பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி
ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்
பாட்ஷா வெள்ளி விழாவில் ரஜினிகாந்த், வெடிகுண்டு கலாச்சாரம்
பற்றியும், ஆட்சியைப் பற்றியும் தெரிவித்த கருத்துக்கள் காரணமாக,
மந்திரி பதவியை ஆர்.எம்.வீரப்பன் இழக்க நேர்ந்தது.
பாட்ஷா படத்தை தயாரித்த சத்யா மூவிஸ், ஆர்.எம்.வீ.யின் குடும்ப
நிறுவனம் ஆகும். பாட்ஷா வெள்ளி விழாவின்போது, ஜெயலலிதா
முதல்-அமைச்சராக இருந்தார். அவருடைய மந்திரி சபையில், வீரப்பன் உணவு
அமைச்சராக பதவி வகித்தார்.
"பாட்ஷா'' பட விவகாரம் பற்றி, ஆர்.எம்.வீரப்பனின் வாழ்க்கை வரலாற்று
நூலில் ("ஆர்.எம்.வீ. ஒரு தொண்டர்'') குறிப்பிட்டுள்ள விவரங்களாவன:-
அமெரிக்கா பயணம்
"பாட்ஷா படத்தின் வெள்ளி விழாவுக்கு அடுத்த நாள், ஆர்.எம்.வீ.
அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள இருந்தார்.
பாட்ஷா விழாவுக்கு வருவதற்கு முன்னால், கோட்டைக்குச் சென்று,
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து, ஏற்கனவே தன்னுடைய
வெளிநாட்டுப் பயணம் பற்றித் தெரிவித்திருந்ததை நினைவுபடுத்தி,
மறுநாள் தான் கிளம்பப் போவதை உறுதிப்படுத்தி, விடைபெற்றுக்
கொண்டுதான் வந்தார்.
ரஜினி அழைப்பு
பாட்ஷா படத்தயாரிப்பில் தனக்கு நேரடியாகத் தொடர்பு இல்லை என்பதால்,
ஆர்.எம்.வீ. மேடைக்குச் செல்லாமல், முன் வரிசையில் ஒரு
பார்வையாளராக அமர்ந்திருந்தார்.
ரஜினி வந்ததும், ஆர்.எம்.வீ. கீழே அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு,
மேலே வரும்படி அழைத்து, மேடையில் அமரச் செய்தார்.
ரஜினி பேசும் போது, தன் இயல்புப்படி சில கருத்துக்களை வெளியிட்டார்.
"தமிழ்நாட்டில் வன்முறை பெருகிவிட்டது'' என்பது, அப்படி அவர்
வெளியிட்ட கருத்துக்களில் ஒன்று.
யாரையும் தாக்கிப்பேசவேண்டும் என்ற எண்ணத்தில் வெளியிடப்பட்ட
கருத்தாக அதை ஆர்.எம்.வீ. எண்ணவில்லை. மேலும் ரஜினி, விழாவில்
இறுதியாகப் பேசியதால், அவர் பேசி முடித்ததும் விழா முடிந்துவிட்டது.
விழா முடிந்ததும், ஆர்.எம்.வீ. புறப்பட்டு வீட்டுக்குச்
சென்றுவிட்டார்.
முதல்வர் கேள்வி
மறுநாள் காலை, `முதல்வர் உங்களைப் பார்க்க விரும்புகிறார்' என்று
தகவல் கிடைத்தது. உடனே போயஸ் தோட்டம் சென்றார்.
இன்டர்காமில் ஆர்.எம்.வீ.யுடன் முதல்-அமைச்சர் பேசினார்.
"என்னை நேற்று ரஜினி அப்படியெல்லாம் பேசியிருக்கிறார்... நீங்கள்
மேடையில் அதையெல்லாம் கேட்டுக்கொண்டு சும்மா உட்கார்ந்திருந்தீர்களா?''
என்று கேட்டார், ஜெயலலிதா.
"இல்லம்மா... அவர் இயல்புப்படி பேசினார். அது ஒரு பெரிய தாக்கத்தை
ஏற்படுத்தக்கூடியது என்று நான் நம்பவில்லை... தவிர, அவர் கடைசியாகப்
பேசியதும், கூட்டம் முடிந்து விட்டது. மறுப்பு சொல்ல வாய்ப்பும்
இல்லை'' என்றார், ஆர்.எம்.வீ.
"அவர் என்னை அட்டாக் பண்ணித்தான் பேசியிருக்கார். அதை நீங்க
கேட்டுக்கிட்டு இருந்தீங்க...!'' என்று கூறிவிட்டு, ரிசீவரை
வைத்துவிட்டார், ஜெயலலிதா.
ஆர்.எம்.வீ.க்கு நிலைமை புரிந்து விட்டது. அடுத்து என்ன நடக்கும்
என்பதையும் ஊகிக்க முடிந்தது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல்,
திட்டமிட்டபடியே அன்றிரவு அமெரிக்காவுக்குப் பயணமானார்.
எரிமலை
அங்கு போய்ச் சேர்ந்ததும்தான், தமிழ்நாட்டில் பெரிய எரிமலை
வெடித்திருந்த செய்தி ஆர்.எம்.வீ.க்கு கிடைத்தது. அவருக்கு
எதிராகவும், விரோதமாகவும் அறிக்கைகள் வெளியாயின.
"துரோகிகளை வெளியேற்றுங்கள்'' என்று சிலர் அறிக்கை விட்டார்கள்.
ஆர்.எம்.வீ.யை மட்டுமல்லாமல், ரஜினியை தாக்கியும் அறிக்கைகள்
வெளியாயின. இதனால் ரஜினி ரசிகர்கள் கொதிப்படைந்தார்கள்.
இதன் காரணமாக, அமெரிக்காவில் இருந்து ஆர்.எம்.வீ. அறிக்கை ஒன்றை
வெளியிட்டார். "நான் அமைச்சராக இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பது
முதல்-அமைச்சர் முடிவு செய்ய வேண்டிய விஷயம். அவர் எப்போது என்னை
வேண்டாம் என்றாலும், நான் போகத்தயாராக இருக்கிறேன். இதற்காக
போராட்டம் செய்யத் தேவையில்லை'' என்று அறிக்கையில்
குறிப்பிட்டிருந்தார்.
இதன்பின், கிட்டத்தட்ட சுமார் ஒரு மாத காலம் அமெரிக்காவில்
சுற்றுப்பயணம் செய்துவிட்டு, ஆகஸ்டு 14-ந்தேதி நள்ளிரவில் சென்னை
திரும்பினார்.
விமான நிலையத்தில் அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வந்திருந்தவர்களில் பெரும்பாலோர் ரஜினி ரசிகர்கள்.
மறுநாள் ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று, தேசிய கொடி ஏற்றும்
அரசு விழாவில், வழக்கம் போலவே ஆர்.எம்.வீ.யும் முதல்-அமைச்சரை
சந்தித்தார். பின்னர், உணவுத்துறை அமைச்சர் பொறுப்பை கவனிக்கலானார்.
இதனால் ஆறுதல் அடைந்த ரஜினி, ஆர்.எம்.வீ.யின் வீட்டிற்கே நேரில்
வந்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
நீக்கம்
இந்த சந்திப்புக்கு 15 நாட்களுக்குப்பின், ஆர்.எம்.வீரப்பனுக்கு
உணவுத்துறைக்கு பதிலாக, கால்நடைத்துறை ஒதுக்கப்பட்டது.
இதன்பின் திடீரென்று அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.
சில நாட்களில், அ.தி.மு.க.வில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இதன் காரணமாக, "எம்.ஜி.ஆர். கழகம்'' என்ற பெயரில் அரசியல் கட்சியை
1995-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி ஆர்.எம்.வீரப்பன் தொடங்கினார்.
(ரஜினியின் "முத்து'' அபார சாதனை - நாளை)
ரஜினி `சுயதரிசனம்'
"நான் ஆன்மீகவாதிதான். ஆனால், ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னொரு
கன்னத்தைக் காட்டும் அளவுக்கு ஆன்மீகத்தில் இன்னும் உயரவில்லை.
அந்த மாதிரியான ஆன்மிகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை.''
- ரஜினிகாந்த்.
>>> Part 96
|