ரஜினியின்
"முத்து'' அபார சாதனை!
ஜப்பானில் 23 வாரம் ஓடியது
ரஜினிகாந்த் நடித்த "முத்து'' அபார சாதனை நிகழ்த்தியது. ஜப்பானில்
23 வாரங்கள் ஓடியது.
"அண்ணாமலை'' வெற்றிக்குப்பிறகு, கவிதாலயா நிறுவனத்துக்காக ரஜினி
நடித்துக்கொடுத்த படம் "முத்து.''
வழக்கமாக இந்தி, கன்னடம், அல்லது தெலுங்குப் படங்களைத்தான்,
அவசியமான மாற்றங்களுடன் தமிழில் "ரீமேக்'' செய்து நடிப்பார், ரஜினி.
ஆனால் "முத்து'', மலையாளத்தில் "தேன்மாவின் கொம்பத்'' என்ற பெயரில்
வெளிவந்து வெற்றி பெற்ற படத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும். திரைக்கதை,
வசனம் எழுதி டைரக்ட் செய்தார், கே.எஸ்.ரவிக்குமார். ஏ.ஆர்.ரகுமான்
இசை அமைத்தார்.
ரவிக்குமாரும், ஏ.ஆர்.ரகுமானும் இணைந்த முதல் படம் இதுதான்.
பாடல்கள் வைரமுத்து.
திருப்பங்கள்
"முத்து'' படத்தின் கதை, திருப்பங்கள் நிறைந்தது.
ஜமன்தார் (சரத்பாபு) மாளிகையில் சாரட்டு வண்டியை ஓட்டும் தொழிலாளி
முத்து (ரஜினிகாந்த்). இருவரும் உயிர் நண்பர்கள்.
சரத்பாபுவின் மாமா (ராதாரவி) தன் மகளை சரத்பாபுவுக்கு திருமணம்
செய்து வைத்து, சொத்துக்களை அபகரிக்கத் திட்டமிடுகிறார். ஆனால்,
சரத்பாபு, ரங்கநாயகி (மீனா) என்ற நாடகக்காரியை காதலிக்கிறார்.
மீனாவோ, ரஜினியை விரும்புகிறார்.
ராதாரவியின் சூழ்ச்சியால் ரஜினி மீது சந்தேகம் கொள்ளும் சரத்பாபு,
அவரை அடித்து வெளியே விரட்டி அடிக்கிறார்.
அந்த சமயத்தில்தான், சரத்பாபுவிடம் அவர் தாயார் (ஜெயபாரதி) ஒரு
ரகசியத்தை வெளியிடுகிறார்.
உண்மையில், ரஜினியின் தந்தைதான் ஜமீன்தார். அவர் தம்பியான ரகுவரன்
(சரத்பாபுவின் அப்பா) ராதாரவியின் தூண்டுதலால், சொத்துக்களை அடைய
போலிப் பத்திரங்களை தயாரிக்கிறார். இது தெரிந்ததும், ஜமீன்தார்
ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி ஜமீன் வாரிசாக ரகுவரனின்
குழந்தையை (சரத்பாபு) அறிவித்து விட்டு, ஜமீனைவிட்டு வெளியேறுகிறார்.
அவருடைய கைக்குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஜெயபாரதி ஏற்கிறார்.
ரஜினிதான் உண்மையான ஜமீன்தார் என்பதை தெரிவிக்கக்கூடாது என்று
வாக்குறுதி பெற்றுக்கொள்கிறார், ஜமீன்தார்.
இந்த வரலாற்றை ஜெயபாரதி தெரிவித்ததும், சரத்பாபு திருந்துகிறார்.
ஆனால் ராதாரவியால் தாக்கப்பட்டு, கிணற்றில் வீசப்படுகிறார். அவரை
பழைய ஜமீன்தார் காப்பாற்றி விட்டு, யாருக்கும் தெரியாதவாறு ஜமீனை
விட்டு வெளியேறுகிறார் பிரிந்தவர்கள் ஒன்று சேருகின்றனர்.
"கட்டிப்பிடிச்சு ஒரு உம்மா கொடு''
திரைக்கதையை சிறப்பாக அமைத்து, விறுவிறுப்பாக படத்தை
எடுத்திருந்தார், ரவிக்குமார்.
ரங்கநாயகியாக நாடக மேடையில் மீனா நடிக்கும்போது, ரஜினிகாந்த்
செய்யும் தமாஷ்கள், தியேட்டரில் சிரிப்பு அலைகளை எழுப்பின.
திசை மாறி மீனாவும், ரஜினியும் கேரளாவுக்கு சென்றுவிட, அங்கு வழி
கேட்க மொழி தெரியாமல் திண்டாடுகிறார், ரஜினி. `கட்டிப்பிடிச்சு ஒரு
உம்மா கொடு!' என்று கேட்கும்படி மீனா குறும்பு செய்ய, அதை பலரிடம்
கேட்டு உதைபடும் ரஜினி கடைசியில் உண்மை அர்த்தம் தெரிந்து
மீனாவுக்கே `உம்மா' கொடுப்பதும் கலகலப்பான காட்சிகள்.
இதில் ரஜினிக்கு இரட்டை வேடம் என்றாலும், இருவரும் ஒன்றாக
தோன்றவில்லை. அப்பா ஜமீன்தாராக சிறிது நேரமே வந்தாலும் மனதை நெகிழ
வைத்து விடுகிறார்.
"ஒருவன் ஒருவன் முதலாளி'', "குலுவாலிலே முத்து வந்தல்ல'', "தில்லானா
தில்லானா'', "கொக்கு சைவ கொக்கு'' முதலான பாடல்கள் மிகப்பெரிய
வரவேற்பைப் பெற்றன.
அரசியல் பஞ்ச்
"வரவேண்டிய நேரத்தில் நிச்சயம் வருவேன்'' என்பது போன்ற அரசியல்
பஞ்ச் வசனங்கள் இந்தப்படத்தில்தான் இடம் பெற்றன.
1995 அக்டோபர் 23-ந்தேதி தீபாவளி அன்று வெளியான இப்படம், 134 நாள்
ஓடி, வெற்றி வாகை சூடியது. தெலுங்கில் "முத்து'' என்ற பெயரிலேயே "டப்''
செய்யப்பட்டு, நூறு நாள் ஓடியது.
ஜப்பானில் சாதனை
"முத்து'' படம் தமிழ்நாட்டில் வெளியாகி 3 ஆண்டுகளுக்குப் பிறகு,
ஜப்பானில் திரையிடப்பட்டது. ஜப்பானிய மொழி சப் டைட்டிலுடன் "டான்சிங்
மகாராஜா'' என்ற பெயரில் ரிலீஸ் ஆகியது.
இந்தப்படம், ஜப்பானியர்களை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக
ரஜினியின் நடனங்களை அவர்கள் வெகுவாக ரசித்தனர்.
ஜப்பானில் "முத்து'' 23 வாரங்கள் ஓடி வரலாறு படைத்தது. வெளிநாட்டில்,
இவ்வளவு அதிக நாள் ஓடிய தமிழ்ப்படம் இதுதான்.
1950-ல் "ஆவாரா'' படத்தின் மூலம், ரஷிய ரசிகர்களிடம் ராஜ்கபூர்
புகழ் பெற்றார்.
இப்போது, ஜப்பானில் பெரிய ரசிகர் கூட்டத்தையே பெற்றிருக்கிறார்,
ரஜினி.
இன்று தமிழ்ப்படங்கள் உலகம் முழுவதும் ஒரே நாளில் ரிலீஸ்
செய்யப்படுகின்றன. "முத்து''வுக்கு கிடைத்த வெற்றிதான் இதற்குக்
காரணம்.
>>> Part 97
|