனக்குத்
தோன்றியது.
மனிதர்களைக் குறை சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். சில நல்ல
மனிதர்களும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.
- ரஜினிகாந்த்.
>>> Part 89
|