தி.மு.க - தமிழ்
மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு
டெலிவிஷனில் பிரசாரம்
1996 மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், தி.மு.க - தமிழ் மாநில
காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக ரஜினிகாந்த் டெலிவிஷனில் பிரசாரம்
செய்தார். அந்தக் கூட்டணி வெற்றி பெற்றது.
1996 மே மாதம் சட்டசபைக்கும், பாராளுமன்றத்துக்கும் தேர்தல்
நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு கட்சியும், ரஜினியின்
ஆதரவைப் பெற முயற்சி செய்து வந்தன.
ஆனால் ரஜினியோ, அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. தோற்கடிக்கப்பட
வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காக, அ.தி.மு.க.வுக்கு
எதிராக மற்ற கட்சிகளைக்கொண்டு கூட்டணி அமைக்க முயற்சி எடுத்தார்.
நரசிம்மராவ்
அந்த சமயத்தில் பிரதமராக நரசிம்மராவ் இருந்தார். அவரை ரஜினிகாந்த்
இரண்டு முறை சந்தித்துப் பேசினார். அ.தி.மு.க.வுக்கு எதிரான அணியில்
காங்கிரஸ் சேரவேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆனால், நரசிம்மராவ் பிடிகொடுத்துப் பேசவில்லை. அவர் அ.தி.மு.க.வுடன்
கூட்டு சேர விரும்பியதே இதற்குக் காரணம்.
நரசிம்மராவின் போக்கினால் ரஜினிகாந்த் விரக்தி அடைந்தார். எனவே,
இமயமலைச் சாரலுக்குச் சென்றார். சில நாட்களுக்குப்பின் சென்னை
திரும்பினார்.
"என்னுடைய படங்களை எந்தக் கட்சியும் பயன்படுத்தக்கூடாது. என்
ரசிகர்கள், தேர்தலில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை
தேர்தலுக்கு முன் அறிவிப்பேன்'' என்று அறிக்கை விடுத்தார்.
பின்னர், அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
காங்கிரஸ் உடைந்தது
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர்கள் ஜி.கருப்பையா மூப்பனார்,
ப.சிதம்பரம் ஆகியோர் டெல்லிக்குச் சென்று நரசிம்மராவை
சந்தித்தனர்."அ.தி.மு.க.வுடன் கூட்டு வேண்டாம். தேவையானால்,
தி.மு.க.வுடன் கூட்டு சேருவோம்'' என்று கூறினார்கள்.
ஆனால், நரசிம்மராவ் இதற்கு சம்மதிக்கவில்லை. வேட்பு மனு தாக்கல்
தொடங்கிய தினத்துக்கு மறுநாள், "அ.தி.மு.க.வுடன்தான் காங்கிரஸ்
கூட்டு சேருகிறது'' என்று அறிவித்தார்.
இது, தமிழ்நாடு காங்கிரசில் பெரிய பூகம்பத்தை உண்டாக்கியது.
அ.தி.மு.க.வுடன் கூட்டு சேருவதை விரும்பாத மூப்பனார், காங்கிரசில்
இருந்து பிரிந்து "தமிழ் மாநில காங்கிரஸ்'' என்ற புதிய கட்சியைத்
தொடங்கினார். காங்கிரசில் பெரும்பாலோர் இந்தப் புதிய கட்சியில்
சேர்ந்தனர்.
தி.மு.க.வுடன் கூட்டணி
அமெரிக்காவிலிருந்த ரஜினியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்கள்
டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார்கள்.
அமெரிக்காவில் இருந்தபடியே, தி.மு.க. தலைவர் கருணாநிதியுடனும்,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்களுடனும் டெலிபோனில் மாறி மாறி
பேசினார், ரஜினி.
இதன் மூலம், "தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி''
உருவாயிற்று.
டெலிவிஷனில் பிரசாரம்
1996 மே மாதம் சட்டசபைக்கும், பாராளுமன்றத்துக்கும் தேர்தல் நடந்தது.
அ.தி.மு.க - இ.காங்கிரஸ் ஓரணியாகவும், தி.மு.க - தமிழ் மாநில
காங்கிரஸ் ஓரணியாகவும் போட்டியிட்டன.
தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னால், டெலிவிஷனில் ரஜினிகாந்த்
தோன்றினார். அ.தி.மு.க - இ.காங்கிரஸ் அணியை தோற்கடிக்குமாறும்,
தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்குமாறும்
கேட்டுக்கொண்டார்.
தி.மு.க. கூட்டணி
இந்த தேர்தலில் தி.மு.க. 167 இடங்களில் வெற்றி பெற்றது.
தி.மு.க.வின் தோழமை கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் 39 இடங்களை
கைப்பற்றியது.
அ.தி.மு.க.வுக்கு 4 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பர்கூர் தொகுதியில்
போட்டியிட்ட ஜெயலலிதா தோல்வி அடைந்தார்.
புதிய மந்திரிசபையை தி.மு.க. அமைத்தது. 4-வது முறையாக, தமிழக
முதல்-அமைச்சராக கருணாநிதி பதவி ஏற்றார்.
(ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் - திங்கட்கிழமை)
***
ரஜினி `சுயதரிசனம்'
நான் அரசியலுக்கு வரவேண்டும் என்றோ, அரசியல்வாதியாக ஆகணும் என்றோ
எப்போதும் நினைத்துக்கூட பார்த்தது கிடையாது. திடீரென்று
அரசியலுக்கு வாங்க, வாங்க என்று சொன்னால், அதை என்னால்
ஏற்றுக்கொள்ள முடியாது.
எந்த ஒரு வேலையாகட்டும், காரியமாகட்டும், அதை ஒழுங்கா செய்யணும்;
கரெக்டா செய்யணும்னுதான் நான் நினைப்பேன். தனி ஒரு மனிதனால் எந்த
நாட்டையும் திருத்திவிட முடியாது. நம்ம நாட்டை திருத்தணுங்கிற
உணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் வரணும்.
- ரஜினிகாந்த். (12-12-1995)
>>> Part 99
|