Rajini shares his view about his spirituality
"விபூதி பூசிக்கொள்வதை வைத்து, என்னை இந்து என்று கூறுவதில் அர்த்தம் இல்லை. என்னுடைய கடவுளுக்கு மதம் கிடையாது'' என்று ரஜினிகாந்த் கூறினார்.
ஆன்மீகம் பற்றியும், தனது விருப்பு வெறுப்புகள் குறித்தும் தன்னுடைய கருத்துக்களை ரஜினிகாந்த் பல்வேறு சந்தர்ப்பங்களில் கட்டுரைகளிலும், பேட்டிகளிலும் தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது:-
"சின்ன வயசிலே ஆன்மீகத்திலே எனக்கு நிறைய சந்தேகங்கள் வரும். அப்போதெல்லாம் அந்த சந்தேகங்களை என் அப்பாக்கிட்டே சொல்லி விளக்கம் கேட்பேன்.
`எல்லோருமே மனுஷங்கதானே? அப்புறம் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதின்னு பேதம் ஏது? இந்தப் பழக்கம் ஏன் வந்துச்சு... தேவையா...? அது ஏன்...? இது ஏன்...?'
இப்படி நிறைய கேள்விகளை அப்பாக்கிட்டே கேட்பேன். அப்பாவும் பதில் சொல்லுவாரு. ஆனா அந்தப் பதில்களிலே எனக்கு
திருப்தியிருக்காது.அப்பாக்கிட்டே மட்டுமில்லாம பெரிய அண்ணன்கிட்டே, அக்காகிட்டே... இப்படி எல்லார்கிட்டேயும் நான் இந்த மாதிரியான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தேன். அவங்க பதில்கள்லே எனக்கு திருப்தி கிடைக்கவில்லை.
வீட்டிலே அடிக்கடி கோவிலுக்குப்போய் வருவாங்க. `இன்னது பண்ணினா இன்னது செய்வேன்'னு சொல்லி சாமிக்கு நேர்த்தி வைப்பாங்க. அது, அது நடந்தா உடனே அந்த நேர்த்தியை `பயபக்தி'யோட செய்வாங்க. என்னடா இது சாமிக்கே `லஞ்சம்' கொடுக்கிறாப்பல இருக்கேன்னு நான் யோசிப்பேன். அவங்ககிட்டே கேட்கவும் செய்வேன்.
அவங்க "அது... அது... அப்படித்தாண்டா... காரணம் கேட்காதே...'' என்று சொல்லுவாங்க. மதம் சம்பந்தமா... கடவுள் சம்பந்தமா... சமுதாயம் சம்பந்தமா... நான் கேள்வி கேட்கிறப்ப எல்லாம் இதேபாணி பதில்தான்.
என் கேள்விகளுக்கு வீட்டிலே யாராலும் சரியா பதில் சொல்ல முடியலே.
ஆனா... நான் பாட்டுக்குக் கேள்விகள் கேட்டுக்கிட்டே இருந்தேன்.
`உன்னோட கேள்விக்கெல்லாம் சரியான பதில் கிடைக்கிற இடத்திலே உன்னைச் சேர்த்து விடறேன்னு சொல்லி, என்னைக் கூட்டிட்டுப்போய் ராமகிருஷ்ணா ஆசிரமப் பள்ளியிலே பெரிய அண்ணன் சேர்த்துட்டாங்க.
ஆசிரமப் பள்ளியிலே சேர்ந்ததுக்கு அப்புறம்தான் நான் படிப்படியாக ஆன்மீகவாதியா மாற ஆரம்பிச்சேன்.
முன்னாடி கஷ்டத்தை, கஷ்டமாகவே பார்த்து வந்த எனக்குப் பெரிய பெரிய கஷ்டங்களைக்கூட சுலபமா ஏத்துக்கிற பக்குவம் வந்தாச்சு. ஆமா... எல்லாத்தையுமே ஈசியா எடுத்துக்கிட்டேன்.
`இந்த உலகத்துலே எதுவும் சாஸ்வதம் இல்லை. நாம இப்ப அனுபவிச்சுக்கிட்டிருக்கிற சொத்து, சுகம், பதவி, பந்தம், பாசம்... ஏன் இந்த உடம்பே சாஸ்வதம் கிடையாது அப்படீங்கிற ஞானம் அப்பத்தான் எனக்கு வந்துச்சு.
அதனாலதான் யாராச்சும் என் வயசைப்பற்றி கேட்கறப்போ, `என்னோட உடம்புக்கு இத்தனை வயசு'ன்னு சொல்றேன். 1950-ல் பொறந்த உடம்பு இது. உடம்புக்குத்தான் வயசு, எனக்கு வயசு கிடையாது. அதாவது ஆத்மாவுக்கு வயசேது?
`ஆன்மீகவாதி என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் அசைவ உணவு சாப்பிடலாமா?' என்று சிலர் என்னிடம் கேட்கிறாங்க.
ஆன்மீகவாதியா இருந்தால் அசைவமாக இருக்கக் கூடாதுன்னு யார் சொன்னாங்க? ஒருத்தன் என்ன சாப்பிடறான்கிறது முக்கியம் இல்லை. அவன் எப்படி வாழறான்கிறதுதான் முக்கியம். இவனால அடுத்தவங்களுக்கு உபகாரமா இருக்க முடியுமா? இல்லை உபத்திரவமாக இருக்கானா அப்படிங்கிறதை வைச்சுத்தான் அவன் ஆன்மீகவாதியா, இல்லையான்னு முடிவு பண்ணனும்.
அன்பும் மனிதநேயமும் மட்டுமே ஒருத்தனை ஆன்மீகவாதியா நமக்கு அடையாளம் காட்டுது.
`எம்மதமும் சம்மதம் என்று கூறும் நíங்கள், இந்து மதம் சொல்கிறபடி விபூதி பூசிக்கொள்ளலாமா?' என்று சில பேர்
கேட்கிறாங்க.சின்னவயதிலிருந்தே எனக்கு ஏற்பட்ட பழக்கம்தான் விபூதி பூசறது. அதனால இன்னிக்கும் நான் விபூதி பூசிக்கிறேன். விபூதிப் பூசிக்கிறதை வைச்சுக்கிட்டு, நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன்னு குற்றம் சொல்றதிலே எந்த அர்த்தமும் இல்லை. ஏன்னா என்னோட கடவுளுக்கு மதம் கிடையாது.
உலக அமைதிக்காகவும், மனித சமாதானத்துக்காகவும் நான் மத சமரசத்தை வரவேற்கிறேன். ஆனா தனிப்பட்ட ஒரு மதத்தின் மேலே `வெறி' கொள்றதை - அந்த மதத்துக்காகச் சார்ந்து பேசறதை நான் என்னிக்குமே விரும்பினதில்லை.
இன்னிக்கு இருக்கிற துன்பங்களுக்கெல்லாம் என்ன காரணம்னு நாம நினைச்சுப் பார்க்கிறோமா? ஆசை... யெஸ் அதுதான் எல்லா வகையான கஷ்டங்களுக்கும் காரணம்.
போதுங்கிற மனமே பொன் செய்யும் மருந்து. இருக்கிறதிலே திருப்தி கண்டாலே போதும். அதுதான் உண்மையான இன்பம். இருக்கிறதை விட்டுப்புட்டு பறக்கிறதைப் பிடிக்க நினைக்கிறப்போதான் ஏமாற்றமும் விரக்தியும் மிஞ்சுது.
எதிர்காலத்தைப் பற்றிய கவலையிலேயே நிகழ்காலத்தை இழந்துக்கிட்டிருக்கோம். நாளைக்கு என்ன நடக்குமோ? எப்படி சமாளிக்கப் போறோமோ... இப்படி பயந்தே வாழ்க்கையில எந்த நாளையுமே முழுசா அனுபவிக்காம விட்டுடறோம்.
கனவிலே இரண்டு வகை. ராத்திரியிலே காண்றது ராத்திரி கனா. பகல்லே காண்றது பகல் கனவு.
இப்ப நாம வாழ்ந்துக்கிட்டிருக்கிற வாழ்க்கைப் பகல்கனவு. பணம், பொருள், புகழ், பதவி... இதெல்லாம் அந்தப் பகல் கனவோட அஸ்திவாரங்கள். ஆனா சாஸ்வதம் இல்லாத... சட்டுனு கலைஞ்சுப் போயிடக்கூடிய அஸ்திவாரங்கள்.
யெஸ். இன்னும் 25 வருஷம் கழிச்சு, உங்க பழைய வாழ்க்கையை நினைச்சுப் பார்த்தா 25 வருஷங்கறது 25 நிமிஷமா நமக்குத் தெரியும்.
நான் நடிக்க வந்தப்போ சிவாஜி சார் நடிச்சுக்கிட்டிருந்தாரு. ஜெய்சங்கர் நடிச்சுக்கிட்டிருந்தாரு. அதுக்கப்புறம் இரண்டு தலைமுறை நடிக்க வந்திருக்கு. ஆனா எனக்கு நேத்துதான் `அபூர்வ ராக'ங்களில் நடிச்சேன்கிற மாதிரி பீலிங்.
எல்லாமே கனவு... பகல் கனவு. வேகமா ஓடி வேகமா மறைஞ்சுடும். அதுக்காக எதுவுமே இங்கே சாஸ்வதம் கிடையாதுன்னு சொல்லிக்கிட்டு யாருமே சும்மா உட்கார்ந்திடக்கூடாது.
அவங்க அவங்க தங்கள் தங்கள் கடமைகளை ஒழுங்கா செய்யணும். இதை நான் சொல்லலை. பகவானே கீதையிலே சொல்லியிருக்காரு. `கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே'ன்னு.
இன்னிக்கு இருக்கிறவங்கள்ல நூற்றுக்கு தொண்ணூறு பேர், பணம் சம்பாதிக்கணும்ங்கிறதை மட்டுமே நோக்கமா கொண்டிருக்காங்க. இவங்கள்லே யாருமே மனுஷங்களைச் சம்பாதிக்கணும்னு நினைக்கிறதே இல்லை. இது ஏன்னு எனக்குப் புரியலை. நம்ம வாழ்க்கையிலே எத்தனை ஆயிரங்களைச் சம்பாதிச்சிருக்கோம்... சம்பாதிக்கப் போகிறோம்கிறது முக்கியம் இல்லை. எத்தனை மனுஷங்களைச் சம்பாதிச்சிருக்கோம்கிறதுதான்
முக்கியம்.''இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.
|