மீனா, ரோஜா
2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா''
நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்
சந்தர்ப்ப சூழ்நிலையால் மீனா, ரோஜா ஆகிய இருவரை மணந்து கொண்டு
திண்டாடும் "இரண்டு பெண்டாட்டிக்காரராக'' ரஜினி நடித்த படம் "வீரா.''
நகைச்சுவை கலந்த இந்தப் படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி வாகை
சூடியது.
கதை
இப்படத்தில், முத்துவீரப்பன் என்ற கிராமத்து இளைஞனாக ரஜினி
நடித்தார். நன்றாகப் பாடும் ஆற்றல் கொண்ட ரஜினி, பெரிய பாடகராக
வேண்டும் என்று விரும்புகிறார்.
இந்த பாடகர் கனவுடன் திரிந்தவர் கண்ணில், "கவிதை''யாக தென்படுகிறார்,
மீனா. பார்வைப் பரிமாற்றங்கள் `காதல் மொழி'யில் போய் முடிய,
காதலித்த வேகத்தில் திருமணமும் நடந்து முடிந்து விடுகிறது.
வெள்ளத்தில் மீனா
இப்போது பட்டணத்துக்குப்போய் தனது பாடகர் கனவை நிறைவேற்ற
விரும்புகிறார். திடீரென ஊருக்குள் புகுந்த வெள்ளத்தில் மனைவி மீனா
ஆற்றோடு அடித்துச் செல்லப்படுகிறார். அவர் இறந்து போனதாகவே, ஊரும்
உறவும் முடிவு செய்கிறது. ஆனால் இறக்கவில்லை.
சோகத்தோடு சென்னை வரும் ரஜினிக்கு, ரோஜா மூலம், இசைத்தட்டிலும்
கேசட்டிலும் பாடும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்தக் குரல்
ரசிகர்களுக்கு பிடித்துப்போக, இசை உலகில் முக்கிய இடத்தைப்
பிடிக்கிறார்.
மீண்டும் திருமணம்
தனது முன்னேற்றத்துக்கு காரணமான ரோஜாவுக்கு மனப்பூர்வமாக நன்றி
சொல்கிறார். அப்போதுதான் தன்னை ரோஜா காதலிக்கிறார் என்பது புரிகிறது.
மீனாவை இழந்த சோகத்தில் அவர், ரோஜாவை மணக்க விரும்பவில்லை.
என்றாலும், தாயாரின் விருப்பத்தை தட்ட முடியாமல் 2-ம் திருமணம்
செய்து கொள்கிறார்.
இந்த நேரத்தில் ரஜினியை சந்திக்க சென்னை வருகிறார், மீனா.
இறந்து விட்டதாக கருதிய மீனா உயிரோடு வந்ததைப் பார்த்து ரஜினி
அதிர்ச்சியடைகிறார். மீனா இறந்துவிட்டதாக கருதி, வேறொரு பெண்ணை
மணந்து கொண்டதை சொல்ல முடியாமல் தவிக்கிறார். அவசரம் அவசரமாக தனி
வீடு பார்த்து மீனாவை தங்க வைக்கிறார்.
ரஜினி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற விஷயம் ரோஜாவுக்கும் அதுவரை
தெரியாது.
இரண்டு மனைவியரிடமும் நடிக்க வேண்டிய நிலை ரஜினிக்கு ஏற்படுகிறது.
மீனாவுக்கோ, ரோஜாவுக்கோ தனது நடவடிக்கையில் ஏதாவது சந்தேகம்
தோன்றினால் கூட, அதை சமாளிக்க பெரும்பாடுபடுகிறார்.
இந்த சமயத்தில் ரோஜாவால் ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட மகேஷ்,
விடுதலையாகி வருகிறான். அவனுக்கு முத்துவின் `தேவியர் இருவர்' நிலை
தெரிந்து விடுகிறது. அதை வைத்துக்கொண்டு முத்துவை `பிளாக் மெயில்'
செய்ய நினைக்கும் வில்லன் அதில் வெற்றி பெறாததால் ரோஜா, மீனா
இருவரையும் கடத்திச் செல்கிறான்.
வில்லனை பின்னியெடுக்கும் ரஜினி, ரோஜா, மீனா இருவரையும் மீட்கிறார்.
அப்போது அவர் ஏற்கனவே மீனாவை மணந்தவர் என்பது ரோஜாவுக்கு
தெரியவருகிறது. அதே நேரம் தன் காதல் கணவர் இப்போது இன்னொரு
பெண்ணுக்கும் கணவர் என்பது மீனாவுக்கும் தெரிந்து போகிறது.
நட்புடன் இருந்த மீனாவும், ரோஜாவும், கணவர் யாருக்கு என்பதில்
மோதிக்கொள்கிறார்கள். இதனால் மீண்டும் கிராமத்துக்குத்
திரும்புகிறார். அங்கே, மீனாவும், ரோஜாவும் தன்னை வரவேற்கக்
காத்திருப்பதைக் கண்டு மகிழ்கிறார். சுபமாக கதை முடிகிறது.
நகைச்சுவை விருந்து
படம் முழுக்க ரஜினியின் நகைச்சுவை சரவெடிகள், ரசிகர்களை கலகலப்பாக
வைத்திருந்தன. ரஜினியும், செந்திலும் சேர்ந்து பாட்டு கம்பெனியில்
சான்ஸ் கேட்கும் காட்சிக்கு ரசிகர்கள் குலுங்கிச் சிரித்தார்கள்.
மீனாவிடமும், ரோஜாவிடமும் மாட்டிக்கொண்டு `முழிக்கும்' காட்சிகளில்
நடிப்பில் பிரமாதப்படுத்தியிருந்தார், ரஜினி.
படத்தின் மிகச்சிறந்த அம்சங்களில் ஒன்று இளையராஜாவின் இசை. "கொஞ்சி
கொஞ்சி அலைகளாட'', "மலைக்கோவில் வாசலிலே'', "மாடத்திலே கன்னி
மாடத்திலே'', "யக்கா யக்கா பெட்டிக்கடை யக்கா யக்கா'', "வாடி
வெத்தல பாக்கு வாங்கித்தரேன் போட்டுக்க'' என அத்தனை பாடல்களிலும் `ராஜா'வின்
இசைக்கொடி உயரப் பறந்தது. படத்தின் ஆடியோ கேசட் விற்பனையில் சாதனை
படைத்தது.
ரஜினியின் `டேஸ்ட்' அறிந்து படத்தை இயக்கியிருந்தார், டைரக்டர்
சுரேஷ்கிருஷ்ணா.
152 நாட்கள் ஓடி வெற்றி விழாக் கொண்டாடிய படம் "வீரா.''
(தடையை மீறி தயாரான "உழைப்பாளி'' - நாளை)
***
ரஜினி `சுயதரிசனம்'
நமக்கு மொழிப்பற்று இருக்கலாம். ஆனால் மொழி வெறி இருக்கக் கூடாது.
நமக்கு இந்தியன் என்ற உணர்வு எப்போது வருமோ, அப்போதுதான் இந்த நாடு
உருப்படும்.
- ரஜினிகாந்த்.
>>> Part
90
|