|
ரஜினியின்
வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''
ரஜினியின் திரை உலகப் பயணத்தில் பெரிய திருப்புமுனை
ஏற்படுத்திய படம் "பாட்ஷா.'' அவருடைய வெற்றி மகுடத்தில் கோகினூர்
வைரம் போல பதிக்கப்பட்ட மாபெரும் வெற்றிப்படம் அது.
ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த படம் "பாட்ஷா''
ரஜினியுடன் நக்மா, யுவராணி, ரகுவரன், விஜயகுமார், ஜனகராஜ், தேவன்,
சரண்ராஜ், சசிகுமார், ஆனந்தராஜ், சத்யபிரியா ஆகியோர் நடித்தனர்.
வசனத்தை பாலகுமாரன் எழுத, வைரமுத்துவின் பாடல்களுக்கு தேவா இசை
அமைத்தார். டைரக்ஷன்: சுரேஷ்கிருஷ்ணா.
கதை, நடிப்பு, பாட்டு என்று சகல அம்சங்களும் நன்றாக இருந்ததால்,
படம் இமாலய வெற்றி பெற்றது.
கதை
ஆட்டோக்காரன் மாணிக்கமாக அறிமுகமாகிறார், ரஜினி. தன் சித்தியிடமும்,
ஒரு தம்பி, 2 தங்கைகள் ஆகியோரிடமும் மிகுந்த பாசம் கொண்டிருக்கிறார்.
இந்த தம்பியும், தங்கைகளும் கூடப் பிறந்தவர்கள் இல்லையென்றாலும்
அவர்கள் மீது உயிரையே வைத்திருக்கிறார்.
தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியின்படி, மூத்த தங்கைக்கு நல்ல
இடத்தில் திருமணம் செய்து வைக்கிறார். தம்பிக்கு போலீஸ் அதிகாரி
வேலை வாங்கித் தருகிறார். கடைசி தங்கைக்கு அவள் விருப்பப்படி "மெடிக்கல்''
சீட் கிடைக்கிறது.
நக்மா ஒரு பணக்காரரின் (தேவன்) மகள். ஒருநாள் ஆட்டோவில் பயணம்
செய்யும் நக்மா, ரஜினியின் நற்பண்புகளைக் கண்டு அவரைக்
காதலிக்கிறார்.
ஆனந்தராஜ் தலைமையில் இயங்கும் ஒரு ரவுடிக் கூட்டத்திடம்
சிக்கிக்கொள்ளும் தம்பியைக் காப்பாற்ற, ரவுடிகள் கொடுக்கும்
அடிகளையெல்லாம் புத்தரைப்போல பொறுமையாக தாங்கிக்கொள்ளும் ரஜினி, தன்
தங்கையை ரவுடி கடத்திச்சென்று கெடுக்க முயன்றபோது, சிங்கமாகச் சீறி,
ரவுடிக் கூட்டத்தை பந்தாடுகிறார்.
"ஒரு சாதாரணமான மனிதனால் இத்தனை பேர்களை அடித்து துவம்சம் செய்ய
முடியாது'' என்று டாக்டர்கள் கூற, அண்ணன் மீது சந்தேகம் கொள்கிறான்,
போலீஸ் தம்பி.
"நீங்க யாரு? மும்பையில் இருந்தபோது என்ன செய்துகிட்டு இருந்தீங்க?''
என்று தம்பி கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்க, ஆட்டோ மாணிக்கம்
பற்றிய "பிளாஷ்பேக்'' விரிகிறது.
ரகுவரனின்
யமன்
மும்பையில் மார்க் ஆண்டனி (ரகுவரன்) பெரிய தாதா. அவனிடம் வேலை
பார்க்கும் விசுவாசி விஜயகுமாரின் மகன்தான் ரஜினி.
ஆண்டனியின் அட்டூழியங்களைக் கண்டு சகிக்காத ரஜினி, தன் உயிர் நண்பன்
அன்வரின் மரணத்துக்கு பழிவாங்குவதாக சபதம் செய்துவிட்டு, ஆண்டனிக்கு
எதிரான தாதாவாக மாறுகிறார். "மாணிக் பாட்ஷா'' என்பது இப்போது
அவருடைய பெயர். பணக்காரர்களின் பணத்தை ஏழைகளுக்குப் பங்கிட்டுத்
தருகிறார். இதனால் ஏழைகளின் கடவுளாக போற்றப்படுகிறார்.
ரஜினிக்கும், ஆண்டனிக்கும் தகராறு முற்றுகிறது. சமரசம் செய்து
கொள்ள ஆண்டனி முன்வந்தும், ரஜினி சம்மதிக்கவில்லை.
இருதரப்புக்கும் மோதல் நடக்கும் தருணத்தில், ஆண்டனிக்கு
விசுவாசிபோல் அதுவரை நடித்து வந்த தேவன், ஆண்டனியின்
குடும்பத்தினரைக் கொன்றுவிட்டு, பணம் - நகைகளுடன் தப்பிவிடுகிறான்.
பழி, பாட்ஷா மீது விழுகிறது. ஆண்டனி, போலீசாரிடம் பிடிபடுகிறான்.
சிறையில் இருந்து தப்பும் ஆண்டனி, தனக்கு துரோகம் செய்துவிட்டு, தன்
குடும்பத்தை அழித்தவன் தேவன் என்பதை அறிந்து, அவனை சுட்டுக்
கொல்கிறான். மாணிக்கத்துடன் மோதி அவன் குடும்பத்தையும் அழிக்க
முயற்சி செய்கிறான். அவனை ரஜினி கொல்லப் போகும்போது, போலீஸ் அதிகாரி
அதைத் தடுத்து, "பாட்ஷா ஏற்கனவே செத்துப்போய் விட்டான்; நீ
ஆட்டோக்காரன் மாணிக்கம்'' என்று கூறி, ஆண்டனியை கைது செய்து,
அழைத்துச் செல்கிறார்.
நக்மாவை கைப்பிடிக்கிறார், ரஜினி.
மகத்தான வெற்றி
வேகமும், விறுவிறுப்பும் கொண்ட இந்தப்படம், அனைத்து தரப்பினரையும்
கவர்ந்து பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. "ஊட்டி மலை சிகரத்தில்
இருந்த ரஜினியின் புகழ், இந்தப்படத்தின் மூலம் எவரெஸ்ட் உயரத்துக்கு
உயர்ந்து விட்டது'' என்று பத்திரிகைகள் எழுதின.
"அண்ணாமலை'', "வீரா'' ஆகிய வெற்றிப்படங்களை டைரக்டர் செய்த சுரேஷ்
கிருஷ்ணா, ரஜினியை வைத்து இயக்கிய இந்த மூன்றாவது படத்தையும் பெரிய
படமாக்கி, முத்திரை பதித்தார்.
படத்தின் வெற்றிக்கு பாடல்கள் பெரிதும் துணை புரிந்தன. "ஆட்டோக்காரன்...
ஆட்டோக்காரன்'', "அழகு... அழகு...'', "ஸ்டைலு ஸ்டைலுதான்'', "பாட்ஷா
பாரு, பாட்ஷா பாரு'', "ரா... ரா... ராமையா'' முதலான அனைத்துப்
பாடல்களும் சூப்பர் ஹிட்.
ரஜினி நடித்து அதுவரை வெளிவந்த எல்லாப் படங்களின் வசூலையும், "பாட்ஷா''வின்
வசூல் மிஞ்சியது. அதுமட்டுமல்ல; தமிழ்ப்படங்களில் மிக அதிக லாபம்
சம்பாதித்த ஒரு சில படங்களில் பாட்ஷாவும் ஒன்று என்பதை புள்ளி
விவரங்கள் தெரிவித்தன.
1995 பொங்கலுக்கு வெளிவந்த "பாட்ஷா'', பல இடங்களில் வெள்ளி விழா
கொண்டாடியது. சென்னையில் 184 நாட்கள் ஓடியது. கோவையில் ஒரு
வருடத்துக்கு மேல் (368 நாள்) ஓடியது.
இந்தப்படம் "பாட்ஷா'' என்ற பெயரிலேயே தெலுங்கில் `டப்' செய்யப்பட்டு,
நூறு நாட்கள் ஓடியது.
>>> Part 94
| |