Rajini chats with Sivakumar in 80's
சில ஆண்டுகளுக்கு முன், சினிமா பத்திரிகைக்காக, ரஜினியும், சிவகுமாரும் சந்தித்துப் பேசினார்கள்.
அவர்களின் உரையாடலில் இருந்து சில பகுதிகள்:-
ரஜினி:- ஞாயிற்றுக்கிழமைகளில் வர்ற ரசிகர்களை மீட் பண்றதை வழக்கமா வெச்சிருக்கேன். இன்னிக்கு இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை. இப்பவும் வாசல்ல கூட்டம் இருக்கு. பீச்சுல `ஜாகிங்'போது பார்த்தோம் இல்லியா?
சிவகுமார்:- ஆமாம், இப்பவும் `ஜாகிங்' பண்றீங்களா?
ரஜினி:- வீட்லயே பண்றேன். இப்ப வீடியோ காசட் ஒண்ணு வந்திருக்கு. அதைப் போட்டோம்னா அவங்க சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருப்பாங்க. பீச்சுல போறதுல என்ன அட்வான்ட்டேஜ்னா ப்ரெஷ் ஏர் கிடைக்கும். ஆனா நாலரைக்குள்ள அங்க இருக்கணும். கொஞ்சம் லேட்டாயிடிச்சின்னா கூட்டம் வந்து தொந்தரவு ஆயிடும். மூணு ஆம்பிளைப் பசங்களா உங்களுக்கு?
சிவகுமார்:- இரண்டு பையன், ஒரு பொண்ணு. அது சிஸ்டமாடிக்தான்!
ரஜினி:- எல்லாமே பிரின்சிபிள்ஸ்... அது, இது எல்லாமே! முதல் படத்துல உங்களைப் பார்த்தப்போ எப்படி இருந்தீங்களோ அப்படியே இருக்கீங்க. எனக்குச் சில சமயம் ரொம்ப ஆச்சரியமாயிருக்கு.
சிவகுமார்:- நீங்க மட்டும் என்னவாம்?
ரஜினி:- நான் கொஞ்சம் கொஞ்சம். முடியெல்லாம் வெள்ளையாயிட்டே வருது.
சிவகுமார்:- அது எல்லாருக்கும் ஆயிட்டுதான் வருது. அது கணக்கில்லை.
பண்ணின ரோல்கள்ல ஆத்ம திருப்தித் தந்த மாதிரி ஏதாவது?
ரஜினி:- `புவனா ஒரு கேள்விக்குறி' ரொம்ப நல்ல ரோல் அது. உங்களுக்கே தெரியும். நீங்களே எவ்வளவோ சொல்லிக் குடுத்தீங்க. அப்புறம் ரொம்பவும் என்ஜாய் பண்ணி செஞ்ச ரோல் `ஆறிலிருந்து அறுபதுவரை', `எங்கேயோ கேட்ட குரல்'
சிவகுமார்:- எந்த மாதிரி படங்கள் பண்றது உங்களுக்குத் திருப்தியா இருக்கு?
ரஜினி:- எண்டர்டெயின்மெண்ட் வித் ஸம் மாரல்.
சிவகுமார்:- இப்ப நீங்க செய்யற படங்கள்ல அதைச் செய்ய முடியுதா?
ரஜினி:- முடியலை. நிச்சயமா முடியலை. அதுதான் ரொம்பக் கஷ்டமா இருக்கு. ஹீரோயிசம் பண்ணிக்கிட்டு சூப்பர்மேன் மாதிரி பத்துபேரை அடிக்கிறது, இதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு.
சிவகுமார்:- எண்டர்டெயின்மெண்ட் படங்கள் பண்ணாம இருக்க முடியாது. நீங்களே சில நல்ல படங்களுக்கு இன்ஸிஸ்ட் பண்ணலாமே? அந்த பொஸிஷன்ல நீங்க இருக்கீங்களே?
ரஜினி:- நான் செஞ்சுக்கிட்டுதான் இருக்கேன். பொதுவா டிஸ்ட்ரிப்ïட்டர்ஸ் நாலு சண்டை நாலு டான்ஸ் இப்படி இன்ஸிஸ்ட் பண்றாங்க. படம் நல்ல விலை போகுது. அதனால பண்ணித்தான் தீரணும். எல்லாத்தையும் மீறி வருஷத்துக்கு ஒரு நல்ல படமாவது பண்றேன்.
சிவகுமார்:- சில சமயங்கள்ல ஆடியன்ஸ் ரொம்ப கீழே போயிடறாங்க. அவங்களோட டேஸ்ட்டையும் பார்த்துக்கிட்டு சினிமா மூலமா அவங்க ரொம்ப கீழே போயிடாம பார்த்துக்கிற கடமையும் நமக்கு இருக்கு. எம்.ஜி.ஆர். படங்கள்ல அந்த பிராப்ளமே வந்ததில்லை. டயலாக்ஸ்ல நீங்க கொஞ்சம் ஸ்பீடை குறைச்சுக்கணும் ரஜினி. சண்டைக் காட்சிகள்ல காட்டற ஸ்பீட், டயலாக்குலேயும் வந்துடுதுபோல இருக்கு.
ரஜினி:- ரொம்ப டிரை பண்ணி, ஸ்பீடை குறைக்க முயற்சி பண்றேன். ஆனாலும் `டேக்'னு கிளாப் அடிச்சதும், அந்த ஸ்பீட் வந்துடுது. பிகினிங் ஸ்டேஜ்ல தமிழ் சரியா தெரியாததுனால இந்தியில் `பொயிட்ரி' மாதிரி எழுதி வெச்சுக்கிட்டு பை-ஹார்ட் பண்ணிடுவேன். கிளாப் அடிச்சவுடனே மடமடன்னு சொல்லிடுவேன். மனப்பாடம் பண்றதுனால நடுவுல நின்னு போனா ஆபத்தாயிடுமே. அதுவே பழகிப்போச்சு. இந்தியிலயும் ஸ்பீடாத்தான் பேசிட்டிருக்கேன்.
சிவகுமார்:- `வீரபாண்டிய கட்டபொம்மன்' மாதிரி ஒரு ரோல் பண்ணணும்னு நான் ஆசைப்பட்டதுண்டு. அந்த மாதிரி ஏதாவது `எய்ம்' உங்களுக்கு உண்டா?
ரஜினி:- ஷூட்டிங் டயத்துலதான் ஆக்டிங் பத்தியே நினைக்கிறேன். வெளியே வந்த பிறகு நினைக்கக்கூட மாட்டேன். ஆரம்பத்துலேர்ந்தே அப்படித்தான். மேக்கப் போட்டு, டிரஸ் போட்ட அப்புறம்தான் புதுசா இதுல என்ன மேனரிசம் பண்ணலாம்னு யோசிப்பேன்.
சிவகுமார்:- குழந்தைக்குன்னு தனியா நேரம் ஒதுக்குறீங்களா?
ரஜினி:- அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. போகும்போது வரும்போது கொஞ்சறதோட சரி.
சிவகுமார்:- வீட்ல, மனைவியை கோவிச்சுக்கிறது உண்டா?
ரஜினி:- இல்லை, சிவா.
சிவகுமார்:- நான் ரொம்ப கோவிச்சுக்குவேன். அதனால கேட்டேன். `நீங்க என்னங்க, இன்னிக்கு கோவிச்சுக்காமயே போயிட்டீங்களே'ன்னு கேட்கிற அளவுக்கு கோபம் வரும். நீங்க பெங்களூர் போனீங்கன்னா, உறவினர்கள் தவிர வேறு யாரைப் பார்ப்பீங்க?
ரஜினி:- போனவுடனேயே ஈவினிங் ஒரு ஹோட்டல்ல ரூம்போடுவேன். ஒரு ஏழெட்டு பிரெண்ட்ஸ் இருக்காங்க. எல்லோரையும் வரச்சொல்லி அரட்டை அடிச்சிக்கிட்டு இருப்பேன். எல்லாம் என்னோட பழைய பிரெண்ட்ஸ். வீட்டுல தங்க முடியாது. அங்கேயும் கூட்டம் வந்திடும்.
சிவகுமார்:- உங்க படங்களைத் தியேட்டர்ல ஜனங்களோட பார்த்த அனுபவம் உண்டா? உங்க நடிப்பை ஜனங்க எப்படி ரசிக்கிறாங்கன்னு எப்படித் தெரிஞ்சுக்கறீங்க?
ரஜினி:- முதல் படத்துக்குப் போயிருந்தேன். அவ்வளவுதான். அப்புறம் நேரமே கிடைக்கலை. உண்மையிலேயே டைம் கிடைக்கலை. ஓரளவு பிரிவிïவிலேயே ஒரு ஒப்பீனியன் கிடைச்சிடும்.
இப்ப நான் காலை 9 முதல் மாலை 6 மணி வரை ஒர்க் பண்றேன். சண்டேஸ்ல ஒர்க் பண்றதில்லை. முந்தியெல்லாம் ஒரு படத்துக்கு 18 நாள்தான் குடுப்பேன். அதுக்கப்புறம் 28 நாள் தந்தேன். டப்பிங்குக்கு தனியா டேட்ஸ் தரமாட்டேன். அதுக்குள்ளயே அவுங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். இப்ப இன்னும் சவுகரியமா பண்ணிக்கணும்னு 28 அல்லது 40 நாள் தர்றேன். ரொம்ப அவசியப்பட்டா சாயந்திரம் ஏழிலிருந்து 10 வரை நடிப்பேன். இல்லேன்னா ரெண்டு நாள் வெச்சுக்கலாம்னு சொல்லிடுவேன்.
பணம் இருக்கும். அதை என்ஜாய் பண்ண ஹெல்த் இல்லேன்னா என்ன பிரயோஜனம்?
சிவகுமார்:- சாப்பாடு விஷயத்தில் நீங்கள் எப்படி?
ரஜினி:- அரிசி, தயிர் இந்த மாதிரி சமாச்சாரங்கள் ரொம்ப கமëமி. சப்பாத்தி சாப்பிடுவேன். அசைவம் ரொம்ப குறைவு. சிக்கன் கூட வீட்டில் பண்ணினா சாப்பிடுவேன். அப்புறம், வீட்டுலே ரொம்ப கஷ்டமா இருக்குன்னு சொன்னதால் விட்டுட்டேன். நிறைய ஜுஸ் சாப்பிடுவேன். நல்லா சமைச்சா வெஜிடேரியனைவிட நல்ல உணவு எதுவுமே இல்லை. சிவா! பல விஷயங்களில் நீங்கதான் எனக்கு வழிகாட்டி. கால்ஷீட் கொடுக்கிறது, படம் `கமிட்' பண்றது எல்லாமே பக்காவா இருக்கும். அதைத்தான் நான் பின்பற்றுகிறேன்.
சிவகுமார்:- ஒரே ஒரு படம் தவிர, நான் ஒத்துக்கொண்ட படங்கள் எக்காரணத்தினாலேயும் நின்றுபோனதில்லை. கடைசி நேரத்திலே என் சம்பளத்தை விட்டுக்கொடுத்துக்கூட, படத்தை முடிச்சுக் கொடுத்திருக்கிறேன்.''
இப்படி சிவகுமார் கூறியதும், "பேசிக்கொண்டே இருந்தோம்னா சாப்பாடு எப்போ? சாப்பிடப் போகலாமா?'' ரஜினி கேட்டார்.
இருவரும் சாப்பிட எழுந்தனர்.
|