Rajini comments about Rajini
வன்முறை
* என்னுடைய படங்களில் வன்முறைகள் இருக்கலாம். ஆனால், அநியாயத்துக்காக வன்முறையில் ஈடுபடுவது மாதிரியான காட்சிகள் இருக்காது. வன்முறையின் முடிவில், நடப்பது நல்லது என்கிற மாதிரிதான் காட்சிகள் இருக்கும்.
கடவுளே காரணம்
* சினிமாவில் என் வெற்றிக்கு காரணம் கடவுள்தான். அதோடு என் முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தன. கடவுளே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்று விட்டிருந்தால் நான் இன்னும் கண்டக்டராகவே இருந்திருப்பேன். அந்தச் சூழ்நிலையில், அந்த பத்திரமான உத்தியோகத்தை விட்டு விட்டு, தைரியமாக சென்னைக்கு வந்தது என் முயற்சிதான்.
கசந்த காலம்
* என்னோட வாழ்க்கையின் கசந்த காலம் என்றால் 1978-ல் இருந்து 1981-ம் ஆண்டு வரையிலான பகுதிதான். 34 வயதுக்கு உள்ளாகவே ஆண்டவன் எனக்கு எல்லாவித சந்தோஷங்களையும், எல்லாவித கஷ்டங்களையும் கொடுத்துவிட்டான். வாழ்க்கையில் கஷ்டம் என்றால் என்ன என்பதைப் பார்த்துவிட்டேன். சகல வசதிகளுடன் சுகம் என்றால் என்னவென்றும் பார்த்துவிட்டேன்.
நான் போகும் பாதை
* ஒவ்வொருவரும் தன்னைத் திருத்திக்கொண்டால், உலகம் தானாகவே திருந்திவிடும். அதன்படி நான் முதலில் என்னைத் திருத்திக் கொள்கிறேன். என் மனச்சாட்சியின்படி வாழ்கிறேன். மற்றவர்களை திருத்துவது என் பிரச்சினை அல்ல. நான் யாருடைய பாதையிலும் போகமாட்டேன்; மற்றவர்களை என் பாதைக்கு கூப்பிட மாட்டேன்.
பாவத்தின் சம்பளம்
* போன பிறவியில் நிறைய தப்பு பண்ணினவங்களுக்கு ஆண்டவன் இந்தப் பிறவியில் நிறைய குழந்தைகளை கொடுத்திடறான். இன்னும் கொஞ்சம் அதிகமா தப்பு பண்ணினவங்களுக்கு, பணம், புகழ் இரண்டையும் கொடுத்திடறான். அதைவிட அதிகமா தப்பு பண்ணினவங்களைத் தூக்கி அரசியலில் போட்டுடறான்! நான் இரண்டாவது ரகம் போல இருக்கு.
உழைப்பு
* எல்லோரும் உழைக்கிறாங்க. நானும்தான் உழைக்கிறேன். மற்றபடி நான் ஒருத்தன் மட்டும் ஸ்பெஷலா உழைக்கலையே! ஒருவேளை, மத்தவங்களைவிட, எனக்கு ஆண்டவனோட ஆசீர்வாதம் கூடுதலா இருக்கலாம்.
|