"முத்து''
படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி?
டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி
ரஜினியின் "முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது பற்றியும்,
"முத்து'' உருவானபோது கிடைத்த அனுபவங்கள் பற்றியும் டைரக்டர்
கே.எஸ்.ரவிக்குமார் விளக்கினார்.
அவர் கூறியதாவது:-
"ஏவி.எம். நிறுவனத்துக்காக நான் `சக்திவேல்' படத்தை இயக்கியபோதுதான்
ரஜினி சாருடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது. சக்திவேல் படத்தின்
டப்பிங் சமயத்தில் அவர் நடித்துக்கொண்டிருந்த `வீரா' படத்தின் பாடல்
காட்சிகளை பார்ப்பதற்காக ஏவி.எம். ஸ்டூடியோவுக்கு வந்திருந்தார்.
என்னைப் பார்த்ததும், "உங்களைப் பற்றி ஏவி.எம். சரவணன் சார்,
விஜயகுமாரெல்லாம் நிறைய சொல்லியிருக்காங்க'' என்று ஏற்கனவே பழகியவர்
மாதிரி இயல்பாக பேச தொடங்கினார்.
ரசிகன்
நான் பட உலகுக்கு வரும் முன்பு ரஜினி சாரை ரசிகனாக நேசித்தவன்.
எங்கள் வீடு மந்தைவெளியில் இருந்தது. மந்தைவெளி மெயின் ரோட்டில்
ரஜினி சாரின் ஒயிட் கலர் பியட் 5004 வரும்போது காத்திருந்து
பார்த்த அனுபவங்கள் உண்டு. அப்போது இவரை நேரில் பார்த்து இரண்டு
வார்த்தை பேச முடியுமா என்று ஏங்கியிருக்கிறேன். ஆனால் அவரே
பின்னாளில் என் டைரக்ஷனில் முத்து, படையப்பா படங்களில் நடித்து அவை
வெற்றிப் படங்களானது என்பது என்னை இப்போதும் பரவசப்படுத்தும்
விஷயங்கள்.
நான் இயக்க வந்த புதிதில் "சேரன் பாண்டியன்'', "புருஷலட்சணம்'', "பொண்டாட்டி
ராஜ்யம்'', "புரியாதபுதிர்'' என்று இயக்கியதில் ரசிகர்கள்
வட்டத்திலும் தெரிய ஆரம்பித்திருந்தேன். என் படத்தில் சரவணன்,
செல்வா, ஜெயராமன், குஷ்பு என நடித்தார்கள். இதில் குஷ்புதான்
அன்றைக்கு பெரிய நடிகை.
இந்த மாதிரி சமயத்தில் ரஜினி சார் என் படத்தில் நடிப்பார் என்று
எப்படி நினைக்க முடியும்?
"சக்திவேல்'' படத்தை முடித்து ரிலீசுக்கு தயாரான நேரத்தில் ஒருநாள்
எனக்கு சரவணன் சாரிடம் இருந்து போன். "மேனா தியேட்டர் வரை வர
முடியுமா? அங்கே உங்கள் படத்தை ரஜினி பார்த்துக் கொண்டிருக்கிறார்''
என்றார்.
மேனா தியேட்டருக்கு ஓடினேன். தியேட்டரில் ரஜினி சார் தனியாக படம்
பார்த்துக் கொண்டிருந்தார். முழுப் படமும் பார்த்து முடித்தவர்,
என்னிடம் கை குலுக்கினார். "படத்தை எவ்வளவு நாளில் முடித்தீங்க?''
என்று கேட்டார்.
"29 நாளில்'' என்றேன். ஆச்சரியப்பட்டார். "இவ்வளவு பிரமாண்டமா
பெரிய அளவில் கூட்டம் கூட்டி, 29 நாளில் முடிச்சதை நம்பவே முடியலை''
என்று ஆச்சரியப்பட்டவர், மறுபடியும் கைகுலுக்கிவிட்டுப் போனார்.
நாட்டாமை
அடுத்து அவரை சந்தித்தது எனது "நாட்டாமை'' படத்தின் `பிரிவி'
சமயத்தில்தான். நான் அவருக்கு போன் பண்ணி, "சார்! நீங்க நாட்டாமை
படத்தை பார்க்க வரணும். உங்களுக்கு எப்ப சவுகரியப்படும்னு
சொல்லுங்க'' என்றேன்.
பதிலுக்கு அவர், "நீங்க `ஷோ' போட றப்ப சொல் லுங்க. நான் வந்து டறேன்''
என்றார்.
நான் அவரிடம் "சார்! இன்றைக்குக்கூட மேனா தியேட்டரில் ஆறரைக்கு ஷோ
இருக்கு'' என்றேன். "முடிஞ்சா வந்துடறேன்'' என் றவர், மாலையில்
வந்து படத்தைப் பார்த்தார்.
படம் முடிந்ததும், என்னை அருகில் அழைத்தவர், அப் படியே கட்டிப்
பிடித் துக்கொண்டார். "வாட் எ பிக்சர்! வாட் எ பிக்சர்!'' என்று
பாராட்டினார்.
"இந்த மாதிரி ஒரு படம் பார்த்து ரொம்ப காலம் ஆச்சு'' என்று கூறியபடி
லிப்ட்டுக்கு வந்தார். லிப்டில் படத்தின் தயாரிப்பாளர் சவுத்ரி சார்
அவரை சந்தித்தார்.
அப்போது ரஜினி அவரிடம், "தெலுங்கு ரைட்ஸ் கொடுத்திட்டீங்களா?''
என்று கேட்டார். "கேட்டுக்கிட்டு இருக்கிறாங்க'' என்று சவுத்ரி சார்
சொன்னதும், "சார்! நான் சொல்றவரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ண
முடியுமா?'' என்று கேட்டார்.
சவுத்ரி சார் "சரி'' என்றார்.
"நாட்டாமை'' படம் வெற்றி எனத் தெரிந்ததும் தெலுங்கில் பிரபல
முன்னணி நடிகர் சிரஞ்சீவி உள்பட பலரும் சவுத்ரி சாரிடம் `ரீமேக்'
உரிமை கேட்டார்கள். ரஜினி சாருக்கு லிப்ட்டில் கொடுத்த வாக்குக்காக
அவர் யாரிடமும் கொடுக்கவில்லை.
பிறகு ரஜினி தனது நண்பர் மோகன்பாபுவுக்கு நாட்டாமையின் தெலுங்கு
"ரைட்ஸ்'' வாங்கிக் கொடுத்தார். அதோடு நில்லாமல் பெத்தராயுடு என்ற
பெயரில் தயாரான தெலுங்குப்படத்தில் அவரும் நடித்தார்.
தமிழில் `நாட்டாமை'யாக விஜயகுமார் நடித்த கேரக்டரில், ரஜினி
தெலுங்குக்காக சில மாற்றங்கள் செய்து அந்தக் கேரக்டரில் நடித்து
அசத்தினார். படம் பெரிய வெற்றி பெற்றது.
அதன் பிறகு நாங்கள் அடிக்கடி போனில் பேசிக்கொள்வோம். அப்படி
பேசும்போது இடையிடையே, "எப்போது எனக்கு படம் பண்ணிக்
கொடுப்பீங்க?'' என்று கேட்பார். "நீங்க எப்ப கூப்பிட்டாலும் நான்
ரெடி சார்'' என்பேன்.
"பாட்ஷா'' எப்படி?
ஒருநாள் ரஜினி சாரிடம் இருந்து போன். "பாட்ஷா படத்தை இன்றைக்கு
ஆல்பட் தியேட்டரில் பார்க்கிறோம். வந்துடுங்க'' என்றார். ஆல்பட்
தியேட்டர் பாக்சில் ரஜினி சாருடன் சேர்ந்து படம் பார்த்தேன். படம்
முழுவதும் எனக்குப் பிடித்திருந்தது.
"படம் எப்படி?'' என்று ரஜினி கேட்டார். "சார்! லாஜிக் மிஸ்டேக்
மட்டும் இடிக்குது. உங்களோட மும்பை நண்பர்களுக்கெல்லாம்
வயசாயிடுது. ஆனா உங்களுக்கு மட்டும் வயசாகாதா? என்றாலும நீங்க
`இமேஜ்' உள்ள ஹீரோ. அதனால ரசிகர்கள் இதை பெரிசா எடுத்துக்க
மாட்டாங்க. மற்றபடி படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது'' என்றேன்.
ரஜினி அப்போது என்னிடம், "மனதில் உள்ளதை பட்டுன்னு சொல்ற இந்த
குணம்தான் உங்ககிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது. நாங்களும் படம்
வளர்றப்ப இதுபற்றி பேசினோம். ரசிகர்கள் பெரிசா எடுத்துக்க
மாட்டாங்கன்னு விட்டுட்டோம்'' என்று சிரிச்சார்.
அப்பத்தான் என்னிடம், "நாம படம் பண்றோம். படத்தின் தயாரிப்பாளர்
கே.பாலசந்தர் சார்!'' என்றார்.
சின்ன வயசில் கே.பி. சார் படம் பார்க்க ஏங்கியிருக்கிறேன். இப்போது
அவர் தயாரிப்புக்கு நான் டைரக்டரா? எனக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.
மலையாளத்தில் அப்போது வெற்றி பெற்றிருந்த `தேன்மாவின் கொம்பத்தே'
படத்தின் கதைச் சுருக்கத்தை ரஜினி சார் என்னிடம் சொன்னார். `ஒரு
பெண்ணை முதலாளி - அவரது வேலைக்காரன் இருவருமே காதலிக்கிறார்கள்.
தொழிலாளியும் அந்தப் பெண்ணும் ஒரு காட்டில் தொலைந்து போகிறார்கள்.
இந்தப் பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு கதையை டெவலப் பண்ணுங்க''
என்றார்.
மலையாளப் படத்தில் `அப்பா ரஜினி' கேரக்டரெல்லாம் கிடையாது.
தமிழுக்காக இப்படி பல புதிய விஷயங்கள் சேர்த்தோம். அந்த அப்பா
கேரக்டரை சேர்க்கச் சொன்னதே ரஜினிதான். டிஸ்கஷன் முடிந்து
பார்த்தபோது, கதையே முற்றிலும் புதுசாகத் தெரிந்தது.
என்றாலும் கதை என்ற இடத்தில் மலையாள கதை ஆசிரி யரையே போட்டோம்.
நான் திரைக்கதை - டைரக்ஷன்.
புதுவிதமான படப்பிடிப்பு
படத்துக்கு "முத்து'' என்று பெயர் சூட்டினோம். முதல் ஷெட்ல்
மைசூரில் தொடங்கினோம். போனதும் `ஒரு வன் ஒருவன் முத லாளி' பாடலை
எடுத் தோம். இந்தப் பாடல் காட்சிக்காக லாரியில் குதிரைகள், குதிரை
வண்டி என ஏற்றிக்கொண்டு போயிருந்தோம்.
இந்தப் பாடல் காட்சியை பல இடங்களில் `ஷூட்' பண்ண விரும்பினேன்.
இதனால் கொஞ்சம் கொஞ்சமாக எடுப் போம். பாதிப்பாடல் முடிந்த நிலையில்
20 ஆயிரம் பேரை திரட்டி கிளைமாக்ஸ் காட்சியை எடுக்கத் தொடங்கினேன்.
இதையும், அந்த அப்பா கேரக்டர் சம்பந்தப்பட்ட காட் சிகளையும்
மொத்தம் 28 நாளில் எடுத்து முடித்தேன்.
இடையிடையே வித்தியாசமான இடங்களில் `ஒருவன் ஒருவன் முதலாளி' பாடலும்
தொடரும். இப்படி இந்தப் பாடல் காட்சி மட்டும் 7 நாட்கள் படமானது.
ஒரு கட்டத்தில் "இந்தப்பாட்டு இன்னுமா முடியலை?'' என்று ரஜினி சாரே
கூட ஆச்சரியப்பட்டார்.
66 நாட்களில் படம் தயார்
`குலுவாலியே முத்து வந்தல்லோ' பாடல் காட்சிகள் கேரளாவில் படமானது.
மொத்தப் படப்பிடிப்பும் 66 நாட்களில் முடிந்தது என்றாலும் குதிரை
சண்டைக்காட்சிகளை மட்டும் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் 16 நாட்கள்
எடுத்தார். படத்தில் அந்தக் காட்சியும் பரபரப்பாக
பேசப்பட்டது.முதல் ஷெட்லிலேயே கிளைமாக்ஸ் எடுத்தபோது ரஜினி சார்
ரொம்ப ஆச்சரியப்பட்டுப் போனார். `என் அனுபவத்தில் படத்தின்
தொடக்கத்திலேயே `கிளைமாக்ஸ்' காட்சி எடுத்தது நீங்கள்தான்'' என்று
கூறினார்.
அப்பா கேரக்டர் படமாகும்போது மட்டும், "என் இமேஜம் கெட்டுடாமல்,
ரசிகர்கள் பிரமிப்பா உணர்ற மாதிரி அந்த காட்சி இருந்தால் நல்லது''
என்று கூறினார். படத்தைப் பார்த்தபோது, "என் எதிர்பார்ப்புக்கு
மேலேயே அந்த அப்பா கேரக்டரை கொண்டு வந்துவிட்டீர்கள்'' என்று
மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்தப்படம் தமிழ்நாட்டில் பெரிய வெற்றி பெற்றதோடல்லாமல், ஒரு
வருடம் கழித்து ஜப்பானிலும் வெளியாகி அங்கும் மிகப்பெரிய வெற்றி
பெற்றது.
அங்கே `டான்சிங் மகாராஜா' என்ற பெயரில் வந்ததால், ரஜினி ஜப்பான்
ரசிகர்களின் `டான்சிங் மகாராஜா' ஆகிவிட்டார். இதன் பிறகு என்னை
சந்திக்கும் ஜப்பான் ரசிகர்கள் "நீங்கதான் டான்சிங் மகாராஜா
படத்தின் டைரக்டரா?'' என்று கேட்டு கை குலுக்கி
செல்வார்கள்.ரஜினியுடன் நடித்த நடிகை மீனாவும் ஜப்பானில் ரொம்ப
பிரபலமாகிவிட்டார். ரஜினி சாருக்கு ஜப்பானில் ரசிகர் மன்றமெல்லாம்
அமைத்து தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள். இது `முத்து' படம்
மூலமாக நடந்தது என்பதில் எனக்குப் பெருமை.''
இவ்வாறு டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் கூறினார்.
>>> Part 98
|