Rajini shares his view about Tamil People
"தமிழக மக்களுக்கு இருக்கிற மனித நேயமும், கருணையும் உலகில் வேறு எவருக்கும் கிடையாது'' என்று ரஜினிகாந்த் கூறினார்.
அவர் ஒரு கட்டுரையில் எழுதியிருப்பதாவது:-
"கஷ்டப்படுகிறவர்களுக்கு, துன்பம் அனுபவித்தவர்களுக்கு ஆண்டவன் ஒருநாள் உதவாமல் போகமாட்டான். எப்பொழுதுமே கஷ்டப்படட்டும் என்று யாரையும் ஆண்டவன் கைவிட்டுவிட மாட்டான்.
ஆரம்பத்திலிருந்து கடைசிவரை கஷ்டப்பட்டே வாழ்ந்து செத்தவர்கள் இந்த உலகத்தில் யாரும் கிடையாது. அதேபோல, பிறந்த தேதியிலிருந்து இறுதிவரை சந்தோஷத்துடனே வாழ்ந்து மடிந்தவர்களும் கிடையாது. அப்படி இருக்கவும் முடியாது, இருக்கவும் கூடாது, இருப்பதும் கிடையாது. அதுதான் இயற்கை.
இயற்கை என்று சொல்லும்போது, அதில் பல அம்சங்களும் அடங்கியிருக்கும். கஷ்டம் - சுகம்; பாவம் - புண்ணியம்; நல்லவர்கள் - கெட்டவர்கள்... என்று பலவகையான அனுபவங்களும் கொண்டதுதான் இயற்கையின் போக்கு.
வாழ்க்கையில் கஷ்டத்தையும் ஓரளவாவது அனுபவித்தால்தான் சுகத்தின் பலன் நமக்கு முழுமையாகக் கிட்டும்.
நீங்கள் ஓர் ஏர்கண்டிஷன் ரூமிலேயே தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால், அதனுடைய அருமை அவ்வளவாகத் தெரியாது. ஆனால் சிறிது நேரம் வெயிலில் இருந்துவிட்டு, அதன் பிறகு "ஏ.சி'' ரூமுக்குப் போனால் அப்பொழுது அதன் அருமை நன்றாகவே தெரியும்.
ஆகையால்தான், மனிதர்களின் இந்த இயல்பை அறிந்த ஆண்டவன் கஷ்டம், சுகம் இரண்டையுமே வாழ்க்கையில் சேர்த்தே வைத்திருக்கிறான்.
நமக்கு சுகமான அனுபவங்கள் வரும்போது, நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கஷ்டமான அனுபவங்கள் நேரிட்டால், மிகவும் வெறுத்துப் போய்விடுகிறோம்.
இப்படிப்பட்டவர்களை ஆண்டவனுக்குப் பிடிக்காது என்று நான் நினைக்கிறேன். இதனால்தான் சில பேருக்கு சில நேரங்களில் ஆண்டவனின் அருள் கிட்டுவதில்லையோ என்றுகூட எனக்குத் தோன்றுகிறது. சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.
வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமான விஷயமல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு இன்பம் கிட்டும்பொழுது அது நிலையானது அல்ல என்ற உணர்வு நம்முள் இருந்தால், நாம் அடக்கத்துடன் அந்த இன்பத்தை அனுபவிப்போம்.
அதேபோல், கஷ்டம் வரும்பொழுது அதுவும் நிலையானதல்ல என்று நாம் உணர்ந்து கொண்டால் அந்த கஷ்டத்தின் சுமை தாங்க முடியாமல் அப்படியே நொந்து போய் நொறுங்கிவிட மாட்டோம். வாழ்க்கையில் இரண்டும் கலந்துதான் இருக்கும். அதுதான் நல்லதும்கூட.
ஒரு விஷயத்தை நாம் அனைவருமே தெரிந்து கொள்ளவேண்டும். மற்ற கஷ்டங்களோடு ஒப்பிடும்போது பணக்கஷ்டம் - அதாவது பணம் இல்லை என்கிற கஷ்டம் பெரிய கஷ்டமே இல்லை.
சின்ன வயதிலேயே நமக்கு மிகவும் வேண்டியவர்கள் இறந்து போவது, சரியான நேரத்தில் நல்ல இடத்தில் கல்யாணம் செய்து நன்றாக வாழமுடியவில்லை என்கிற நிலை; நமது குழந்தைகள் முறையாக வளரவில்லை என்ற குறை, நமக்கு மிகவும் வேண்டியவர்களிடமே ஏற்பட்டுவிடுகிற மனஸ்தாபங்கள்; நமக்கு மிகவும் பிடித்தவர்களே நம்மை ஏமாற்றி விடுகிற நிலைமை... போன்ற கஷ்டங்கள் நம்மை மிகவும் பாதிக்கக்கூடியவை.
நான்கூட முன்பெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தது உண்டு. பணம் இருந்தால், எந்த துன்பம் வந்தாலும் தாங்கிக்கொண்டுவிட முடியும் என்று. ஆனால், அப்படி இல்லவே இல்லை என்பதை நான் உணர்ந்துவிட்டேன். பணம் இல்லையே என்ற கஷ்டம் கொஞ்சம்தான் வேதனையைத் தரும். ஆனால், நான் மேலே குறிப்பிட்ட மாதிரி நிலைமைகள்தான் நமக்கு அதிக வேதனையைக் கொடுக்கக்கூடிய கஷ்டங்கள்.
பிரச்சினைகள் வரும்போது அது பணப்பிரச்சினையோ அல்லது மனநிலையைப் பாதிக்கக்கூடிய வேறு ஏதாவது பிரச்சினையோ - என்ன சம்பவங்கள் நடந்தாலும், அதனால் உடனே மனம் உடைந்து அந்தக் கஷ்டத்தின் சுமையைத் தாங்க முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டு வாழ்வதில் அர்த்தமில்லை. அந்த கஷ்டத்தை தீர்க்க உடனடியாக முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். எப்படி தீர்வு காணமுடியும் என்று யோசிக்க வேண்டும்.
அந்த பிரச்சினை எப்படி உருவானது? ஏன் உருவானது? யாரால் உருவானது? அதில் நம் தவறு என்ன? என்றெல்லாம் தீர ஆராய்ந்தால், பிரச்சினை உருவானதற்கான காரணம் தானாகப் புரிந்துவிடும்.
தவறு நம்முடையதாக இருந்தால் மன்னிப்புக் கேட்க வேண்டும். மற்றவர்களுடையதாக இருந்தால் அதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். ஒரு பொய் சொன்னால் அதை மறைப்பதற்கு நூறு பொய்கள் சொல்ல வேண்டி வருவது போல - ஒரு கஷ்டத்தை நிவர்த்தி செய்வதில் உடனே கவனம் செலுத்தாவிட்டால், அதைத் தொடர்ந்து மேலும் மேலும் பல கஷ்டங்கள் உருவாகிவிடும்.
ஒன்றை மட்டும் திட்டவட்டமாகச் சொல்கிறேன். ஆண்டவன் எங்கேயும் இல்லை. மக்களுடைய இதயத்தில்தான் - மனதில்தான் இருக்கிறார்.
நான் எத்தனையோ வெளிநாடுகளைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். உலகத்தின் பல பாகங்களையும் சுற்றி வந்திருக்கிறேன். தமிழக மக்களுக்கு இருக்கிற மனித நேயம், கருணை, அந்த மனித இயல்பு வேறு யாருக்கும் எங்கேயும் கிடையாது. அதனால்தான் நம்முடைய தமிழ்நாட்டை "வந்தவரை வாழ வைத்த தமிழகம்'' என்று சொல்கிறார்கள்.
ஒருவனிடம் திறமை இருந்து, நல்ல எண்ணம், நல்ல மனிதத் தன்மையும் இருந்தது என்று சொன்னால் அவனுடைய மொழி பற்றியோ, சாதி பற்றியோ, எதைப்பற்றியும் தமிழக மக்கள் கவலைப்பட மாட்டார்கள்.
ஆகவே, இந்த மாதிரி உயர்ந்த குணம் உள்ள மக்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற வரைமுறை இருக்க வேண்டும் இல்லையா? இவர்களுக்கு ஏதாவது கெடுதல் செஞ்சா, துரோகம் செஞ்சா - அவர்களை ஆண்டவன் தண்டிக்காமல் விடவே மாட்டான். வினை விதைத்தவன் வினை அறுப்பான். இது உறுதி.''
இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
|