ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்
ரஜினிகாந்துக்கும், பட விநியோகஸ்தர்களுக்கும் ஏற்பட்ட மோதல்,
பின்னர் சுமூகமாகத் தீர்ந்தது.
"ரஜினி நடித்த படத்தை யாரும் வாங்கக்கூடாது'' என்று விநியோகஸ்தர்கள்
சங்கம் விதித்த தடையை மீறி, ரஜினியின் "உழைப்பாளி'' படம் வெளிவந்து,
வெற்றி பெற்றது.
ரஜினியின் படங்கள் பெரிய வசூல் படங்களாக இருந்ததாலும், தமிழ்
சினிமாவின் பெரிய சக்தியாக அவர் விளங்கியதாலும், மோதல் போக்கை
கைவிடுவது நல்லது என்று பட உலகப் பிரமுகர்கள் பலரும்
விரும்பினார்கள்.
சமரசம்
இதைத்தொடர்ந்து, ரஜினிக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை ("ரெட்கார்டு'')
விநியோகஸ்தர்கள் கைவிட்டனர்.
ரஜினிக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நல்லுறவு ஏற்பட்டது.
இதுகுறித்து, ரஜினிகாந்த் வெளியிட்ட ஒரு அறிக்கையில்
கூறியிருந்ததாவது:-
"என்னுடைய படங்களை விநியோகஸ்தர்கள் வாங்கக்கூடாது என்று
விநியோகஸ்தர்கள் சங்கம் எடுத்த தீர்மானத்துக்கு எதிராக, என்னை
ஆதரித்த எல்லா நடிகர் - நடிகைகளுக்கும், என்னுடைய இனிய நண்பர்
கமலஹாசன், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் மோகன்
காந்திராமன், மற்றும் அவர் தலைமையில் இயங்கி வரும் 24 சங்க
நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், நடிகர் சங்கம்,
தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்க
தலைவர் ராதாரவி, திரை அரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர்
டி.ராமானுஜம் ஆகியோருக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும், ஏனைய
தலைவர்களுக்கும் நன்றி.
சரியான காலத்தில் சுமூகமான முடிவை எடுத்த திரைப்பட விநியோகஸ்தர்கள்
சங்கத் தலைவர் - என்னுடைய நண்பர் சிந்தாமணி முருகேசனுக்கும்
என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒற்றுமை
தவறு செய்வது மனித இயல்பு. செய்த தவறை உணரும் பக்குவம் வரும்
பொழுதுதான் உண்மையான மனிதர்கள் ஆகிறோம்.
இனிவரும் காலங்களில் நமக்குள் மனக்கசப்பு, அபிப்பிராய பேதங்கள்
இல்லாமல் எல்லோரும் சிறப்புடன் வாழ, நாம் ஒற்றுமை யுடன் பாடுபடுவோம்.''
இவ்வாறு அந்த அறிக்கையில் ரஜினி குறிப்பிட்டிருந்தார்.
சிந்தாமணி
முருகேசன்
இந்த முக்கிய நிகழ்ச்சி குறித்து, சிந்தாமணி முருகேசன் கூறியதாவது:-
"ரஜினியை தங்களது வழிகாட் டும் தெய்வமாக ரசிகர்கள் எண்ணுகிறார்கள்.
அவர் பெயரைச் சொன்னால் ஆர்ப்பரிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட உயர்ந்த இமேஜ் கொண்ட ரஜினியிடமும், அவரது
ரசிகர்களிடமும் என்னை கெட்டவன்போல் தோன்றச் செய்யும் ஒரு சூழ்நிலையை,
சிலர் ஏற்படுத்தினார்கள். அந்த சூழலுக்கு ஆட்பட்டு நான் பலி கடா
ஆக்கப்பட்டேன். உண்மையில், ரஜினி படங்களை வாங்கக்கூடாது என்ற
முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை. அதை அப்போதும் கூறினேன். அதையும்
மீறி சங்கம் எடுத்த முடிவுதான் அது.
சங்கத் தலைவர் என்ற முறையில், மெஜாரிட்டி தீர்மானத்துக்கு நான்
கட்டுப்பட நேர்ந்தது.
அமைதி காத்தார்
ரஜினி நினைத்திருந்தால் எனக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு,
ரசிகர்களைத் தூண்டிவிட்டிருக்க முடியும். ஆனால் அவர் அப்படிச்
செய்யவில்லை.
அறிக்கையில், என்னை தனது "நண்பர்'' என்றே குறிப்பிட்டார். எனக்கு
எதிராகக் கோபப்பட்ட ரசிகர்களையும் சமாதானப்படுத்தினார். அகில
இந்திய ரஜினிகாந்த் ரசிகர்கள் மன்ற தலைவர் சத்தியநாராயணனும்
ரசிகர்களை அமைதிப்படுத்தியதை இந்த நேரத்தில் நான் குறிப்பிட்டே
ஆகவேண்டும்.
வாழ்த்து சொன்னார்
இதன்பின்,விநியோகஸ்தர்கள்சங்கதலைவராக 13-வது முறையாக நான்
தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தபோது, எனக்கு ஒரு டெலிபோன் வந்தது.
அப்போது ரஜினிகாந்த் வெளிநாட்டுக்குச் சென்றிருந்தார்.
நான் "ஹலோ'' என்றதும், மறுமுனையில் இருந்து, "நான் ரஜினி பேசுகிறேன்''
என்ற குரல் ஒலித்தது.
"எப்ப வெளிநாட்டில் இருந்து திரும்பினீர்கள்?'' என்று நான்
கேட்டதற்கு, "நான் ஆஸ்திரேலியாவில் இருந்து பேசுகிறேன். நீங்கள்
விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதாக
அறிந்தேன். என்னுடைய வாழ்த்துக்கள்'' என்றார், ரஜினி.
அவருடைய வாழ்த்துச் செய்தி எனக்கு நெகிழ்ச்சியை உண்டாக்கியது. என்னை
தனது நண்பர் என்று மனதளவில் ஏற்றுக்கொண்டிருப்பதுடன்,
வெளிநாட்டுக்குச் சென்றிருக்கும்போதுகூட வாழ்த்துச் சொல்கிறாரே
என்று எண்ணியபோது, அவர் அன்பையும், பண்பையும் எண்ணி
மெய்சிலிர்த்துப்போனேன்.''
இவ்வாறு சிந்தாமணி முருகேசன் கூறினார்.
(ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு - நாளை)
ரஜினி `சுயதரிசனம்'
நான் நிறைய விஷயங்களை, சின்னக் குழந்தைங்க கிட்டே இருந்து
கத்துக்கிட்டேன்; கத்துக்கறேன். ஏன், பறவைகள், மிருகங்கள் கிட்டே
இருந்து கூட கத்துக்கறேன்.
சில விஷயங்களில், மனுஷனை விட மிருகங்கள் உயர்ந்து நிற்கின்றன. ஒரு
மனிதன் இன்னொரு மனிதனைப் பார்த்துப் பொறாமைப் படுவான். ஆனால்,
மிருகங்கள் அப்படி இல்லே. ஒரு ஆடு, தான் புலியா மாறணும்னு
புழுங்குதா? ஒரு மாடு, தான் யானையா மாறணும்னு நினைக்குதா?
- ரஜினிகாந்த்.
>>> Part 92
|