Kumudam Magazine Interview - 2005
ரஜினி: (ஒரு புத்தகத்தை எடுத்துத் தருகிறார்) இந்தப் புத்தகம் பாருங்க, ‘நிவீtணீ ணீs வீt ஷ்ணீs’ பகவத்கீதையைப் பற்றிய உண்மைகளை விவரிக்கிற புத்தகம். ‘சந்திரமுகி’ படத்துல கூட இதை நான் படிக்கிறா மாதிரி ஒரு சீன் வரும்... கீதையில உண்மையில என்ன சொல்லியிருக்காங்கன்னு ரொம்ப அருமையா எழுதியிருக்காங்க.. அர்ஜுனன் போர்க்களத்துல ‘நம் நண்பர்கள், உறவினர் களையா கொல்வது?’ன்னு தடுமாறி நிற்கும் போது, கிருஷ்ணர் சொல்கிற அறிவுரை... ‘‘நீ இந்தக் காரணத்துக்காகப் பின் வாங்கினா... யாரும் அப்படி நினைக்க மாட்டாங்க. நீ பயந்துபோய் பின்வாங்கிவிட்டதாகத்தான் நினைப்பாங்க. உன்னைக் கோழைன்னு சொல்லுவாங்க. மரணத்தை விடக் கொடுமையானது கோழைத்தனம்!’ன்னு கிருஷ்ணர் கிட்டேயிருந்து அறிவுரை வரும்... அர்ஜுனனும் மனசு மாறுவான்... இதைப் படிச்சதும் எனக்கும் பொறி தட்டிச்சு.. ‘பாபா’ தோல்வியின் போது பலரும் என்னைப் பத்தி அப்படித்தான் பேசினாங்க. ஆக்சுவலா, பாபா’வுக்கு அப்புறம் என்னோட கலையுலகத் தொடர்ச்சியா வேறொரு திட்டம் வைச்சிருந்தேன். எதிர்காலத்துலயும் அதைத்தான் செய்யலாம்னு இருக்கேன்... ‘பாபா’வுக்கு அப்புறம் ஒருவேளை நான் அப்படிச் செய்திருந்தா, என் மேலயும் அப்படி ஒரு விமர்சனம் வரும்னு நினைச்சேன். சரி, முதல்ல ஒரு ‘ஹிட்’ கொடுப்போம்னு முடிவு பண்ணினேன்... ஆண்டவன் அருளால எல்லாமே நல்லபடியா முடிஞ்சுது.... அதுக்கு நான் கீதைக்குத்தான் நன்றி சொல்லணும்....’’
டாக்டர் ஜவஹர்: ‘சந்திரமுகி’யில எல்லாரையும் ரொம்பக் கவர்ந்தது அந்த ‘லக்கலக்க லக்கலக்க’ தான்! அந்த ஐடியா எப்படி வந்தது?
ரஜினி: அது ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான விஷயம். ஒரு முறை நேபாளத்துக்குப் போயிருந்தேன். காட்மாண்டுவைத் தாண்டி உள்ளே ஏதோ ஒரு மலைக்கிராமம்... காலார நடந்து போய்க்கிட்டிருந்தேன். திடீர்னு ஒரு பெரிய கூட்டம் எதிரே வந்தது. எல்லாரும் சத்தமா இந்த ‘லக்கலக்கலக்க’வை ஒரே மாதிரி, சத்தமா உச்சரிச்சாங்க. குலவைச் சத்தத்தை ‘ஹைபிட்ச்’ல கேட்டா மாதிரி ஆடிப்போச்சு! என்னன்னு விசாரிச்சா அந்தக் கூட்டத்துல பேய் பிடிச்சவங்க சில பேர் இருக்காங்களாம்... அந்த சின்னப் பேய்களை விரட்ட ஒரு பெரிய பேயைக் கூப்பிடறாங்களாம்.... ‘லக்கலக்கலக்க’ன்னு சொல்லிக் கூப்பிட்டா பெரிய பேய் வரும்னு அவங்களுக்கு நம்பிக்கை. அந்த ஸவுண்ட் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ‘யூஸ்’ பண்ணிக்கிட்டேன்.
டாக்டர் ஜவஹர்: சந்திரமுகிக்கு அடுத்தது என்னன்னு முடிவு பண்ணிட்டீங்களா?
ரஜினி: இப்ப, கொஞ்ச நாளைக்கு ரிலாக்ஸ்! நல்ல கதை இன்னும் கிடைக்கலை. எத்தனையோ கதைகள் கேட்கிறேன். எல்லாமே பாட்ஷா, படையப்பா ஸ்டைல்லயே வருது... புதுசா, வித்தியாசமான கதை அமைஞ்சதும் பண்ணலாம். உங்ககிட்டே உங்க அப்பா எடிட்டரோட சாயல் நிறைய இருக்கு... என்னால மறக்க முடியாதவர் எடிட்டர் எஸ்.ஏ.பி. சார்! நான் நடிக்க வந்த புதுசுல ‘இவன்கிட்டே என்னமோ இருக்கு’ங்குறதை நுணுக்கமா கவனிச்சு நிறைய எழுதியிருக்காரு... ஒருமுறை அரசு பதில்ல எழுதியிருந்தாரு, நல்லா ஞாபகம் இருக்கு... ‘பாலச்சந்தர் என்கிற ஊன்றுகோல் இல்லாமல் இவரால நிற்க முடியுமா?’ன்னு... என்னை ரொம்ப யோசிக்க வைச்ச பதில் அது... கொஞ்சநாள்ல ‘இவருகிட்டே நல்ல நடிப்பு இருக்கு’ன்னு எழுதினாங்க... ரொம்பப் பெரிய அங்கீகாரமா அதை நினைச்சேன்... கடின உழைப்புக்குக் கிடைச்ச பரிசா எனக்குத் தோணிச்சு!
டாக்டர் ஜவஹர்: அடிக்கடி ரிஷிகேஷ் பயணம் போறீங்க சார், வெளிநாடுகள்ல, இந்த ‘இன்னர் மைண்ட்’, ‘ஆத்மா’ன்னு சொல்றோமில்லையா, அந்தத் தத்துவம் அவங்களுக்குத் தெரியாது... நம்மோட இந்தியத் தத்துவங்கள்ல உள்மனசைப் பத்தின பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கு... அதைப் படிச்சு நானே வியந்து போயிருக்கேன்... உங்க ரிஷிகேஷ் பயணங்கள்னால அந்த அனுபவங்கள் நேரடியா ஏற்பட்டிருக்கா?
ரஜினி: ம்.... எத்தனையோ... எத்தனையோ சொல்லலாம்.... ரொம்ப பிரமிப்பான அனுபவங்கள்.. பதிமூணு வருஷமா தொடர்ந்து போய்க் கிட்டிருக்கேன்... டெல்லியிலேர்ந்து ரிஷிகேஷ் போகிற வழியில இமயமலைப் பகுதி தொடங்க ஆரம்பிச்ச உடனேயே மனசுக்குள்ள அந்த மாறுதல் தெரியும்... படிப்படியா நம் மனசுலேர்ந்து வழக்கமான சிந்தனைகள் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி, ஒரு செல்ஃப்லஸ் நிலைக்கு உடம்பும் மனசும் போகிறதை உணர முடியும்... அங்கே கங்கைதான் தாய்... இமயமலைதான் தந்தை... மேலே போகப் போக பெரிய அமைதி... கங்கை நதி ஓடும் சலசலக்கிற சத்தம் மட்டுமே கேட்கும். வாழ்க்கையில எதுவுமே உண்மை இல்லை, இதோ இந்த அமைதி தருகிற நிம்மதிதான் உண்மைன்னு புரியும்... அங்கே இருக்கிற மனிதர்களே அப்படித்தான்... ஒரு உதாரணம் சொல்றேன்... ரிஷிகேஷ் பக்கத்துல ஒரு சின்ன ஹோட்டல்... அங்கே சாப்பிட்டு விட்டு ஹோட்டல் பையன்கிட்டே நூறு ரூபாய் டிப்ஸ் கொடுத்துட்டுக் கிளம்பறோம்... ‘சார் சார்’னு பின்னாடியே மூச்சு வாங்க ஓடி வர்றான் அந்தப் பையன்!... கொஞ்ச தூரம் போன பின்னாடிதான் கவனிச்சேன்.... பதறிப்போய் வண்டிய நிறுத்தச் சொன்னேன்... பையன் ஜன்னல் கிட்டே வந்து, டிப்ஸ் கொடுத்த நூறு ரூபாயை நீட்டறான். ‘சாப்! நூறு ரூபா கொடுத்துட்டீங்க சாப்!... நூறு ரூபா!’ன்னு பதட்டமா சொல்றான்... வழக்கமா அவனுக்கு சில சில்லறைக்காசுதான் டிப்ஸா கிடைக்கும் போல... நூறு ரூபாயை நான் தவறுதலா கொடுத்துட்டேன்னு நினைச்சு ஓடி வர்றான்!... எத்தனை நேர்மை பாருங்க!... பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாத சிம்பிள் லைஃப்! அப்படியே நெகிழ்ந்து போய்ட்டேன்... இன்னும் ஒரு நூறுரூபாயைக் கொடுத்து ‘வைச்சுக்க ராஜா’ன்னு சொல்லி தட்டிக் கொடுத்து அனுப்பினேன்...
டாக்டர் ஜவஹர்: பல ரிஷிகளை அங்கே சந்திச்சிருப்பீங்க.. அதுல குறிப்பா ஏதாவது?
ரஜினி: ம்... ஒரு ரிஷி இருக்கிறார். அவரை யாரும் சந்திக்கிறதே கஷ்டம்னாங்க... யாருகிட்டேயும் பேச மாட்டாரு... பார்க்க மாட்டாருன்னாங்க.. ஒரு குகைக்குள்ளதான் வாழ்ந்துக்கிட்டிருக்காரு.. எப்படியோ கண்டுபிடிச்சு அந்த குகைக்குப் போனேன்... வாசல் முழுக்க ஏகப்பட்ட சிஷ்யர்கள்... ரொம்ப ஆச்சர்யமா எனக்கு அனுமதி கிடைச்சது... உள்ளே போனதும் பிரமிச்சிட்டேன்... ஆறடிக்கு மேல ஆஜானுபாகுவான கறுப்பு உருவம்... தீர்க்கமான பார்வை... எண்பது வயசுக்கு மேலன்னு சொன்னாங்க... நாற்பதுக்கு மேல சொல்ல முடியாதபடி திடகாத்திரம்!... என்னையே உற்றுப் பார்த்தாரு... என் மனசெல்லாம் உலுக்கிப் போட்ட பார்வை! கையில வெற்றிலை பாக்கு மாதிரி வைச்சு பிசைஞ்சுக்கிட்டிருந்தாரு... ‘வா’ன்னு கூப்பிட்டாரு... வெறும் சைகைதான்... கிட்டே போனேன்... என் கையில அந்த வெற்றிலையைக் கொடுத்தாரு... ஒரு சில வினாடிகள் மௌனம்! மறுபடி ‘போ!’ன்னு ஒரு சைகை! வெளியே வந்துட்டேன்... சிஷ்யர்களெல்லாம் என்னை சூழ்ந்துக்கிட்டு ‘‘என்ன பேசினாரு? ஏதாவது சொன்னாரா?’’ன்னு துளைச்சி எடுக்கிறாங்க...
ரொம்ப நாளைக்கு அப்புறம் அவர் சந்திச்ச முதல் ஆள் நான்தான்! அவர் ஏன் என்னை மட்டும் அனுமதிச்சாரு, ஏன் ஆசிர்வாதம் பண்ணினாருன்னு எனக்கு இப்ப வரைக்கும் புரியலை... இதைப் போன்ற ஏராளமான ரிஷிகள் இமயமலை பூரா நிறைஞ்சிருக்காங்க... வெறும் கங்கைத் தண்ணீரை, மூலிகைத் தண்ணீரை மட்டும் குடிச்சிட்டு, ஒரு குறையுமில்லாம இறைவனை நோக்கி வாழ்ந்துக்கிட்டிருக்காங்க... அந்த வைப்ரேஷன், காற்றுல கலந்திருக்கிற தெய்வீக மணம், பல அர்த்தங்களை உணர்த்துகிற அமைதி... இதையெல்லாம் உலகத்துல வேற எங்கேயுமே பார்க்க முடியாதுங்கிறது என் அனுபவம்... அதையெல்லாம் விட்டுட்டு மறுபடி இங்கேவந்தா பொல்யூஷன், சத்தம்... போதும்டாசாமின்னு ஆயிடுது...
டாக்டர் ஜவஹர்: நீங்க சொல்றதைக் கேட்கும்போது இப்பவே அங்கே போகணும்னு தோணுது... எதிர்காலத்துல வேற ஒரு திட்டம் வைச்சிருக்கிறதா நடுவுல சொன்னீங்க. அது என்னன்னு சொல்ல முடியுமா?
ரஜினி: அதுவும் கலையுலகம் சார்ந்த ஒரு பிளான்தான். புதுசா ஒரு விஷயம் பண்ணணும்னு நினைக்கிறேன்... கொஞ்சம் நுணுக்கமா, வித்யாசமாக ஒரு ஐடியா! அது சம்பந்தமா ரிஸர்ச் பண்ண நியூயார்க், லண்டன்னு வெளிநாடுகளுக்குப் போகலாம்னும்இருக்கேன்.
டாக்டர் ஜவஹர்: இன்னும் கொஞ்சம் விவரமா...
ரஜினி: அது சஸ்பென்ஸ்! (சிரிக்கிறார்) ஓ.கே. உங்ககிட்டே மட்டும் சொல்றேன்..
(ரஜினி சொன்னது ஆஃப் தி ரெகார்டு)
டாக்டர் ஜவஹர்: நீங்க வருஷத்துக்கு ஒரு தடவை ரிஷிகேஷ், இமயமலைக்குப் போறது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்! அந்த ‘ஐடியா’ முதல்ல எப்படி உருவாச்சு? அந்த ‘இன்ஸ்பிரேஷனை’க் கொடுத்தது யாருன்னு கொஞ்சம் விவரமாச் சொல்லுங்களேன்...
ரஜினி : அவர் ஒரு மிகப் பெரிய மகான்... இமயமலை பற்றிய உண்மைகளை எனக்கு உணர்த்தியவர்...
டாக்டர் ஜவஹர் : இமயமலை, ரிஷிகேஷ் பற்றி உங்களுக்கு முதன் முதல்ல இன்ஸ்பிரேஷன் எப்படி வந்தது?
ரஜினி : அதாவது... ஒரு நவரத்தினக்கல் இருக்குன்னா... அதை நவரத்தினக்கல்னு சொல்ல யாராவது இருக்கணும்... இல்லைன்னா அது அப்படிப்பட்ட கல்லுன்னே யாருக்கும் தெரியாது இல்லையா? அதுமாதிரிதான், நமக்குப் பல விஷயங்களை, உண்மைகளை உணர்த்திக் காட்டுகிறவரைத்தான் குருன்னு சொல்றோம். எனக்கு இமயமலை பற்றியும் அங்குள்ள ரிஷிகள், அங்கே கிடைக்கிற அபூர்வமான அமைதி, உணர்த்துகிற உண்மைகள்... இதைப் பற்றியெல்லாம் பல புத்தகங்கள், மகான்கள் மூலம் தெரிஞ்சுக்கிட்டேன்... பல மகான்களை நேரடியா சந்திச்சது, அவங்க ஆசீர்வாதம் பெற்றதெல்லாம் இப்ப நினைச்சுப் பார்க்கும்போது பிரமிப்பா இருக்கு.... இமயமலை பற்றிச் சொல்லணும்னா என்னுடைய முக்கியமான இன்ஸ்பிரேஷன் ‘லிவிங் வித் தி ஹிமாலயன் மாஸ்டர்ஸ்’ங்கிற புத்தகம். ஸ்வாமி ராமாங்கிற ஞானி எழுதிய புத்தகம்... (டெலிஃபோன் மூலம் தன் உதவியாளரை அழைத்து அந்தப் புத்தகத்தை எடுத்து வரச் சொல்கிறார்)
இந்த ஸ்வாமி ராமாங்கிறவர் இமயமலை பூரா அங்குலம் அங்குலமாச் சுற்றி வாழ்ந்தவர்... ரொம்பச் சின்ன வயசுலேயே பல குருக் களோட வழிகாட்டுதல்ல இமயமலையில வாழ்ந்தவர்... மடாலயங்கள்ல தத்துவங்களைக் கரைச்சுக் குடிச்சவர்... வாரணாஸி, லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்ஸிட்டின்னு படிச்சவர்... இருபத்திநாலாவது வயசுல கார்வீர் பீட சங்கராச்சார்யார் ஆயிட்டாருன்னா பார்த்துக்குங்க... ஆனா அவர் வாழ்க்கையில தேடல்கள் இருந்துக்கிட்டே இருந்தது... வெறும் சடங்குகள், சம்பிரதாயங்கள்ல அவருக்கு நம்பிக்கை இல்லை... ஒரு கட்டத்துல அந்தப் பதவியைத் துறந்துட்டு மறுபடி இமயமலைக்குத் திரும்பிட்டாரு... யோகா பிராக்டீஸ்! குகைக்குள்ள தன் குருகிட்டே மறுபடி பாடம்! அப்புறம் லண்டன் போய் மெடிக்கல் கன்ஸல்டண்ட்டா இருந்தாரு.... மாஸ்கோவுல பாராஸைக்காலஜி ரிஸர்ச்! இந்தியாவுக்குத் திரும்பி வந்து ஹோமியோபதி படிச்சாரு.... ரிஷிகேஷ்ல ஒரு ஆஸ்ரமம் அமைச்சாரு... அப்புறம் நம்ப தத்துவங்களையும், மேற்கத்திய தத்துவங்களையும் இணைச்சு சிந்திச்சாரு.... அமெரிக்காவுக்குப் போய் ‘இமாலயன் இன்ஸ்டிடியூட்’டை அமைச்சாரு... இன்னைக்கு அது பெரிய ஆலமரமா பரவியிருக்கு. மனிதன் தன்னைப் பற்றியே அறிந்து கொள்ளாத சக்திகள் எல்லாம் என்னன்னு ஸயிண்டிஃபிக்கா நிரூபிச்சுக் காட்டியிருக்காரு அவரு... மிகப் பெரிய மகான்!
(உதவியாளர் அந்தப் புத்தகத்தைக் கொண்டுவர அதைப் பிரித்துக் காட்டுகிறார்...)
ரஜினி: இந்தப் புத்தகத்தை முதன்முதல்ல படிச்சபோதுதான் எனக்கு இமயமலைக்குப் போகணும்... அங்கே இருக்கிற ‘டிவைன் பவரை’ அனுபவிக்கணும்னு தோணிச்சு...
டாக்டர் ஜவஹர் : முதல்முறை போயிட்டு வந்தபோது அந்த அனுபவம் எப்படி இருந்தது?
ரஜினி : பிரமாதமான அனுபவம்... அதாவது.... இமயமலை’ன்னா இப்ப டூரிஸ்ட் போறாங்களே அந்த மாதிரி ஈஸியான ஸ்பாட் இல்லை... ரொம்பக் கஷ்டப்பட்டு, உடலை வருத்திக்கிட்டுப் போகணும்... கரடுமுரடான பாதை, பாறாங்கற்கள் எல்லாமே இருக்கும்... ஆனா கொஞ்ச நேரத்துல யு வில் ஃபீல் தி டிஃபரன்ஸ்! அந்த செங்குத்தான மலைகள்ல ஏறும்போது உங்க பாதங்கள்ல ஒரு ‘யுனீக் அக்யூபங்ச்சர்’ எஃபக்ட்ஸ் கிடைக்குது... அது ஒரு மஸாஜ், எக்ஸர்ஸைஸ் மாதிரி.... உடம்புல எல்லா நரம்புகளும் சந்திக்கிற இடம் பாதம்தான்... இமயமலைப் பயணம் அந்தப் பாதத்துக்கு அருமையான எக்ஸர்ஸைஸ் தருது.... உடம்பும், மனசும் அப்படியே லேசாகி, ஃப்ரஷ்ஷா ஆயிடும்... முழுக்க வெஜிட்டேரியன் உணவுகள்தான். அந்த சுத்தமான கங்கைத் தண்ணீரைக் குடிச்சுக்கிட்டிருந்தாப் போதும்... உடம்பு ரொம்ப ஆரோக்கியமாயிடும்.
டாக்டர் ஜவஹர் : இந்தப் புத்தகத்துல குறிப்பிடும்படியா நீங்க படிச்சதைக் கொஞ்சம் சொல்லுங்களேன்.
ரஜினி : இமயமலை ஒரு பொக்கிஷம்னா அதைத் திறக்கிற சாவி இந்தப் புத்தகம்... சமஸ்கிருதத்துல ‘ஹிமா’ன்னா ‘பனி’ன்னு அர்த்தம், ‘ஆலயா’ன்னா ‘வீடு’ _ அதாவது ‘பனிவீடு’ன்னு சொல்லலாம்... இமயமலை ஒரு ஆன்மிக வீடு... அது எப்படின்னு விவரிக்குது இந்தப் புத்தகம்... இமாலயத்துல இருக்கிற கங்கைத் தண்ணீர்ல பாக்டீரியா கிடையாதுன்னு நிரூபிச்சிருக்காங்க... நான் சொல்றது ப்யூர் கங்கை.... மலையிலேர்ந்து இறங்கி வந்ததும் அதுவும் ‘பொல்யூட்’ ஆயிடுதுன்னு வைச்சுக்குங்க.... பட், இமாலயத்துல இருக்கிற ஒரிஜினல் கங்கைத் தண்ணீர் அற்புதமான மூலிகைகளோட கலவை.... அங்கே வாழறவங்களுக்கு தோல்நோய்களே வர்றதில்லை... மரணத்துக்கு முன்னாடிகூட கங்கைத் தண்ணீரை சாப்பிட்டு விட்டுத்தான் நிம்மதியா கண்ணை மூடுறாங்க... சத்யம், சிவம், சுந்தரம் இந்த மூணும் அங்கே உண்டு. அதாவது... உண்மை, முடிவில்லாத மீtமீக்ஷீஸீவீtஹ், அழகு... இது மூணும் அங்கே நிரந்தரம்... ஓக், பைன், தேவதாரு மாதிரியான மரங்கள், பழங்கள், செடி கொடிகள், மூலிகைகள்னு இயற்கையோட கொண்டாட்டம்!.. இமயமலையோட பிரமிப்பான ரகசியங்களை, அற்புதங்களை ரொம்ப நுணுக்கமா விவரிக்குது இந்தப் புத்தகம்...
டாக்டர் ஜவஹர் : இது எங்கே கிடைக்கும்? நானும் படிக்க விரும்பறேன்.
ரஜினி : ஒரு நிமிஷம்! (தன் உதவியாளரை அழைத்து மேலும் இரண்டு புத்தகங்களை எடுத்து வரச் சொல்கிறார்)
இதோ இந்த மூணு புத்தகங்களும் என்னோட ஃபேவரிட், ‘லிவிங் வித் தி ஹிமாலயன் மாஸ்டர்ஸ்!’ ‘ஆட்டோ பயாக்ரஃபி ஆஃப் எ யோகி’, ‘கீதா ஆஸ் இட் வாஸ்’ இவற்றை உங்களுக்கு என் அன்பளிப்பாகத் தர்றேன்... (மூன்றிலும் ‘காட் பி வித் அஸ்’ என்று எழுதி கையெழுத்திட்டுத் தருகிறார்)... படிச்சதும் பாருங்க, நீங்களும் வருஷா வருஷம் இமயமலைக்குக் கிளம்பிடுவீங்க... (பெரிதாகச் சிரிக்கிறார்).
டாக்டர் ஜவஹர் : ரொம்ப நன்றி. ‘சந்திரமுகி’யைத் தொடர்ந்து மேலும் பல வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்கள்...
|