தடையை மீறி தயாரான "உழைப்பாளி''
ரஜினிகாந்த் படத்தை வாங்கக்கூடாது என்று விநியோகஸ்தர்கள் சங்கம்
போட்ட தடையை ("ரெட்கார்டு'') மீறி தயாரான படம் "உழைப்பாளி.''
"எங்க வீட்டுப்பிள்ளை'', "மிஸ்ஸியம்மா'', "மாயாபஜார்'' போன்ற
சிறந்த படங்களைத் தயாரித்த "விஜயா - வாகினி'' பட நிறுவனம், சுமார்
20 ஆண்டுகள் படத்தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்தது.
நீண்ட இடைவெளிக்குப்பின், ரஜினியை வைத்து, மீண்டும் படத்தயாரிப்பில்
இறங்கத் தீர்மானித்தது.
ரஜினியுடன் ரோஜா, சுஜாதா, கவிதா, சங்கீதா, ஸ்ரீவித்யா ஆகியோர்
நடிக்க ஒப்பந்தம் ஆனார்கள். பாடல்களை வாலி எழுத, இளையராஜா இசை
அமைப்பார் என்று அறிவிப்புகள் வெளியாயின.
எதிர்பாராத பிரச்சினை
அப்போது, யாரும் எதிர்பாராத பிரச்சினை ஒன்று எழுந்தது.
அந்தக் காலக்கட்டத்தில், பல திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. பல பட
அதிபர்கள் நஷ்டத்தை சந்தித்தனர்.
இதனால் நடிகர் - நடிகைகள் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்
என்று, பட அதிபர்களும், விநியோகஸ்தர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.
இதுபற்றி நடிகர் - நடிகைகளும், விநியோகஸ்தர்களும், பட அதிபர்களும்
தனித்தனியாகக்கூடி, ஆலோசனைகள் நடத்தி வந்தார்கள்.
"தயாரிப்புச் செலவு அதிகமாகக் காரணமே, நடிகர்களின் சம்பளம்தான்''
என்று பட அதிபர்கள் தரப்பில் கூறப்பட்டதை, நடிகர்கள் ஏற்கவில்லை. "எங்களுக்கு
இருக்கும் `மார்க்கெட் வேல்'வை வைத்துத்தானே சம்பளம் தருகிறீர்கள்.
படம் விற்கப்படுவதும், நடிகர்களின் புகழை வைத்துத்தானே!'' என்பது
நடிகர்கள் தரப்பு வாதம்.
முத்தரப்பு கூட்டம்
இந்தப் பிரச்சினையில் ஒரு முடிவுக்கு வர, முத்தரப்பு கூட்டம்
நடந்தது.
பட அதிபர்கள், நடிகர் - நடிகைகள், விநியோகஸ்தர்கள் இதில் கலந்து
கொண்டனர்.
கூட்டத்தில் ரஜினி பேசும் நேரம் வந்தது. அவர் பேசும்போது, "வரியைக்
குறைக்கச் சொல்லி அரசாங்கத்திடம் கேளுங்கள். தியேட்டர் வாடகையை
குறைக்கச் சொல்லுங்கள். இது இரண்டும் சாத்தியமானா எல்லாமே
சரியாயிடும'' என்று அவர் மனதில் தோன்றிய கருத்தை பளிச்சென்று
சொல்லிவிட்டு, காரில் ஏறிப்போய் விட்டார்.
மற்ற நடிகர்களும் வெளியேறினார்கள்.
தடை
இது, விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
"ரஜினி நடித்த படங்களை வாங்கக்கூடாது'' என்று விநியோகஸ்தர்கள்
சங்கம் தடை ("ரெட்கார்டு'') போட்டது. சென்னை, காஞ்சீபுரம்,
திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தலைவரும்,
தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை துணைத்தலைவருமான "சிந்தாமணி''
எஸ்.முருகேசன் இந்த தடை உத்தரவை பிறப்பித்தார்.
அந்தக் காலக்கட்டத்தில், சென்னை விநியோகஸ்தர்கள் சங்கம் எடுக்கும்
முடிவுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள விநியோகஸ்தர்கள் சங்கங்கள்
கட்டுப்பட்டு நடந்தன.
பதிலடி
விநியோகஸ்தர்கள் சங்கம் எடுத்த முடிவு, பட உலகில் பெரும் பரபரப்பை
உண்டாக்கியது. ரஜினி நடிக்க விஜயா - வாகினி தயாரிப்பதாக
அறிவிக்கப்பட்ட "உழைப்பாளி'' படம், திட்டமிட்டபடி தயாராகுமா என்ற
கேள்விக்குறியும் எழுந்தது.
நிலைமையை தீவிரமாக ஆராய்ந்த விஜயா - வாகினி நிறுவனம், திட்டமிட்டபடி
"உழைப்பாளி'' படத்தை தயாரிப்பது என்றும், விநியோகஸ்தர்களை
எதிர்பார்க்காமல் படத்தை நேரடியாக ரிலீஸ் செய்வது என்றும்
தீர்மானித்தது.
இந்த முடிவு எடுக்கப்பட்டதும், பி.வாசு டைரக்ஷனில் படம் வேகமாக
வளர்ந்தது.
கதை
"உழைப்பாளி'' கதை விறுவிறுப்பானது.
தொழிலதிபர் ரவிச்சந்திரன், தனது தொழில் திறமையால் கோடீஸ்வரர்
ஆகிவிடுகிறார். அவரது மனைவி சுஜாதாவின் 3 அண்ணன்களுக்கும் இந்த
திரண்ட சொத்தை தாங்களே அனுபவிக்கவேண்டும் என்ற விபரீத எண்ணம்
ஏற்படுகிறது.
இதனால் தொழிலதிபரை கொன்றுவிட்டு, அவரது வாரிசான சிறுவன் ரஜினி
வாயிலும் விஷத்தை ஊற்றி விடுகிறார்கள். ரஜினி, அக்கா ஸ்ரீவித்யாவால்
காப்பாற்றப்படுகிறார். தாய் மாமன்களுக்கு பயந்து தலைமறைவாக
வாழ்கிறார்.
ரஜினி வாலிபனாகிறார். ஒரு தொழிற்சாலையில் "உழைப்பாளி''யாக வேலையில்
சேருகிறார். அங்கே ரவுடியாக இருந்து அராஜகம் செய்தவர்களின்
கொட்டத்தை அடக்குகிறார்.
ஒருமுறை ரஜினி ஒரு பங்களாவுக்கு வர நேரிடுகிறது. வந்த இடத்தில்
அந்த பங்களாவுக்கு மட்டுமல்ல, கோடீசுவரர் ரவிச்சந்திரனுக்கும்
வாரிசு என்பது தெரியவருகிறது. தனது தாயார் மனநிலை பாதிக்கப்பட்ட
நிலையில் தாய்மாமன்களின் கண்காணிப்பில் இருப்பதும் தெரிகிறது.
தாயாரைக் காப்பாற்றி தாய்மாமன்களை ஜெயிலுக்கு அனுப்புகிறார், ரஜினி.
இடையே ரோஜாவுடனான காதல் காட்சிகளும் உண்டு.
உணர்ச்சி மிக்க வசனம்
இந்தப் படத்தில், தமிழக ரசிகர்கள் மீது தான் வைத்திருக்கும் அன்பை
வெளிப்படையாக தெரிவிக்க எண்ணினார், ரஜினி. அதற்கென உருவாக்கப்பட்ட
வசனத்தை உணர்ச்சிபூர்வமாக பேசவும் செய்தார். அந்த வசனம் வருமாறு:-
"நான் ஒரு அனாதை. வேலை தேடி தமிழ்நாட்டுக்கு வந்தேன். தமிழ்நாட்டில்
கோடிக்கணக்கான சகோதர - சகோதரிகள் என் மீது பாசம் வெச்சிருக்காங்க.
என் மனசுக்கு பட்டதை `சட்'டுன்னு சொல்வேன். `பட்'டுன்னு செய்வேன்.
நாளைக்கு நான் அப்படி இருப்பேன், இப்படி இருப்பேன்னு சொல்றாங்க. ஆனா
நான் சொல்றேன். நேத்து என்னை ஆண்டவன் கூலியா வெச்சிருந்தான்.
இன்னிக்கு நடிகன் ஆக்கியிருக்கான். நாளைக்கு எப்படி இருப்பேன்னு
தெரியாது. அது அந்த ஆண்டவனுக்கு மட்டும்தான் தெரியும்.''
ரஜினியின் வாழ்க்கை நிலையை உள்ளது உள்ளபடியே வெளிப்படுத்திய இந்த
வசனம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
படத்துக்கு இசை இளையராஜா. "ஒரு மைனா மைனாக்குருவி மனசார பாடுது'',
"உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்கும் இல்ல'', "ஒரு சோலக்கிளி
சோடிதன்னை தேடுது தேடுது'', "அம்மா அம்மா எந்தன் ஆருயிரே'', "முத்திரை
போட்டு குத்திடு தப்பாது ராஜா'' ஆகிய பாடல்களுக்கு அமர்க்களமாக
இசையமைத்து இருந்தார், இளையராஜா.
வெற்றி
விநியோகஸ்தர்கள் சங்க தடையை மீறி, சில ஊர்களில் "உழைப்பாளி'' படத்தை
விநியோகஸ்தர்கள் வாங்கினார்கள்.
எனினும் பெரும்பாலான ஊர்களில், விஜயா - வாகினி நிறுவனமே நேரடியாக
ரிலீஸ் செய்தது.
24-6-1993-ல் வெளியான இந்தப்படம், நூறு நாட்களைத்தாண்டி ஓடி வெற்றி
பெற்றது. சென்னையில் 116 நாட்களும், மதுரையில் 142 நாட்களும் ஓடியது.
>>> Part
91
|